மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் அந்நாட்டு ராணுவத்திற்கும், ருவாண்டோ ஆதரவு பெற்ற கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே பல ஆண்டாக மோதல் நிலவி வருகிறது. கனிம வளம் மிகுந்த காங்கோவின் கோமா (Goma) பிராந்தியத்தை கைப்பற்ற சுமார் 100 கிளர்ச்சிப்படைகள் அரசுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றன. இதில், அண்டை நாடான ருவாண்டோவின் ஆதரவு பெற்ற M23 கிளர்ச்சிப் படை சமீப நாட்களாக தனது தாக்குதலை தீவிரப்படுத்தியது.
கோமா பிராந்தியத்தை கைப்பற்றி விட்டதாக M23 கிளர்ச்சிப் படை நேற்று அறிவித்தது. காங்கோவின் சில ராணுவ வீரர்கள் துப்பாக்கிகளை ஒப்படைத்துவிட்டு சரணடைந்துள்ளனர். இரு நாடுகள் இடையே போர் மூளும் அபாயம் இருப்பதால் கோமா மக்கள் பாதுகாப்பான இடம் தேடி நகரை விட்டு வெளியேறி வருகின்றனர்.
சிலர் ருவாண்டோவில் தஞ்சமடையவும் முயற்சிக்கின்றனர். சுமார் 20 லட்சம் மக்கள் வசிக்கும் நகரை கிளர்ச்சிப்படை கைப்பற்றியிருப்பது நிலைமையை மிக மோசமாக்கி இருப்பதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது.
வீடியோ: கோமாவில் M23 கிளர்ச்சிக் குழுவுடன் ஐநா அமைதி காக்கும் படையினர் மிகக் கடுமையான மோதலில் ஈடுபட்டுள்ளனர்
South African peacekeepers in Goma in very heavy clash with Congo's #M23 rebels.#M23Rebels #Goma #Congo #DRCongo https://t.co/L2Wgs1dsxu pic.twitter.com/UzS1GAfbhN
— MOHAMMAD AHSAN🎗️ (@MOHAMMAD_AARSH) January 28, 2025
போருக்கான முக்கிய காரணங்கள் என்ன?
வரலாற்று பின்னணி: கடந்த 1994-ல் ருவாண்டோ இனப்படுகொலையின் போது, ஊட்டு இனத்தைச் சேர்ந்த ‘ஊட்டு சக்தி இயக்கம்’ லட்சக்கணக்கான சிறுபான்மையின துட்சிகளை கொன்று குவித்தது.
துட்சி இனத்தின் ருவாண்டோ தேசபக்த முன்னணியினர் (RPF), ஊட்டு சக்தி இயக்கத்தினரை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றியதற்குப் பிறகு, இனப்படுகொலை முடிவுக்கு வந்தது.
இனப்படுகொலை முடிவுற்றது முதல் இப்போது வரை சிறுபான்மையின துட்சி இனத்தவரின் RPF முன்னணியினர் தான் ருவாண்டோவை ‘ஒற்றைக் கட்சி’ முறையில் ஆட்சி செய்து வருகின்றனர்.
இனப்படுகொலைக்குப் பிறகு, பல ஊட்டு இன குற்றவாளிகள் கிழக்கு காங்கோ நாட்டிற்கு தப்பியோடி இருந்தனர், இதன் காரணமாகவே காங்கோ மற்றும் ருவாண்டோ நாடுகளுக்கு இடையிலான தொடர்ச்சியான பதட்டங்களுக்கு வழிவகுத்தது.
வளங்களின் கட்டுப்பாடு: கிழக்கு காங்கோவில் தங்கம், கோல்டான் மற்றும் வைரங்கள் போன்ற இயற்கை வளங்கள் அதிகம் உள்ளது. இந்த வளங்களைக் கட்டுப்படுத்துவது மோதலுக்கான ஒரு முக்கிய காரணியாகும், ருவாண்டோ ஆதரவு பெற்ற பல்வேறு குழுக்கள் இவற்றைப் பயன்படுத்த முயற்சிக்கின்றன.
இன உறவுகள் மற்றும் கிளர்ச்சிக் குழுக்கள்: கிழக்கு காங்கோவில் குறிப்பாக கோமா பிராந்தியத்தில் உள்ள M23 இயக்கம் போன்ற கிளர்ச்சிக் குழுக்களை ருவாண்டோ அரசு ஆதரித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது, அந்த குழு முக்கியமாக துட்சி இனத்தவர்களைக் கொண்டுள்ளது. காங்கோவில் உள்ள துட்சி மக்களை அந்த கிளர்ச்சிக் குழு துன்புறுத்தலில் இருந்து பாதுகாத்து வருவதாக ருவாண்டோ அரசு வாதிடுகிறது.
பாதுகாப்பு கவலைகள்: கிழக்கு காங்கோவில் Democratic Forces for the Liberation of Rwanda (FDLR) என்ற ஊட்டு இன கிளர்ச்சிக் குழு செயல்பட்டு வருவது குறித்து ருவாண்டோ அரசு கவலை தெரிவித்து வருகிறது. இந்த FDLR கிளர்ச்சிக் குழு ருவாண்டாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படுகிறது.
அரசியல் செல்வாக்கு: ருவாண்டோ தனது பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை உறுதிப்படுத்த காங்கோவின் கோமா பிராந்தியத்தில் செல்வாக்கை பராமரிக்க முயற்சிக்கிறது. இது காங்கோவில் நடக்கும் சட்டவிரோத செயல்பாடுகளில் ருவாண்டோ அரசின் ஈடுபாடுகள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கிறது.
காங்கோ நாட்டின் கோமாவில் நடைபெற்று வரும் தற்போதைய தாக்குதல் சம்பவங்களில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 370 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நான் பாலா ஐ. நா. தலைவர்.. போரை கைவிட்டு அமைதி க்கு திரும்ப சொல்லுங்க…