
பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தபிறகு, அதனுடன் கூட்டணியில் இருந்த கட்சிகள் விலகியிருக்கின்றன. விலகியிருந்த கட்சிகள் இணைந்திருக்கின்றன. ஆனால், எல்லா தேர்தல்களிலும் அதனுடன் நிரந்தர கூட்டணியாக இருப்பது தேர்தல் ஆணையம் என்ற விமர்சனம் தொடர்ச்சியாக வைக்கப்படும் நிலையில், புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார். நடுராத்திரியில் வெளியான இந்த நியமன அறிவிப்பு, எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியை அளித்திருப்பதுடன், ஜனநாயகம் மீதான மக்களின் நம்பிக்கையையும் தகர்த்திருக்கிறது.
இந்திய தேர்தல் ஆணையமும், அதன் தலைமைத் தேர்தல் ஆணையரும் மத்திய ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதால் தேர்தல் முறையிலான ஜனநாயகம் என்பது கேலிக்கூத்தாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பிரதமர் தலைமையில் முதன்மை எதிர்க்கட்சித் தலைவரையும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியையும் உள்ளடக்கிய ஒரு குழுவின் பரிந்துரை அடிப்படையில் தேர்தல் ஆணையர்களை நியமிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், மோடி அரசு தன்னுடைய புதிய சட்டத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியைத் தவிர்த்துவிட்டு, தனது அரசின் மூத்த அமைச்சரை நியமித்துவிட்டது. இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் காலையில் வரும் சூழலில்தான், மிட்நைட்டில் தலைமைத் தேர்தல் ஆணையரை நியமித்துள்ள மோடியின் பா.ஜ.க. அரசினுடைய ஜனநாயக விரோதப் போக்கை எதிர்க்கட்சிகள் பலவும் சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து, உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் முறையிட்டுள்ளார்.
பிப்ரவரி 19 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடக்கவிருப்பதால், தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்வது தொடர்பான பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்று நபர் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தை அதன்பிறகு நடத்திக்கொள்ளலாம், அதுவரை ஒத்திவைக்கவும் என்று பிப்ரவரி 17 அன்று, மூன்று நபர் குழுவில் இடம்பெற்றுள்ளவரான மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கேட்டுக்கொண்டபோதும், அவரது கோரிக்கையை நிராகரித்து, தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்து அறிவித்துள்ளது மோடியின் அரசு. இது ஜனநாயகத்தையும் நீதியையும் அவமரியாதை செய்யும் செயல் என்றும், மிட்நைட் நியமனத்திற்கான அவசியம் என்னவென்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஞானேஷ்குமார் மத்திய உள்துறையின் கூடுதல் செயலாளராகப் பணியாற்றிய போது, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் விருப்பத்தின்பேரில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370வது அரசியல் சட்டப் பிரிவை நீக்கும் முடிவுக்குத் துணையாக இருந்து, காஷ்மீரில் கவர்னர் ஆட்சி நடைபெற ஒத்துழைத்தவர். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்குவதில் முனைப்பாக இருந்தவர். இந்தத் தகுதிகள் போதாதா, பா.ஜ.க. ஆட்சியினரால் தலைமைத் தேர்தல் ஆணையராகத் தேர்வு செய்யப்பட?
தேர்தல் ஆணையர்கள் ஒரு சார்பு நிலை எடுத்து செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு புதியதல்ல. ஆனால், அதை அப்பட்டமாக செய்யும் போக்கு மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகே நடக்கிறது. எதிர்க்கட்சிகளின் எந்த கோரிக்கையையும் தேர்தல் ஆணையம் மதிப்பதேயில்லை. ஒரே நேரத்தில் தேர்தலை சந்திக்க வேண்டிய மாநிலங்களில் குஜராத்தை தவிர மற்ற மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளை முன்பிருந்த ஒரு தலைமைத் தேர்தல் ஆணையர் வெளியிட்டார். குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி ஏன் அறிவிக்கப்படவில்லை என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பிரதமர் மோடி வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இருப்பதால் அவர் திரும்பி வந்தபிறகு அறிவிக்கப்படும் என்றார். மோடியின் சொந்த மாநிலம் குஜராத் என்பது எல்லாருக்கும் தெரியும். பிரதமருடைய மாநிலத்திற்கானத் தேர்தலை பிரதமர் வந்தபிறகுதான் அறிவிப்போம் என்பதே தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சித்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது.
மகாராஷ்ட்ரா, ஹரியானா, டெல்லி மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு தேர்தல் ஆணையத்தின் பாராமுகமும் பாரபட்சமான அணுகுமுறையும்தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களை தேர்தலுக்கு முன் கொண்டு வந்து வாக்காளர் பட்டியலில் சேர்த்திருப்பதையும், உள்ளூரில் உள்ள எதிர்க்கட்சியினரின் வாக்குகள் நீக்கப்பட்டிருப்பதையும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியதற்கு நியாயமானத் தீர்வு இல்லை.
இந்த நிலையில்தான் மிட்நைட் நியமனத்தின் மூலம் ஞானேஷ்குமார் தலைமைத் தேர்தல் அதிகாரியாகியிருக்கிறார். இவரது பதவிக்காலத்தில்தான் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது.