சபரிமலைக்கு மாலை அணிந்து விரதமிருந்து செல்லும் இந்து பக்தர்கள் வாபர் மசூதியையும் வணங்கிவிட்டு செல்வது வழக்கம். நவக்கிரக தலங்களை தரிசிப்பதற்காக காவிரிப் படுகை மாவட்டங்களுக்கு செல்லும் பக்தர்கள் கிறித்தவத் தலமான வேளாங்கண்ணிக்கும், முஸ்லிம்கள் தலமான நாகூர் தர்காவுக்கும் இப்போதும் செல்கிறார்கள். மதுரை சித்திரைத் திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கி தாகம் தணிக்கிறார்கள் முஸ்லிம்கள். சர்ச் வாசலில் பொங்கல் வைத்து தமிழர் திருநாளின் சமத்துவத்தை உணர்த்துகிறார்கள் கிறிஸ்தவர்கள். இதுதான் தமிழ்நாடு. இந்தத் தமிழ்நாட்டை உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போல மாற்றி, மணிப்பூர் போல பற்றி எரிய வைக்க வேண்டும் என மதவெறி அரசியல் சக்திகள் திட்டமிடுகின்றன.
மதுரை திருப்பரங்குன்றம் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று. அந்த மலையில் சிக்கந்தர் தர்கா என்ற முஸ்லிம்களின் தலமும் உள்ளது. அடிவாரத்திலிருந்து தர்காவுக்கு செல்ல தனிப்பாதை உள்ளது. முருக பக்தர்கள் தங்கள் வழக்கப்படி பாலாபிஷேகம் செய்து, சர்க்கரைப் பொங்கல் செய்து முருகனை வழிபடுவார்கள். முஸ்லிம்கள் தங்கள் வழக்கப்படி சிக்கந்தர் தர்காவில் நேர்த்திக்கடனாக ஆடு, கோழி ஆகியவற்றைப் பலியிட்டு, ஊண்சோறு செய்வார்கள். முஸ்லிம்கள் செய்த கறிசோற்றை இந்து பக்தர்களும், இந்துக்கள் செய்த அபிஷேகப் பாலை முஸ்லிம்களும் வாங்கிக் கொள்வார்கள். இந்த வழக்கம் பல நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது. இப்படி ஒரு நல்லிணக்கமான வழக்கம் தொடர்ந்தால் எப்படி மதவெறி அரசியல் செய்வது?
முருக பக்தர்களான இந்துக்களை அவமதிக்கும் வகையில் திருப்பரங்குன்றம் மலையில் அசைவம் சமைக்கிறார்கள் என்றும், இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிராக மாடுகளை வெட்டுகிறார்கள் என்றும், திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலையாக்கப் பார்க்கிறார்கள் என்றும் கடந்த சில ஆண்டுகளாக பா.ஜ.க.வும் அதன் நிழலில் உள்ள இந்து அமைப்புகளும் சர்ச்சைகளை உருவாக்கி வந்த நிலையில், அண்மையில் நேர்த்திக்கடனுக்காக ஆடு-கோழியை எடுத்துச் சென்ற முஸ்லிம் ஒருவரை காவல்துறை தடுத்ததும், வக்ஃபு வாரியத் தலைவரான நவாஸ்கனி எம்.பி. மலைப் பகுதியில் கறிவிருந்து பரிமாறியதும் இந்து-முஸ்லிம் இருதரப்பிலும் உள்ள அரசியல் சக்திகளால் பெரிதாக்கப்பட்டு, பிரச்சினைக்கு வழிவகுத்தது. திருப்பரங்குன்றம் மலையை மீட்கப்போவதாக இந்து அமைப்புகள் போராட்ட அறிவிப்பு வெளியிட, மாவட்ட நிர்வாகம் மதுரையில் 144 தடையுத்தரவு விதித்தது.
இதை எதிர்த்து இந்து அமைப்புகள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில், திருப்பரங்குன்றத்திற்குப் பதில் பழங்காநத்தத்தில் போராட்டம் நடத்த அனுமதித்து உத்தரவிட்டது நீதிமன்றம். பத்தாயிரம் பேர் அளவில் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். தடையை மீறி பக்தர்கள் என்ற பெயரில் கோயிலுக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்த இந்து அமைப்பினரும் உண்டு. எல்லாவற்றையும் பொறுமையாகக் கையாண்டு எவ்வித அசம்பாவிதமும் நேராமல் ஆர்ப்பாட்ட நாளை அமைதி நாளாக்கியது காவல்துறை. எனினும், இரு மதத்தினர் இணக்கமாக வாழும் இடத்தில் திட்டமிட்டு அரசியல் செய்யும் சக்திகளுக்கு அமைந்த வாய்ப்பும், திரண்ட கூட்டமும் திராவிட மாடல் அரசு என்று சொல்லும் தி.மு.க. அரசின் மதநல்லிணக்க கொள்கைகள் மீதான விமர்சனமாக முன் வைக்கப்படுகிறது.
காவல்துறையில் மதக்கண்ணோட்டத்துடன் செயல்படும் உயரதிகாரிகள் முதல் உள்ளூர்க் காவலர்கள் வரை பலர் இருக்கிறார்கள். உளவுத்துறையின் கணிப்புகள் பிரச்சினையின் முழுத்தன்மையை அரசின் தலைமைக்கு உணர்த்தக்கூடியதாக இல்லை. மாவட்டத்தில் கட்சிப் பொறுப்பு வகிக்கும் தி.மு.க நிர்வாகிகள் இதுபோன்ற பிரச்சினைகளில் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி விடுகிறார்கள். உள்ளூர்வாசிகளோ தங்களின் அமைதியான வாழ்க்கைக்கு மதவெறி அரசியல்வாதிகளால் ஆபத்து வருமோ, திருப்பரங்குன்றம் இன்னொரு அயோத்தியாகிவிடுமோ என்று அச்சப்படுகிறார்கள். இந்த அச்சத்தைப் போக்கி, அமைதியை நிலைநாட்ட வேண்டிய கடமை தமிழ்நாடு முதலமைச்சருக்கும் அவரது தலைமையிலான தி.மு.க. அரசுக்கும் இருக்கிறது.
மசூதிகளையும் பள்ளிவாசல்களையும் குறிவைத்து மதவாத அரசியல் நடத்தும் பா.ஜ.க. மற்றும் அதன் மதவெறி அமைப்புகளுக்கு கடிவாளம் போடும் வகையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனை நடைமுறைப்படுத்தும் வகையிலும், திருப்பரங்குன்றத்தில் இரு மதத்தினரும் காலம் காலமாக இணக்கமாக இருப்பதையும், அங்கு கடைப்பிடிக்கப்படும் மரபுகளையும் வல்லுநர் குழு அறிக்கை மூலம் உறுதிசெய்து நீதிமன்றங்களில் தாக்கல் செய்தும் மதவாத அரசியல் நுழைய முடியாதபடி தடுக்க வேண்டும். காவல்துறையிலும் அரசு நிர்வாகத்திலும் காக்கி அரைடவுசர் மனப்பான்மையுடன் செயல்படுபவர்களை இனியும் அடையாளம் கண்டு களையெடுக்காவிட்டால் ஆட்சியின் நோக்கம் முற்றிலும் சிதைந்துவிடும் அபாயம் உள்ளது.