
மகாகவி பாரதியார் காணி நிலம் வேண்டும் என பராசக்தியிடம் கேட்டார். ஏழை-எளியவர்கள் தாங்கள் குடியிருக்க வேண்டிய அளவுக்கு ஒரு நிலம் வேண்டும் என்பதைத்தான் காலம் காலமாகக் கேட்டு வருகின்றனர். பராசக்தி படத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதிய கலைஞர் மு.கருணாநிதி அந்தப் படத்தில், ஒரு குடிசைகூட இல்லாமல் தவிக்கும் குடும்பத்தின் அவல நிலையை எடுத்துக் காட்டியிருப்பார். பிறகு, அவர் ஆட்சிக்கு வந்தபோது, குடியிருப்போருக்கே அந்த மனையை சொந்தமாக்கும் வகையில், தமிழ்நாடு குடியிருப்பு அனுபோகதாரர்கள் சட்டம் கொண்டு வந்தார். விவசாயிகள் உள்ளிட்ட ஏழை மக்கள் 1 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு வீட்டு மனை கிடைத்தது. இது நடந்து 50 ஆண்டுகளாகிவிட்டன. தற்போதைய நிலை என்ன?
கடந்த மூன்றாண்டுகளில் 10 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு பட்டா வழஙகப்பட்டிருப்பதாக வருவாய்த் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்னும் 6 மாத காலத்திற்குள்ளாக 6 லட்சத்து 29 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என்று பிப்ரவரி 10ந் தேதியன்று தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, ‘பெல்ட் ஏரியா’ எனப்படும் சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டார நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியில், ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் 29ஆயிரத்து 187 பேருக்கு பட்டா கிடைக்க வழிவகை செய்யப்படும் என அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நெல்லை உள்ளிட்ட பிற மாவட்டங்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் மொத்தம் 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க வேண்டும். இதனை 6 மாதத்தில் நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சர் அறிவித்திருப்பது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலத்தில் 50, 60 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மக்கள் பலவிதமான வரிகளை செலுத்தி வந்தாலும், அவர்களுக்கு அந்த இடத்திற்கான உரிமை எதுவும் கிடையாது. அந்த இடத்தின் பேரில் கடன் பெற முடியாது. வாடகைக்கு விடுவது உள்ளிட்ட எந்தவொரு முயற்சியாக இருந்தாலும் முழுமையாக சாத்தியப்படாது. சட்டச் சிக்கல்கள் எழும். எனவே, தங்களுடைய இடங்களுக்கு பட்டா கிடைத்தால், உரிமையுடன் வாழ முடியும் என்பதே அந்த மக்களின் கோரிக்கை. 1962ஆம் ஆண்டு முதல் நீடிக்கக்கூடிய இந்தப் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு காண வேண்டும் என அமைச்சரவை முடிவெடுத்திருப்பது நல்ல அம்சம். மகன் அல்லது மகளின் திருமணம், வேலைவாய்ப்புக்கு பணம் தேவைப்படுகிறது என்றால் பட்டா நிலமாக இருநதால் கடன் பெற முடியும். நிலத்தின் மீதான உரிமையும் கிடைக்கும்.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் பலரும் நீண்டகாலமாக எதிர்பார்த்திருக்கும் மனைப் பட்டா விவகாரத்திற்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்களிடம் காண முடிகிறது. அரசுத் தரப்பில் 6 மாதத்திற்குள்ளாக இதற்கான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு, உரியவர்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டால் தங்கள் வாழ்நாள் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக மக்கள் கருதுவார்கள்.
அரசு மூலமாக வீட்டு மனைப் பட்டா விரைந்து கிடைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பது போலவே, அரசாங்கப் பணிகளில் உள்ள காலியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்களிடமிருந்து தொடர்ந்த வெளிப்பட்டு வருகிறது. நீண்டகாலமாக தற்காலிகப் பணியாளர்களாக இருக்கும் ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களை நிரந்தரமாக்குவதாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் பயன் பெறக் கூடியவர்களின் குடும்பத்தினர் நிம்மதிப் பெருமூச்சு விடுவதைக் காண முடிகிறது.
பள்ளிக்கல்வித் துறை போலவே உயர்கல்வித் துறையில் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான காலியிடங்கள் ஒரு மாமாங்கமாக காலியாக உள்ளது. கௌரவ விரிவுரையாளர்களைக் கொண்டே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த கௌரவ விரிவுரையாளர்களுக்கும் மற்ற மாநிலங்களைப் போல ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்த ஊதியத்தை வழங்கவில்லை என்றும் கோரி தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
மின்வாரியத்தில் மீட்டர் ரீடிங் எடுக்கின்ற பணி தொடங்கி உயர்பதவிகள் வரை ஆயிரக்கணக்கான இடங்கள் காலியாக இருப்பதை எதிர்க்கட்சிகள் புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டுகின்றன. மருத்துவத்துறையில் டாக்டர்கள், நர்ஸ்கள் தொடங்கி பல்வேறு மருத்துவ ஊழியர்களுக்கான இடங்கள் காலியாகவோ, தற்காலிகப் பணியாளர்களைக் கொண்டோ சமாளிக்கப்படுகின்றன. போக்குவரத்து துறையிலும் இந்த நிலை நீடிக்கிறது. இது பணியில் இருப்பவர்களுக்கு கூடுதல் சுமையை உண்டாக்கி, நிர்வாகத்திறனை வீணடிக்கிறது.
பட்டாக்களில் செலுத்தப்படும் கவனம் பணியிடங்களை நிரப்புவதிலும் தேவை.