
’மயிலே மயிலே என்றால் இறகு போடாது’ என்கிற கதையாகத்தான் ஆகிவிட்டது எடப்பாடி விவகாரம். ஒன்றுபட்ட அதிமுக வேண்டும் என்று கோரிக்கை வைத்து சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் எவ்வளவோ பேசிப்பார்த்தும் பிரயோசனம் இல்லை என்பதால் , எடப்பாடியை வெளியேற்றிவிட்டு செங்கோட்டையனை உட்கார வைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
ஒன்றுபட்ட அதிமுகதான் தங்களுக்கு சாதகமானது என்பதால் இதன் பின்னணியில் பாஜக இருக்கிறது என்று குற்றம் சாட்டுகின்றனர் எடப்பாடி தரப்பினர்.
கட்சிக்காக ஆரம்பத்தில் இருந்து உழைத்தவர்களை வெளியேற்றிவிட்டு இடையில் வந்தவருக்கு ஏன் இத்தனை பிடிவாதம்? என்று எடப்பாடிக்கு எதிராக அணி திரள்கின்றனர் அவரால் ஓரங்கட்டப்பட்டவர்கள்.

வரும் 24ம் தேதி அன்று ஜெயலலிதாவின் பிறந்த நாளின்போது சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்த செய்தி வரவேண்டும். அப்படி செய்தி வராவிட்டால் செங்கோட்டையனை அதிமுக பொதுச்செயலாளர் ஆக்கி அதிமுக சின்னம் அவருக்கு கிடைக்கும்படி செய்யுங்கள் என்று உத்தரவு போட்டிருக்கிறது பாஜக தலைமை என்கிறார்கள் எடப்பாடி தரப்பினர்.
இனிமேலும் எடப்பாடி மனம் மாறுவார் என்கிற நம்பிக்கை இல்லாததால் செங்கோட்டையன் அதிமுகவுக்கு தலைமையேற்பதற்கான வேலைகளைச் செய்து வருகிறார்கள் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தரப்பினர் என்கிறது எம்.ஜி.ஆர். மாளிகை வட்டாரம்.
இதனால்தான், ‘’ ஆறு மாதங்கள் பொறுமையாக இருங்க. அதற்குள் எடப்பாடியாரிடம் பேசி கட்சிக்குள் தங்களை சேர்த்துக் கொள்கிறோம்’’ என்று சொல்கிறார் ராஜன் செல்லப்பா.

ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை பற்றி கேள்வி கேட்கும் போதெல்லாம், ‘துரோகி’, அவர்களுக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமில்லை என்று கடுமையாக பேசி வந்த செல்லூர் ராஜு, அதிமுகவில் தலைமை மாற்றமா? என்ற கேள்விக்கு, ‘’அண்ணன் ஓபிஎஸ், டிடிவி சார்..’’ என்று என்று பதில் சொல்கிறார்.
செல்லூர் ராஜூவின் இந்த தலைகீழ் மாற்றம் ஓபிஎஸ் வட்டாரத்தில் பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.

கூவத்தூரில் எடப்பாடியை முதலமைச்சராக்குவற்காக பல நூறு கோடிகளை கொடுத்து எம்.எல்.ஏக்கள் வாங்கப்பட்டதாக சொல்லப்படும் நிலையில், செங்கோட்டையனை அதிமுக பொதுச்செயலாளர் ஆக்குவதற்காக எடப்பாடி அதிருப்தி எம்.எல்.ஏக்களை விலை பேச தொடங்கியிருக்கிறார்கள். இதற்காக சசிகலாவும் ஓபிஎஸ்சும் 500 கோடி ரூபாய்க்கு மேல் களத்தில் இறக்கியிருக்கிறார்கள் என்று சொல்கிறது எம்.ஜி.ஆர் மாளிகை.
அதிமுகவை ஒருங்கிணைக்கும் பொறுப்பினை முதலில் எஸ்.பி.வேலுமணியிடம் தான் கொடுத்திருக்கிறது பாஜக. அவர் முயற்சிகள் எடுத்தும் எடப்பாடி கொஞ்சம் கூட இறங்கி வராததால்தான் தற்போது செங்கோட்டையனை முன்னிறுத்துகிறது பாஜக என்கிறது மதுரை , கோவை அதிமுக தரப்பு.

பாஜகதான் இதன் பின்னணியில் இருக்கிறது என்பதை எடப்பாடி ஆதரவாளர் கே.பி.முனுசாமியின் பேச்சில் தெளிவாகிறது. திடீரென்று அவர், ’’எந்த அடிப்படையில் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு அளித்திருக்கிறது மத்திய அரசு?’’என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.