லாட்டரி அதிபர் மார்ட்டின் மூலமாக பிரசாந்த் கிஷோர் அதிமுகவுக்காக தேர்தல் பணிகளைச் செய்ய ஒப்பந்தம் செய்ய பேச்சு வார்த்தை நடந்து வந்த நிலையில் இப்போது அந்த பேச்சுவார்த்தை முடிந்து 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு தேர்தல் பணிகள் செய்வதற்காக பிரசாந்த் கிஷோரின் IPAC நிறுவனத்துடன் 240 கோடிக்கு ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், ஆதவ் அர்ஜூனா இந்த ஒப்பந்தத்தை முடித்துக் கொடுத்திருக்கிறார். அதற்கு பிரதிபலனாக ஆதவ் அர்ஜுனாவை அதிமுகவில் இணைத்துக்கொண்டு அவருக்கு புதிய பொறுப்புகளை வழங்குகிறார் பழனிசாமி.
பிரசாந்த் கிஷோர் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்காக தேர்தல் பணிகள் செய்த போது அந்தக்குழுவில் இருந்தவர் ஆதவ் அர்ஜூனா. லாட்டர் அதிபர் மார்ட்டின் மருமகனான ஆதவ், பிரசாந்த் கிஷோர் தேர்தல் பணிகளை முடித்துக்கொண்டு சென்ற பின்னரும் கூட திமுகவுக்கான வேலைகளை தொடர்ந்திருந்தார் ஆதவ்.
பின்னர் அவர் விசிகவுக்கு வேலை செய்து வந்தார். அதற்காக அவருக்கு கட்சியின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. விசிகவில் நிறைய களப்பணிகளைச் செய்து வந்தாலும் அவர் பேசிய அரசியல் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
‘கூட்டணி ஆட்சியில் அதிகாரம்; அமைச்சரவையில் பங்கு’ என்பது விசிகவின் கொள்கை என்றாலும் கூட, அதை தடாலடியாக ஆதவ் கையில் எடுத்தது கூட்டணியில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. ‘வேங்கைவயல்’ உள்ளிட்ட விவகாரங்களில் திமுகவை தொடர்ந்து ஆதவ் அட்டாக் செய்து வந்தது விசிகவில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியது. அதிலும் தவெக விஜய்யை வைத்துக்கொண்டு திமுகவை கடுமையாஇக அட்டாக் செய்தது, கூட்டணியில் இருந்த விசிகவுக்கு பெரும் தலைவலியாகிப் போக, இதனால் விசிவில் இணைந்து ஆதவ் வெளியேறும்படியாகி விட்டது.
இதையடுத்து அவர் தவெகவில் இணையப்போகிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் அதிமுகவில் இணைய உள்ளார் என்று முடிவாகி இருக்கிறது. அதிமுகவில் இணையப்போகும் நேரத்திலும் கூட திமுக மீதான தனது அட்டாக்கினை தொடரவே செய்கிறார்.
வேங்கைவயல் விவகாரத்தை அவர் மீண்டும் கையில் எடுத்திருக்கிறார். வேங்கை வயல் விவகாரத்தில் தலித் மக்களுக்கு எதிரான விசாரணை அமைப்புகளின் ஒருதலை பட்சமான நடவடிக்கையை எதிர்த்து சட்டரீதியான எனது போராட்டத்தை உடனடியாக துவங்க உள்ளேன் என்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நியாயத்தை நிலைநாட்டும் நீதிக்கான பயணத்தை அந்த மக்களுடன் இணைந்து நான் உடனடியாக மேற்கொள்வேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான நீதி கிடைக்கும் வரை நான் ஓயப்போவதில்லை என்கிறார்.
இது ஒருபுறமிருக்க, அதிமுகவில் ஆதவ் இணைப்புக்கான நாள் குறித்து அதற்காக வேலைகளும் ஒருப்பக்கம் நடந்துகொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஜனவரி 31ஆம் தேதி அன்று கோவை மாவட்டத்தில் இருந்து இந்த பயணத்தை தொடங்குகிறார். அன்றைய தினமே ஆதவ் அதிமுகவில் இணைகிறார்.
உதயநிதி ஸ்டாலின் திமுகவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இருப்பதால், அவர் வகிப்பது மாதிரியே அதிமுகவிலும் தனக்கு பொறுப்பு வேண்டும் என்று கேட்க, பழனிசாமியும் அதற்கு கிரீன் சிக்னல் கொடுக்க, ஆதவ்க்கு அதிமுகவில் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு பொறுப்பாளர் பதவி வழங்கப்பட உள்ளது.
தலைமையை மீறி செயல்பட்டதால்தான் விசிகவில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. இப்போது அதிமுகவில் இணைந்தாலும் வேங்கைவயல் விவகாரத்தில் ஓயப்போவதில்லை என்று சொல்வதன் மூலம் அதிமுகவுக்கும் குடைச்சலைக் கொடுக்க தயாராகிவிட்டார் ஆதவ் என்றே தெரிகிறது.