
இதுவரையிலும் ’பாஜகவுடன் கூட்டணியா? ’ என்று கேட்டால், பாஜகவுடன் எக்காலத்திலும் கூட்டணி கிடையாது என்று அடித்துச் சொல்லி வந்த எடப்பாடி பழனிசாமி இப்போது, நேரடியாக பதில் சொல்லாமல் மழுப்பலான பதிலைச் சொல்லி எஸ்கேப் ஆகிறார்.
அண்ணாமலை ஏற்படுத்திய அதிருப்தி அலைகளினால் இனி எக்காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி அமைக்காது என்ற முடிவை எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனாலும், அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவே விரும்புகிறது பாஜக. எஸ்.பி.வேலுமணி மூலமாக கூட்டணியை உறுதி செய்ய முயன்று வருகிறது பாஜக என்கிறார்கள்.

அதற்கேற்றால் போல் எஸ்.பி.வேலுமணி மகன் திருமண விழாவில், அண்ணாமலை, எல்.முருகன், தமிழிசை, குஷ்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டு ‘இது பாஜக இல்ல திருமணமா?’ என்று கேட்கும்படி செய்தனர்.
அந்த திருமண விழாவில், செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முன்னாள் அதிமுக அமைச்சர்களிடம் நெருக்கம் காட்டி பேசினார் அண்ணாமலை.
விரைவில் அமித்ஷா தமிழகம் வரவிருக்கும் நிலையில், ‘’அமித்ஷா தமிழக வரும்போது மாற்றங்கள் நிகழும்’’ என்று சஸ்பென்ஸ் வைக்கிறார் அண்ணாமலை.

இந்நிலையில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியா? என்று கேட்டால், 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று சொன்னதை நேரடியாகச் சொல்லாமல் சுற்றிவளைத்து சொல்கிறார் எடபபடி.
அதுமட்டுமல்லாமல், ’’சும்மா கூட்டணி கீட்டணி பத்தி எல்லாம் கேட்காதீங்க. பாஜக கீஜக பத்தி எல்லாம் ஆறு மாசம் கழிச்சு கேளுங்க. இன்னும் 6 மாசம் கழிச்சு பாருங்க. அப்போ யார் யார் எங்கே இருக்குறாங்கன்னு தெரிஞ்சுடும். இதுல ஒண்ணும் ஒளிவுமறைவு இல்ல, எல்லாம் வெட்ட வெளிச்சமா தெரிஞ்சுடும்’’ கொஞ்சம் கடுப்பானார்.
திரும்பவும் பாஜகவுடன் கூட்டணியா? என்று கொக்கி போட்டால், ‘’எங்களுக்கு ஒரே எதிரி திமுகதான். மற்ற எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி கிடையாது’’ என்கிறார்.
மற்ற எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி கிடையாது என்று சொல்வதைப் பார்த்தால், பாஜக எதிரி இல்லை என்பதை சொல்கிறார் எடப்பாடி. 6 மாசம் கழிச்சு கேளுங்க என்று சொல்வதை வைத்துப் பார்க்கும் போது, ஆறு மாதங்கள் கழித்து அதிமுக – பாஜக கூட்டணி உறுதிவிடும் என்றே தெரிகிறது.