
தலைமைக்கு எதிரானவர்கள் தாங்களாகவே வெளியேறும்படியான நிலையை உருவாக்கி வருகிறார் விஜய் என்கிறது தவெக வட்டாரம். அதற்கேற்றார் போல்தான் அய்யநாதன் வெளியேறினார். அடுத்த விக்கெட் ஜான் ஆரோக்கியசாமி என்கிறது அந்த வட்டாரத் தகவல்.
களங்கம் : தவெகவின் கொள்கைத்தலைவர் பெரியார் என்பதால் அந்த பெரியாருக்கு எதிராக பேசும் சீமானைக் கண்டித்து அறிக்கை விட வேண்டும், அரிட்டாபட்டி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை விட வேண்டும், அதிமுகவுடன் தவெக கூட்டணி அமைக்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு விசயங்களில் தலைமையின் முடிவுக்கு எதிராக இருந்து விஜய்க்கு நெருக்கடி கொடுத்த வந்த அய்யநாதன், தானாகவே கட்சியை விட்டு வெளியேறும்படி கட்சியில் அவருக்கான முக்கியத்துவத்தை குறைத்தார் விஜய்.
அதன்படியே தவெகவில் இருந்து தானாகவே வெளியேறிவிட்டார் அய்யநாதன். அதுமாதிரி, என்னதான் கட்சிக்குள் பல்வேறு பிரச்சனைகள் இருந்தாலும் அதை எல்லாம் தலைமையிடம் பேசித் தீர்க்க வேண்டும் என்றுதான் நினைக்க வேண்டுமே தவிர, உட்கட்சி மோதல்களை ஆடியோ மூலம் உலகிற்கு தெரியவைத்து, கட்சிக்கு களங்கம் விளைவித்துவிட்டு ஆடியோ மூலம் கட்சியை ஒழுங்குபடுத்துகிறேன் என்று நினைத்தார் ஜான் ஆரோக்கியசாமி. இதை விஜய் விரும்பவில்லை.

எரிச்சல்: விசிகவை விட்டு வெளியேறியதும் தவெகவில் இணைந்துவிடலாம் என்று நினைத்திருந்த ஆதவ்க்கு முதலில் கிரீன் சிக்னல் கொடுக்காமலேயே இழுத்தடித்தார் விஜய். இதனால் தனிக்கட்சி முடிவுக்கு ஆதவ் சென்றபோதும், கொஞ்சம் பொறுமையாக இருங்க என்று சொல்லி காத்திருப்பு பட்டியலில் இருக்க வைத்தார். ஜான் ஆரோக்கியசாமியின் அடுத்தடுத்த ஆடியோக்கள் தந்த எரிச்சலால் ஆதவ் அர்ஜூனாவை உள்ளே கொண்டுவந்துவிடலாம். ஒருவரை மட்டுமே நம்பி இருந்தால் இப்படித்தான் அதிகப்பிரசங்கித்தனம் நடக்கும் என்று விஜய்க்கு அறிவுறுத்தி உள்ளனர் அவரது நலன் விரும்பிகள்.
இந்த நிலையில்தான் ஜான் ஆரோக்கியசாமியின் முக்கியத்துவத்தை குறைக்க ஆதவ் அர்ஜூனாவை உள்ளே கொண்டு வந்தார் விஜய். இதுவே ஜான் ஆரோக்கியசாமிக்கு நெருக்கடி என்றால், அடுத்து ஆதவ் அர்ஜூனா மூலமாக பிரசாந்த் கிஷோர் தவெகவுக்கு வந்துள்ளார்.
ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி இருவருமே பிரசாந்த் கிஷோர் டீமில் வேலை செய்தவர்கள்தான். ஆனாலும் தவெகவில் தனி ஆளாக இருந்த ஜான் ஆரோக்கியசாமி, இப்போது பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜூன் என்று வந்துவிட்டதால் தனக்கான முக்கியத்துவத்தை இழந்து நிற்கிறார். ஒருகட்டத்தில் அவராகவே வெளியேறிடுவார். அதாவது வெளியேறும் நிலைக்கு தள்ளப்படுவார் என்கிறது தவெக வட்டாரம்.

குமுறல்: இது ஒருபுறமிருக்க, மன்றத்திற்காக, கட்சிக்காக பல காலமாக போஸ்டர் ஒட்டியவர்கள் பலர் இருக்கும் போது கட்சிக்கு அதிகம் உழைக்காதவர்களுக்கும், குற்றவழக்கு பின்னணியில் உள்ளவர்களுக்கும் மா.செ. பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக பல மாவட்டங்களில் குமுறல் எழுந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த குமுறல் அதிகமாக உள்ளது.
அதிருப்தியில் உள்ளவர்கள் நீலாங்கரையில் விஜய் வீட்டின் முன்பு தீக்குளிப்பு போராட்டம் நடத்தப் போவதாகவும் தகவல் வர, அவர்களை இப்போதைக்கு சமாதானப்படுத்தி இருக்கிறாராம் புஸ்ஸி ஆனந்த்.
நிராகரிப்பு : பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி போன்றோரை வைத்து மேல்மட்டத்தை பலப்படுத்தும் விஜய், கட்சியின் அடிமட்டத்தை பலப்படுத்தாமல் அலட்சியம் காட்டி வருகிறார். அதனால்தான் தவெகவின் மா.செ.க்கள் பலரும் பலம் வாய்ந்தவர்களாக இல்லை. அதனால் இவர்களை எல்லாம் வழிநடத்த மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற குரல் எழுந்திருக்கிறது தவெகவில்.
விஜய்யிடம் 27 வருடங்கள் மக்கள் தொடர்பாளராக இருந்த பி.டி.செல்வகுமார் தற்போது குமரி மாவட்டத்தில் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ தொடங்கி சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். குமரி மட்டுமல்லாது நெல்லை, தூத்துக்குடி தவெகவினரிடையேயும் அவருக்கு செல்வாக்கு உள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சுடு சம்பவத்திலும், மதுரை ரசிகர் தற்கொலையின் போது விஜய்யை நேரில் அழைத்துச்சென்று பாதிக்கப்பட்டோரை சந்திக்க வைத்தவர் பி.டி.எஸ். விஜய் பற்றியும் விஜய்யின் ரசிகர்கள் பற்றியும் நன்கு அறிந்த அவரை தவெக தென் மண்டல பொறுப்பாளராக நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் குமரி தவெகவினரிடையே வலுத்து வருகிறது. 10 பிரசாந்த் கிஷோருக்கு சமம் பி.டி.எஸ். அவரையே தென் மண்டல பொறுப்பாளராக நியமனம் செய்ய வேண்டும் சொல்லி, அது தொடர்பாக புஸ்ஸி ஆனந்துக்கு பலமுறை அவர்கள் கடிதம் அனுப்பியும் பதிலேதும் இல்லையாம்.
தீக்குளிப்பு போராட்டம் : இந்த விவகாரம் இன்னமும் விஜய் காதுக்கு போகவில்லை. அதிரடியான போராட்டங்கள் மூலம்தான் விஜய்யின் கவனத்திற்கு தெரியவரும் என்பதால்தான் தீக்குளிப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர் என்கிறது தவெக வட்டாரம்.