
இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் தற்போதுள்ள 543 தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை செய்யும்போது, தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கான எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால், மார்ச் 5ஆம் நாளன்று தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தொகுதிகள் குறைப்பதை அண்டை மாநிலங்களும் எதிர்க்கின்றன. உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவையில் நடந்த கூட்டத்தில் பேசும்போது, தமிழ்நாட்டின் தொகுதிகள் குறையாது, மாறாக எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிவித்தார். ஆனால், அவருடைய கருத்து முழுமையானதாகவோ, தெளிவானதாகவோ இல்லை என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
50 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கு மிகவும் நெருக்கடி தரும் சவாலாக இருந்தது மக்கள்தொகை. அதனைக் கட்டுப்படுத்துவதற்கானத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் அதனை சரியாகக் கடைப்பிடித்ததால் மக்கள்தொகைக் கட்டுப்படுத்தப்பட்டது. வடமாநிலங்கள் இதில் போதிய அக்கறை செலுத்தவில்லை. அங்கே மக்கள்தொகை உயர்ந்தது. தற்போது, மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை என்றால் மத்திய அரசின் திட்டத்தை சரியாகப் பின்பற்றிய மாநிலங்களுக்குத் தண்டனையாக தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். திட்டத்தை செயல்படுத்தாத மாநிலங்களுக்கு தொகுதிகளின் எண்ணிக்கை உயரும். இது ஜனநாயகமல்ல, அநீதி என்பதை தென்மாநிலங்கள் சுட்டிக்காட்டி எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் தற்போது 39 தொகுதிகள் உள்ளன. மறுவரையறை செய்யப்பட்டால் 31 தொகுதிகளாகக் குறைந்துவிடும். தென்மாநிலங்கள் அனைத்தும் தனது எண்ணிக்கையை இழக்கும். வடமாநிலங்களில் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால் அங்கே செல்வாக்காக உள்ள பா.ஜ.க., தென்மாநிலங்களின் வெற்றி தேவையின்றி, ஆட்சியை அமைத்துவிட முடியும். இந்த சதியைத்தான் தென்மாநிலங்கள் அம்பலப்படுத்துகின்றன. உள்துறை அமித்ஷா அதை மறுத்து, தமிழ்நாட்டில் தொகுதிகள் குறையாது என்றும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரான ஆ.ராசா எம்.பி., “தமிழ்நாட்டின் எண்ணிக்கை மாற்றப்படாமல் பாதுகாக்கின்ற அதே நேரத்தில், வடமாநில தொகுதிகளின் எண்ணிக்கையையும் உயர்த்தக் கூடாது” என்ற உத்தரவாதத்தைக் கோரினார்.
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “இந்தியா பல்வேறு மாநிலங்களின் ஒன்றியம் ஆகும். அனைத்து மாநிலங்களுக்குமான மக்களவைப் பிரதிநிதித்துவம் ஒரே வகையிலான விகிதத்தில் அமைய வேண்டும். எந்த ஒரு மாநிலத்தின் மக்களவைத் தொகுதிகளின் விகிதாச்சாரமும் மாற்றப்படக் கூடாது. மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை முடிவு செய்வது சரியானது அல்ல; அதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது” என்ற தெரிவித்துள்ளார். தற்போதுள்ள நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு எம்.பி.க்களின் விகிதாச்சாரம் 7.20% ஆகும். மறுவரையறை செய்யும்போது கிடைக்கும் எண்ணிக்கை இந்த விகிதாச்சாராத்திற்கு குறையக்கூடாது என்பதுதான் அவரின் அழுத்தமான கருத்தாக உள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை இப்போதுள்ள அளவில் தொடர்ந்தால் தமிழ்நாட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 39 ஆக தொடர வேண்டும். மூன்றில் ஒரு பங்கு என மொத்த எண்ணிக்கை 721 ஆக உயர்த்தப்பட்டால் தமிழ்நாட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 52 ஆக உயர்த்தப்பட வேண்டும். புதிய நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகளின் அடிப்படையில் 888 ஆக உயர்த்தப்பட்டால், தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையும் அதே விகிதத்தில் 64 ஆக உயர்த்தப்பட வேண்டும்.
இந்த அடிப்படையிலான எண்ணிக்கைகள் ஒருபோதும் குறைக்கப்பட மாட்டாது என்பதை பிரதமரும் அமித்ஷாவும் உத்தரவாதமாக அளிக்காமல், மேலோட்டமாக வாக்குறுதி அளிப்பது தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களிடம் மட்டுமின்றி, தென்மாநில அரசியல் தலைவர்கள் பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க.வினர் போட்டியிடக்கூடிய தொகுதிகளின் எண்ணிக்கையும் இதில் பறிபோகும் சூழல் உள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் குரல் ஒடுக்கப்படும் அபாயத்தை உணர்ந்துதான், முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிக்கூட்டத்தைக் கூட்டியுள்ளது தமிழ்நாடு அரசு. இதில் முதன்மை எதிர்க்கட்சியான அ.தி.மு.க பங்கேற்கபதாகத் தெரிவித்துள்ளது. தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளுடன், பா.ம.க. போன்ற கூட்டணிக்கு அப்பாற்பட்ட கட்சிகளும் பங்கேற்பது ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும். உரிய தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை உருவாக்கும்.
பா.ஜ.க. இதனை எப்படி அணுகப் போகிறது என்பதைப் பொறுத்து தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் அதன் போக்கை தெரிந்துகொள்ளலாம்.