
திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறது என்ற பேச்சு எழுக் காரணமாகிறது பிரேமலதா விஜயகாந்தின் அண்மைக்கால நடவடிக்கைகள்.
கடந்த 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேமுதிக இவ்வாண்டில் வெள்ளிவிழா கொண்டாடி வருகிறது.
ஒரு காலத்தில் தமிழக அரசியலின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கின்ற சக்தியாக இருந்தது தேமுதிக. எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பெற்றிருந்த தேமுதிக, அதன் பின்னர் சரிவை நோக்கியே பயணித்து வருகிறது. ஆனாலும் தமிழக அரசியலில் தனக்கா இடத்தை தக்க வைத்திருக்கிறது அக்கட்சி.
கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மறைவுக்கு பின்னர் தேமுதிகவின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது என்றே கள ஆய்வுகள் கூறுகின்றன. இதை பயன்படுத்தி அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு தயாராக வேண்டும் என்பதால், வரப்போகும் 2026 சட்டமன்ற தேர்தலில் சரியான கூட்டணியில் இணைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது தேமுதிக.

உட்கட்சி மோதல், உடைந்த அதிமுக, பாஜக அழுத்தம் போன்றவற்றால் அதிமுகவுக்கு ஏகப்பட்ட சிக்கல். இந்த சிக்கலில் நாமும் சிக்கி சின்னாபின்னமாவதா என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த். அதனால், வலுவான கூட்டணியாக இருக்கும் திமுக கூட்டணியில் இணைய இருக்கிறார் என்ற செய்திகள் பரவுகின்றன.
அதற்கேற்றார் போல், இத்தனை காலமும் என்ன நல்ல காரியம் செய்தாலும் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்த பிரேமலதா, இப்போது திமுக அரசை பாராட்ட ஆரம்பித்திருக்கிறார். பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை அறிவித்திருக்கும் திமுக அரசுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்திருக்கும் அவர், விவசாயிகளுக்கு எப்போதும் பாதுகாப்பாகவும், பக்க பலமாகவும் தமிழக அரசு இருக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.
பிரேமலதா விஜயகாந்தின் இந்த மனமாற்றம், திமுக கூட்டணியில் தேமுதிக இணைவதை உறுதிப்படுத்துகிறது என்கின்றனர். அதே நேரம், தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கினால் மனம் மாறி அதிமுக கூட்டணியிலேயே இருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றனர்.