
Graphical Image
பிப்ரவரி 21- உலகத் தாய்மொழி நாள். அவரவருக்கும் அவரவர் தாய் போலவே தாய்மொழியும் சிறப்பானது. நமது தமிழ், உலகின் மூத்த மொழிகளில் முந்தி நிற்கும் மொழி. பானை ஓடு-பனை ஓலை என எழுதத் தொடங்கி கல்வெட்டு காலம் முதல் கணிணி காலம் வரை காலத்திற்கேற்ப தன்னை தகவைமத்துக்கொண்ட மொழி. எழுத்துவடிவம், உச்சரிப்பு இவை காலந்தோறும் மாறினாலும், மக்களின் மொழியாக என்றென்றும் நிலைத்திருக்கிறது. அதனால்தான் எத்தனை ஆதிக்க மொழிகள் வந்தாலும் தமிழ் தன் சீரிளமைத் திறம் குறையாமல் ஆண்ட்ராய்டு காலத்திலும் சிறந்து விளங்குகிறது.
ஆதிக்க மொழிகளுக்கு எதிராக பண்பாட்டு வழியிலும், ஆன்மிக நெறியிலும், அரசியல் முறையிலும் தமிழ் தன்னைத் தக்கவைத்துக் கொண்ட போராட்ட வரலாறு நெடுங்காலமாகத் தொடர்கிறது. இந்தி வந்தால் தமிழ் அழிந்துவிடுமா எனக் கேட்பவர்கள் இருக்கிறார்கள். இந்தி-சமஸ்கிருத ஆதிக்கம் தமிழை அத்தனை எளிதாக அழித்துவிடமுடியாது. ஆனால், இந்தியாவுக்குள்ளேயே இரண்டாம்பட்சமாக்க முயற்சிக்கும். அவற்றின் வரலாறு அப்படி.
வடஇந்திய மொழிகளான ராஜஸ்தானி, போஜ்புரி, சந்தாலி, மைதிலி, அவதி, பிரஜ்பாஷா, புந்தேல்கண்டி, மால்வி, கன்னோஜி, குமோனி, சட்டீஸ்கரி, மார்வாரி, டோக்ரி, பாடி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்டமொழிகளை இந்தி ஆதிக்கம் தன் மலைப்பாம்பு வயிற்றுக்குள் விழுங்கியிருக்கிறது. பழங்குடி இனத்தவர் பேசிய பல மொழிகள் ஆதிக்கத்தால் அழிவை நோக்கித் தள்ளப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்று, அசுர். பிப்ரவரி 21 ஆம் நாளை உலகத் தாய்மொழி நாளாக அறிவித்த யுனெஸ்கோ நிறுவனத்தால் அழிவின் விளிம்பில் உள்ள மொழி என அசுர் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் லட்டேகார்-கும்லா மலை மாவட்டங்களில் உள்ள பழங்குடி மக்கள் இந்த மொழியைப் பேசுகிறார்கள். இந்த மொழியைச் சேர்ந்தவர்கள் 23ஆயிரம் பேர் மட்டுமே. அதில் 8000 பேர் அளவுக்குத்தான் அசுர் மொழி தெரிந்திருக்கிறது. மற்றவர்கள் மீது இந்தி ஆதிக்கம் படர்ந்திருக்கிறது.
இன்றுவரை சாலை வசதி, குடிதண்ணீர், மின்சார வசதிகள் சரியாக கிடைக்காத கிராமப்புறங்களில் வாழும் அசுர் மக்கள், தங்கள் தாய்மொழியை எப்படியாவது மீட்க வேண்டும் என்ற விழிப்புணர்வைப் பெற்று செயல்படத் தொடங்கியுள்ளனர். அசுர் மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது. ஒலி மட்டும்தான். அதனால், பழங்குடியினர் கூடும் இடங்கள், சமூக நலக் கூடங்கள், சந்தைகள் ஆகியவற்றில் அசுர் மொழியில், நடமாடும் வானொலி வாயிலாக பாட்டு, உரை என நிகழ்ச்சிகள் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகின்றன.
“இது அசுர் மைய வானொலி. வாருங்கள் ஆடலாம், பாடலாம், பேசலாம்” எனப் பழங்குடி மொழியில் ஒலிபரப்பினைக் கேட்கும்போது, தங்கள் தாயின் குரலைக் கேட்ட உணர்வினைப் பெற்றனர் அசுர் மக்கள். அவர்களிடம் கிடைத்த வரவேற்பும், அவர்களையே நிகழ்ச்சியில் பங்கேற்கச் செய்ததும் எதிர்பார்த்த பலனைத் தந்ததால், அசுர் மக்கள் வசிக்கும் இடங்களில் இந்த நடமாடும் வானொலியின் பணி தொடர்கிறது.
தாய்மொழியைக் காப்பதற்கான இந்த புதிய முயற்சியில் முன்னிற்பவர் ஒரு பெண்மணி. அவர் பெயர், சுஷ்மா அசுர். பழங்குடி இன மக்களின் நலனுக்காகவும் மொழியை மீட்கவும் விழிப்புணர்வு அமைப்பை நடத்தி வருகிறார். (பொதுவாக, மொழியைப் பெயராக வைப்பது தமிழ்நாட்டின் சிறப்பு. ஜார்கண்ட் பழங்குடியினரிடமும் அது வெளிப்படுவது ஆய்வுக்குரியது)
“இதுவரை 16 இடங்களில் வானொலி நிகழ்ச்சியை ஒலிபரப்பியுள்ளோம். அசுர் மொழி மக்கள் ஆர்வமாகக் கேட்கிறார்கள். காற்றில் தவழ்ந்து வரும் தங்கள் மொழியைக் கேட்கும்போது, காணாமல் போன பெட்டகம் கிடைத்தது போல, உணர்கிறார்கள்” என்கிறார் ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பத்திரிகையாளராக பணியாற்றும் ஏ.கே.பங்கஜ்.
மொழியை மீட்டால், வாழ்வியல் மேம்படும். அறிவாற்றல் வெளிப்படும். வளர்ச்சி நோக்கிய பயணம் எளிதாகும். அதனால்தான், இந்தியின் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக, தாய்மொழியின் அருமையை உணரத் தொடங்கியிருக்கிறார்கள் ‘அசுர்’கள். தமிழர்கள், இதில் அசுரர்கள். அரை நூற்றாண்டுக்கு முன்பே இந்தியாவுக்கு வழிகாட்டியிருக்கிறார்கள்.
உண்மை 🌹🌹👍👍
அசுர மொழியின் நிலைமை தான் மும்மொழியை ஏற்றால் தமிழுக்கும் வரும்