
எடப்பாடி முதல்வர் ஆவதற்கும், அதிமுக பொ.செ. ஆவதற்கும் உறுதுணையாக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. அவர் வீட்டு திருமணத்திற்கே எடப்பாடி போகாதது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த அளவிற்கு ஏன் எஸ்.பி.வி. மீது எடப்பாடிக்கு கோபம்?
ஒன்றுபட்ட அதிமுக வேண்டும் அதன் பின்னர் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க வேண்டும் என்று பாஜக தலைமை கொடுத்த அழுத்தத்தால் செங்கோட்டையன், தங்கமணி உள்ளிட்டவர்களை அழைத்துச்சென்று நிலைமையை எடுத்துச்சொன்னார் எஸ்.பி.வேலுமணி. 6 பேர் எடுத்துச்சொல்லியும் எடுத்தெறிந்த மாதிரி பேசிவிட்டார் எடப்பாடி.
தாங்கள் இழுத்த இழுப்புக்கு வராததால் எடப்பாடியின் ஆதரவு வட்டத்தில் ரெய்டு அம்பை பாய்ச்சியது பாஜக தலைமை. அப்படி இருந்தும் பிடி கொடுக்காமல் இருந்து வந்தார் எடப்பாடி.

இந்த நிலையில்தான் அண்மையில் சிவராத்திரியில் ஈஷா மையத்திற்கு வந்த அமித்ஷா, வேலுமணியை சந்தித்து ரகசியமாக பேசி இருக்கிறார். அந்த விழாவில் அமித்ஷா, எல்.முருகன், அண்ணாமலை, வேலுமணி உள்ளிட்டோர் வெளிப்படையாக பங்கேற்றாலும் கூட, அதன் பின்னர் ரகசியமாக நடந்துள்ளது அமித்ஷா – வேலுமணி சந்திப்பு.
எடப்பாடியின் பிடிவாதம் பற்றி வேலுமணி சொன்னதைக் கேட்டுக்கொண்ட அமித்ஷா, அவரை பணிய வைப்பதற்கான சில ஆலோசனைகளை சொல்லி இருக்கிறார்.
இந்த ரகசிய ஆலோசனையை தெரிந்து கொண்ட எடப்பாடி கடும் அப்செட்டில் இருந்திருக்கிறார். இந்த நேரத்தில் வேலுமணியின் மகன் திருமணத்திற்கு எல்.முருகன், தமிழிசை, அண்ணாமலை, குஷ்பு உள்ளிட்டோர் வருவதாக தகவல் வரவும், திருமணத்திற்கு செல்வதை தவிர்த்துவிட்டார் என்கிறன அதிமுக வட்டாரத் தகவல்.
அதே நேரம் தனியாக ஒருநாள் வீட்டிற்கு வந்து மணமக்களை வாழ்த்துகிறேன் என்று சொல்லி இருக்கிறாராம் எடப்பாடி. அப்படி இல்லை என்றால் வரும் 10ஆம் தேதி அன்று கொடிசியாவில் நடைபெறும் திருமணம் வரவேற்பு விழாவில் பங்கேற்பதாகவும் உறுதி அளித்திருக்கிறாராம் எடப்பாடி.
அமித்ஷா மீண்டும் தமிழகம் வரும்போது அதிமுகவுடன் கூட்டணி முடிவாகிவிட வேண்டும் என்ற முயற்சிகள் படு தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றனவாம். அழுத்தம் தாங்காமல் எடப்பாடியும் பாஜக வழிக்கு வந்துவிட்டாலும் வேலுமணி வீட்டு திருமணத்தை புறக்கணிப்பது போன்ற எரிச்சல்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.
8rjo73