
Representative Image
அடுத்த ஆண்டு தேர்தல் என்பதால் அரசியல் கட்சிகள் அனைத்தும் அதற்கான வியூகங்களின் இறங்கிவிட்டன. இதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தனிக்கட்சி என எந்த வித்தியாசமும் கிடையாது. அந்தந்த கட்சிகளின் வலிமைக்கேற்ப வியூகங்கள் வகுக்கப்பட்டு, அவற்றை செயல்படுத்தும் வேலைகள் தொடங்கியுள்ளன. தேர்தல் களப் பணியில் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்திப்பது என்பதே முதன்மையானதாக இருக்கும். தற்போது அது கடைசி செயல்திட்டம். சமூக வலைத்தள செயல்பாடுகளே தற்போது முதன்மையானதாக உள்ளன. ஆளுங்கட்சி தனது சாதனைகளையும் பயனாளிகளையும் முன்னிறுத்துகிறதென்றால், எதிர்க்கட்சி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. இது சோஷியல் மீடியா யுத்தமாக மாறுகிறது.
தி.மு.க. அரசின் திட்டங்களில் பலவும் மகளிர் நலன் சார்ந்தவையாக இருக்கின்றன. மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமைத் தொகைத் திட்டம், நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லாப் பயணத்தை வழங்கும் விடியல் பயணத் திட்டம், அரசுப் பள்ளி மாணவிகள் உயர்கல்வி கற்பதற்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்டவை நேரடியாகவே பெண்களுக்கானத் திட்டமாக அமைந்திருப்பதுடன், மக்களைத் தேடி மருத்துவம் போன்ற திட்டங்களும் பெருமளவில் பெண்களுக்கு பயனளிக்கக்கூடியனவாக உள்ளன. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் பலவும் தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள் என்ற கோணத்திலேயே அமைந்துள்ளன.
அண்ணா பல்லைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை தொடர்பான வழக்கில், குற்றவாளி யாரோ ஒரு சாரிடம் செல்போனில் பேசினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், “யார் அந்த சார்?” என்பதை அ.தி.மு.க, பா.ஜ.க போன்ற கட்சிகள் ஆளுங்கட்சிக்கு எதிரான பிரச்சார உத்தியாகக் கையில் எடுத்தன. இந்த விவகாரத்தில் புகார் அளிக்கப்பட்ட வேகத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டதும், அதன் தொடர்ச்சியான நடவடிக்கைகளும், வழக்கு விசாரணையின்போது காவல்துறையின் நடவடிக்கைகளை உயர்நீதிமன்றம் பாராட்டியதும், ‘சார்’களின் சத்தத்தைக் குறைக்கச் செய்தது. எனினும், தமிழ்நாட்டின் பல இடங்களிலும் அவ்வப்போது நடைபெறும் பாலியல் தொடர்பான புகார்களைக் கையிலெடுத்து, தி.மு.க ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்ற பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன எதிர்க்கட்சிகள்.
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், தமிழ்நாட்டில் ஒரே நாளில் பல பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன என்ற குற்றச்சாட்டைப் பதிவு செய்து, தி.மு.க. அரசின் மீது குற்றம் சாட்டியுள்ளார். ஊடகங்களில் வெளியான செய்திகளின் படங்களையும் தனது வலைத்தளப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த செய்திப் படங்களிலேயே ஒவ்வொரு பாலியல் புகாரிலும் குற்றவாளிகளைப் போலீசார் கைது செய்திருப்பதும் சேர்த்தே பதிவாகியிருக்கிறது. சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க நினைக்கின்ற அரசின் நடவடிக்கை இந்த வகையில்தான் இருக்கும் என்பது முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும். இருப்பினும், தேர்தல் நேரத்தில் அரசியல் செய்வதற்கு இத்தகைய செய்திப் படங்கள் விளம்பரமாக அமையும் என்ற நோக்கத்துடன் அதனைப் பதிவு செய்திருக்கிறார்.
ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் வாச்சாத்தியில் மலைவாழ் பெண்களுக்கு காவல்துறையினாலேயே பாலியல் கொடூரங்கள் நடந்ததும், பல ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகே அதற்கு நீதி கிடைத்தது என்பதும் கடந்த கால வரலாறு. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் பொள்ளாச்சியில் இளம்பெண்களுக்கு நேர்ந்த பாலியல் கொடூரமும் அதன் வீடியோ காட்சிகளும் தமிழ்நாட்டையே அதிர வைத்தன. அந்தக் குற்றத்தில் அ.தி.மு.க.வின் முக்கிய புள்ளிகளின் வீட்டுப் பையன்களும் அவர்களின் கூட்டாளிகளும் சம்பந்தப்பட்டிருந்தும்கூட போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடைசியில் வழக்கு, சி.பி.ஐ.க்கு சென்று கிடப்பில் உள்ளது.
காலந்தோறும் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அண்மைக்காலமாக செல்போன்கள், சமூக வலைத்தளங்கள் போன்ற நவீன தகவல் தொடர்பு சாதனங்களின் வாயிலாகப் பெண்களை எளிதாகப் பாலியல் தொல்லைகளுக்குப் பலியாக்கும் நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இதில் இந்தியாவின் எந்த மாநிலமும் விதிவிலக்கல்ல. உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் குற்ற எண்ணிக்கை சற்று குறைவாக இருக்கிறது. எனினும், தமிழ்நாட்டில் நடைபெறும் இத்தகைய பாலியல் தொந்தரவுகள் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தவே செய்கின்றன.
எதிர்க்கட்சிகளின் தேர்தல் அரசியல் நோக்கிலான குற்றச்சாட்டுகளுக்குப் புள்ளிவிவரங்கள் மூலமான பதில்களைக் கடந்து, அண்மையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய தண்டனைச் சட்டங்களின் அடிப்படையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் கடுமையான நடவடிக்கைகளை விரைந்து எடுப்பதற்கும், பெண்களிடன் பாதுகாப்புடன் சமுதாய விழிப்புணர்வுக்கான செயல்திட்டத்தையும் உருவாக்க வேண்டிய பொறுப்பு தி.மு.க அரசுக்கும் முதலமைச்சருக்கும் உள்ளது.