விஜய் அரசியலுக்கு வந்திருப்பதால் எந்தக் கட்சிக்கு பாதிப்பு, ஆளுங்கட்சிக்கு சவாலாக இருப்பாரா என்று ஊடக விவாதங்கள் நடந்தன. இப்போது விஜய்யுடன் ஆதவ் அர்ஜூன் இணைகிறார். அதனால் என்னென்ன தாக்கங்கள் ஏற்படும் என்று விவாதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஊடகத்தின் செய்திப் பசிக்கு 24 மணி நேரமும் தீனி வேண்டும். அதனால், அவர் வந்தால் என்னவாகும், இவர் வந்தால் என்னவாகும் என்று இனி விவாதங்கள் தொடரும். எதுவாக இருந்தாலும், “நான் என்ன சொல்றேன்னா…”, “இதை நாம எப்படி பார்க்கணும்னா…” என்று விவாதத்தில் பங்கேற்பவர்கள் தங்களின் உலக நியாயங்களையெல்லாம் முன்வைப்பார்கள். அதிலும், தன்னுடைய கருத்து மட்டுமே நியாயம் என்று ஒற்றைக் காலில் நிற்பார்கள். விவாதத்தில் பங்கேற்கின்ற எல்லாருமே ஒற்றைக் காலில் நிற்பவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இருப்பதால், மல்யுத்தத்தை ரசிக்கின்ற மனோபாவத்துடன் அரசியல் ரசிகர்கள் அன்றாடம் டி.வி. முன்பு உட்கார்ந்திருப்பார்கள்.
விவாதங்கள் இப்படியென்றால் பிரஸ் மீட்கள் எனப்படும் செய்தியாளர் சந்திப்புகள் இன்னொரு ரகம். மைக்கும் கேமராவுமாக வருபவர்கள் பலரும் இளம் செய்தியாளர்கள். விஷூவல் கம்யூனிகேஷன் படித்து முடித்ததும் இன்டர்ன்ஷிப்புக்காக வந்தவர்களை, அதிக சம்பளமின்றி வேலை வாங்கும் திறமை ஊடக நிறுவனத்திடம் உண்டு. செய்தி சேகரிப்பிற்கான எந்தப் பயிற்சியும் கிடையாது. இவர்களை ரிப்போர்ட்டர்கள் என்று சொல்வதைவிட, போர்ட்டர்கள் என்று சொல்லலாம். அதாவது, பிரஸ் மீட்டில் பேசுகிறவர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே பதிவு செய்து கொண்டு, உடனடியாக தங்கள் செய்தி சேனலுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடுத்த சேனலின் செய்தியாளருக்கு முன் தன்னுடைய சேனலுக்கு அனுப்பி வைக்காவிட்டால் மெமோ வரும் என்பதால், பதிவு செய்த பேட்டி பைசாவுக்கு பிரயோஜனப்படுமா என்பது பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலையில்லை. கன்டென்ட் கொடுக்க யாராவது ஓர் ஆள் கிடைத்தால் போதும்.
முன்பு, ஜெயக்குமார் என்ற அமைச்சர் இருந்தார். உலகத்தில் நடக்கும் அத்தனைக்கும் அவர்தான் கருத்து கந்தசாமி. அவர் வரும் இடத்தில் அத்தனை கேமராவையும் ஸ்டாண்ட் போட்டு வைத்துவிடுவார்கள். அவர் பேசுவதையெல்லாம் ஒளிபரப்புவார்கள். தி.மு.க.வைப் பற்றி, பா.ஜ.க.வைப் பறிறி, கம்யூனிஸ்ட்டுகளைப் பற்றி, காங்கிரசைப் பற்றி, அமெரிக்காவின் குடியரசு கட்சி-ஜனநாயக கட்சி பற்றியெல்லாம் அவர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே டி.வி.யில் பார்க்கலாம். ஆனால், அவர் ஏரியாவின் மெயின் ரோடு பற்றியோ, அதன் சந்து பொந்துகள் பற்றியோ எந்தக் கேள்வியும் கேட்க மாட்டார்கள்.
இப்போது சீமான் அவர்களுக்கு கன்டன்ட் சப்ளையர். அதிலும் நவரச பாவங்களுடன் அவர் சொல்வதையெல்லாம் நவத்துவாரங்களையும் பொத்திக் கொண்டு சேனல்காரர்கள் கேட்பார்கள். போதாக்குறைக்கு யூடியூபர்களும் இருப்பார்கள். பிரஸ் மீட்டுக்கு வரும்போதே, “சீமான் போட்ட போடு. தெறித்து ஓடிய காளியம்மா”, “சீமான் கிளப்பிய புயல். பரமக்குடியில் ஒளிந்த வங்கக் கடல்” என்று டைட்டில்களை ரெடி செய்து கொண்டேதான் வருவார்கள். செய்தியாளர் சந்திப்பு என்ற பெயர் இருந்தாலும், செய்தியாளர்கள் கேள்வி கேட்பது அரிது. அப்படியே அவர்கள் கேட்கும் மென்மையான கேள்விகளுக்கு கூட, சீமான் ஆவேசமான குரலில் பதில் சொல்வார். ஆஹா.. நாம் எதிர்பார்த்த டைட்டில் கிடைத்துவிட்டது என்று செய்தியாளர்களுக்கு உற்சாகம் பிறந்துவிடும். பீப் வார்த்தைகளில் சீமான் பேசுவதையும்கூட ஊடகங்கள் நேரலையில் ஒளிபரப்பும்.
சீமான் தன்னுடைய அப்பாக்களைப் பற்றிப் பேசுவார். அப்புறம் எங்க அய்யா என்று மறைந்த தலைவர்கள் சிலரைக் குறிப்பிடுவார். அதன்பிறகு அவன்..இவன் என்று நாடறிந்த தலைவர்களைக் கொச்சையாகப் பேசுவார். நான்தானா திட்டுறேன்? அவரை இவர் திட்டலையா, இவரை அவர் திட்டலையா? என்று செய்தியாளர்களிடம் சீறுவார்.
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் ஒரு தலைவர் இன்னொரு தலைவரைப் பேசினார் என்றால் அது தொடர்பாக அந்த சமயத்திலேயே இரு தரப்பின் பதில்களும் விளக்கங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதை சீமான் பேசவே மாட்டார். எதிரில் நிற்கின்ற செய்தியாளர்கள் சீமான் சொல்வதை அமைதியாக கேட்டபடி நிற்பார்கள். அவர்களுக்கு வரலாறும் தெரியாது. கேள்வி கேட்கவும் வராது.
இறந்து போன தலைவர்களுடன் நான் அப்படி இருந்தேன், இப்படி இருந்தேன் என்று நம்பமுடியாததை சொல்பவராகவும், அவர் என்ன அதுவா-இவர் என்ன இதுவா என்று அடிப்படை ஆதாரமோ அரசியல் நாணயமோ இல்லாமல் பேசுபவராகவும் இருக்கிறார். இதுபோல இன்னும் பல கேரக்டர்களை அடுத்த ஓராண்டுக்கு எதிர்பார்க்கலாம்.
டி.வி.யில் சீரியல், காமெடி எல்லாம் பார்க்கமாட்டேன். ஒன்லி அரசியல் விவாதங்களும் பேட்டிகளும்தான் என்கிற சீரியஸான ஆசாமியா நீங்கள். உங்களுக்குத்தான் செய்திச் சேனல்களின் சீரியல்களும் காமெடிகளும் காத்திருக்கின்றன. ரசியுங்கள்.