
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத் தீர்மானம் நிறைவேறினாலும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளிலோ 30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கான 33% பிரதிநிதித்துவம் நடைமுறைக்கு வந்துவிட்டது. தற்போது அது தமிழ்நாட்டில் 50% என்ற அளவில் உள்ளது. மாநிலத்தின் தலைநகரான சென்னையின் மாநகராட்சியில் பெண் மேயர் பொறுப்பில் இருக்கிறார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரும்பாலான மாநகராட்சிகளில் பெண் மேயர்கள் இருக்கிறார்கள். நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என எல்லா நிலையிலும் 50% அளவிற்குப் பெண்கள் பொறுப்பு வகிக்கிறார்கள்.
பெண்கள்தான் போட்டியிடுகிறார்கள். பெண்கள்தான் வெற்றி பெறுகிறார்கள். பெண்கள்தான் மேயராக, சேர்மனாக, ஊராட்சி மன்றத் தலைவராகப் பொறுப்பேற்கிறார்கள். ஆனால், முழுமையான அதிகாரம் அவர்களிடம் இருக்கிறதா என்றால், ஓரிரு பெண் தலைவர்களைத் தவிர, பெரும்பாலானவர்கள் சுயமாகவோ சுதந்திரமாகவோ செயல்பட முடிவதில்லை என்பதுதான் கசப்பான உண்மை. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே உள்ளாட்சி அமைப்புகளில் இதுதான் நிலவரம்.
அரசியலில் பெண்கள் பங்கேற்பதும், அவர்கள் உயர்ந்த பொறுப்புக்கு வருவதும் அத்தனை எளிதல்ல. கடும் போராட்டம், நெருக்கடிகள், அவமானங்கள் இவற்றை எதிர்கொண்டே அவர்கள் தங்களுக்கானப் பதவிகளை அடைய முடிகிறது. உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்தவரை, எந்தெந்த வார்டுகள் பெண்களுக்காக ஒதுக்கப்படுகிறதோ, அந்த வார்டுக்குரிய ஆண் வட்டச் செயலாளர்கள் தங்கள் மனைவி, மகள், சகோதரி, அம்மா என்று குடும்பத்துப் பெண்களில் ஒருவரை வேட்பாளராக்கி விடுகிறார்கள். வெற்றிபெறும் வாய்ப்புள்ள எல்லாக் கட்சிகளிலும் இதுதான் நடக்கிறது. எந்தக் கட்சியின் பெண் வேட்பாளர் வெற்றி பெறுகிறாரோ, அவர்கள் வீட்டு ஆண்கள்தான் திரைமறைவில் நிர்வாகம் செய்கிறார்கள்.
“சொல்லுங்க.. நான்தான் கவுன்சிலர்” என்றும், “நான்தான் சேர்மன்.. என்ன வேணும் உங்களுக்கு?” என்றும் பெண் கவுன்சிலர்கள்- நகர்மன்ற, மாநகராட்சி பெண் தலைவர்களுக்கு போன் செய்தால், ஆண் குரல் கேட்பது வாடிக்கையாக உள்ளது. பேசுகிறவர்களும் இதனை இயல்பாக எடுத்துக் கொண்டு, உள்ளாட்சிப் பெண் பிரதிநிதிகளின் கணவர்களிடமே பேசுகிறார்கள். நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகள் கூட பெண் பிரதிநிதிகளின் கணவர்-தந்தை ஆகியோரிடம் ஆலோசிக்கும் நிலைமை இன்றும் பல இடங்களிலும் நிலவுகிறது. பெண் பிரநிதிதித்துவத்தை தங்கள் குடும்பச் சொத்தாக ஆண்கள் நினைத்து, அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்கிறார்கள்.
இந்திய குடும்ப அமைப்பில் ஆண்தான் தலைமைத்துவம் கொண்டவனாகவும், எதையும் தீர்மானிப்பவனாகவும் இருப்பதால், பொதுமக்கள் தொடங்கி அதிகாரிகள் வரை இதனைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அரசியலிலும் பெண்களை பெயரளவுக்கு முன்னிறுத்தி, பின்னால் இருந்து இயக்கும் ஆண்களின் ஆதிக்கம் அதிகம் என்பதால், கட்சிகளில் வேட்பாளர் தேர்வும், அந்தந்த வார்டு, நகர்மன்றம், மாநகராட்சியில் செல்வாக்குள்ள கட்சியின் ஆண் நிர்வாகிகள் வீட்டுப் பெண்களை முன்னிறுத்தி நடைபெறுகிறது.
“எனக்கு சீட் இல்லாவிட்டால் என் பொண்டாட்டிக்கு சீட். என் பொண்டாட்டி கவுன்சிலரானால் எனக்குத்தான் அதிகாரம்” என்பது எழுதப்படாத சட்டமாக உள்ளது. ஜனநாயகத்தில் பெண்களுக்கான அதிகாரத்தை வழங்குவது என்ற உயர்ந்த நோக்கம், அந்தப் பெண்களை முன்னிறுத்தியே ஆண்களால் சிதைக்கப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும் என்று அரசியலில் உண்மையான அக்கறையுடன் செயல்பட்டு வரும் பெண்களும், தங்கள் அதிகாரத்தை ஆண்கள் பறிப்பதை விரும்பாத பெண்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். தற்போது இந்தக் குரல்களுக்குரிய மதிப்பு கிடைத்து வருகிறது.
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் அதிகாரம் பறிக்கப்படுவதையும், பெண்களுக்குப் பதில் நிழல் அதிகார மையங்களாக ஆண்கள் செயல்படுவதையும் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதனை சீர்செய்ய ஓர் ஆலோசனைக் குழுவை நியமிக்க வேண்டும் என கடந்த 2023ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து, மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது.
பெண் பிரநிதிதித்துவத்தை வலுப்படுத்துவதற்கான இந்த ஆலோசனைக் குழு அளித்துள்ள பரிந்துரையில், பெண் பிரநிதிகளுக்குப் பதில் அந்த இடத்தில் ஆண்கள் அதிகாரம் செலுத்துவது நிரூபிக்கப்பட்டால் அபராதம் விதிப்பது என்பன உள்ளிட்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதுபோல, பெண் பிரதிநிதிகளுக்கு குறைந்தபட்ச பள்ளிக் கல்வியை, வேட்பாளருக்கானத் தகுதியாக நிர்ணயிக்க வேண்டும் என்ற பரிந்துரையும் இடம்பெற்றுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் மனைவிக்கு கிடைக்கும் பதவி தனக்குத்தான் என்ற மமதையுடன் செயல்படும் கணவர்களுக்கு ஆப்பு சீவப்படுகிறது.
இதற்கு ஒரே வழி கட்சி உள்ளாட்சிகளில் யாரை வேட்பாளர்களாக தெறிவு செய்கிறார்களோ அவர்களுக்கு ஒரு இரண்டு மாதம் உள்ளாட்சி நிர்வாக பயிற்சி அளித்தால் அவர்களுக்கு நிர்வாகம் செய்வது எளிது அதில் கணவர் தந்தை அல்லது சகோதரர் தலை ஈடு இருந்தால் மாவட்ட ஆட்சியர் ஒருமுறை எச்சரிக்கை அதையும் தாண்டி மீண்டும் அதே தவறு நேர்ந்தால் முதல் ஒருமாதம் சஸ்பென்ஷன் அடுத்து இதே தவறு நீருபனம் ஆனால் பதவி பறிப்பு செய்யவேண்டும்