
’பிசிறு’ என்று மிகக்கடுமையாக காளியம்மாளை சீமான் விமர்சித்த ஆடியோ ‘லீக்’ ஆனதில் இருந்து கடும் அதிருப்தியில் இருந்து வந்துள்ளார் காளியம்மாள். அதனால்தான் அவர் கட்சியின் தீவிர செயல்பாடுகளில் இருந்து விலகியே இருந்தார். இதனால்தான் அவர் நாதகவில் இருந்து வெளியேறுகிறார் என்று அப்போதிலிருந்தே செய்திகள் வெளியாகி வருகின்றன.
அண்மையில் விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனாவும், அதிமுகவில் இருந்து விலகிய நிர்மல்குமாரும் தவெகவில் இணைந்த தினத்தில் காளியம்மாளும் தவெகவில் இணைகிறார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அன்றைக்கு தவெகவில் இணையவில்லை காளியம்மாள்.

இந்நிலையில் தற்போது நாதகவில் இருந்து காளியம்மாள் வெளியேறிவிட்டார் என்றே உறுதியான / இறுதியான செய்திகள் பரவுகின்றன. காளியம்மாளும் கூட, நாதகவில் இருந்து வெளியேறுவதாக பரவும் செய்திகளில் உண்மையில்லை என்று சொல்லவில்லை. ‘’நேரம் வரும்போது சொல்கிறேன்’’ என்றே சொல்கிறார். இதிலிருந்தே அவர் நாதகவில் இருந்து வெளியேறுகிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது. சீமானும் கூட இந்த செய்திகளை மறுக்காமல், ‘’தங்கை காளியம்மாள் கட்சியில் இருப்பதா, விலகி வேறு இயக்கத்தில் சேருவதா என்பது அவருடைய விருப்பம்’’ என்றே தெரிவித்திருக்கிறார்.
வெளியேற்றம் உறுதியானதால்தான், நாதகவில் இருந்து வெளியேறும் காளியம்மாள் தவெகவில் இணைகின்றார் என்று ஒரு செய்தி பரவுகிறது. ஆனால் காளியம்மாள் திமுகவில் இணையவிருப்பதற்கே அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள். திமுக தரப்பும் காளியம்மாளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என்றே பல செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

திமுக தரப்பு காளியம்மாளிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் இரண்டு நிபந்தனைகளை முன் வைத்திருக்கிறார் காளியம்மாள். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் தனக்கு சீட் ஒதுக்க வேண்டும் என்பதுதான் முதல் நிபந்தனை. அது இல்லை என்றால் ராஜ்யசபா தேர்தலை குறிவைக்கிறாராம் காளியம்மாள்.
இது ஒருபுறமிருக்க, நாதகவில் இருந்து வெளியேறிய நிர்வாகிகள் பலரும் இணைந்து தனிக்கட்சி தொடங்கி, அதற்கு காளியம்மாளை தலைமையேற்கச் சொல்லியும் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன என்றும் செய்திகள் பரவுகின்றன.