
Representative Image
மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை சரியாக கடைப்பிடித்த தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் தொகுதிகள் குறைக்கப்பட்டு, இந்தத் திட்டத்தை கடைப்பிடிக்காத உத்தரபிரதேசம், பீகார் போன்ற வடமாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கை உயரும் என்பதால் தொகுதி மறுசீரமைப்புத் திட்டத்தை ஒத்திவைக்கவேண்டும் என்பதை முதல் குரலாக ஒலித்தார் தமிழ்நாடு முதலமைச்சர்.
தமிழ்நாட்டின் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்றும், தமிழ்நாடு முதலமைச்சர் தேவையற்ற பதற்றத்தை உண்டாக்குகிறார் என்று கோவைக்கு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். ஆனால், அமித்ஷாவின் விளக்கம் போதுமானதாக இல்லை என்பதை பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடங்கி, கர்நாடக முதல்வர் சித்தராமையா வரை பலரும் தெரிவித்தனர். தென்மாநிலங்களின் தொகுதிகளைக் குறைக்க கூடாது என்று கேரளா, தெலங்கானா மாநிலங்களிலிருந்தும் குரல்கள் ஒலித்தன.
தமிழ்நாட்டின் தொகுதிகள் பறிபோகக்கூடாது என்பதற்காக முதலமைச்சர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் மார்ச் 5ந் தேதி நடைபெற்றபோது, 56 கட்சிகள் அதில் பங்கேற்றன. பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகள் மட்டும் பங்கேற்கவில்லை. அ.தி.மு.க., பா.ம.க, தே.மு.தி.க., த.வெ.க என தி.மு.க. கூட்டணியில் இல்லாத-தி.மு.க.வை நேரடியாக எதிர்க்கின்ற கட்சிகளும் இதில் பங்கேற்று, தமிழ்நாடு அரசின் தீர்மானத்திற்கு முழுமையான ஆதரவை வழங்கியிருப்பது, தென்மாநிலங்களுக்கு புதிய நம்பிக்கையைத் தரும் முன்னெடுப்பாக அமைந்துள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டிற்கு உள்ள தொகுதிகளின் விகிதம் குறையக்கூடாது, இதற்காக தென்மாநிலங்களை இணைத்து கமிட்டி அமைப்பது, 30 ஆண்டுகளுக்கு மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படாது என்று பிரதமர் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை என்பன உள்ளிட்டவை அனைத்துத் தரப்பிடமும் ஆலோசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து கட்சிகளும் தங்களின் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு வாய்ப்பினை அளித்தது ஜனநாயகப் பண்பை வெளிப்படுத்துவதாக இருந்தது. இதுதான் தமிழ்நாட்டின் அரசியல் நடைமுறை.
சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றும் தீர்மானத்தை நிறைவேற்றியவர் அன்றைய முதலமைச்சர் அண்ணா. தீர்மானத்தை முன்மொழிந்தபோது, அதனை தி.மு.க அரசின் சாதனையாகக் குறிப்பிடாமல், சட்டமன்றத்தில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஒருங்கிணைந்த முயற்சியாகத் தெரிவித்து, முழுமையான ஆதரவைப் பெற்றதுடன், அண்ணா மூன்று முறை தமிழ்நாடு என்று சொல்ல, அவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் வாழ்க என்று உரக்க முழக்கமிட்டு ஒருமனதாகத் தீர்மானத்தை நிறைவேற்றினர். இதுபோல பல நிகழ்வுகளைக் கண்டதுதான் தமிழ்நாடு. பொதுப்பிரச்சினையில் ஒருமித்த கருத்தை ஒற்றுமையுடன் வெளிப்படுத்தும் அரசியல் பண்பு இந்த மண்ணுக்கு உண்டு. இடையில் சில தனிப்பட்ட அரசியல் பகையுணர்வால் அந்த நிலைமை தலைகீழானது.
கச்சத்தீவு தொடர்பான தி.மு.க. அரசின் அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அ.தி.மு.க கையெழுத்திடவில்லை. காவிரி நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி பிரதமரை சந்திக்க டெல்லி சென்ற தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சிக் குழுவில் அ.தி.மு.க.வினர் பங்கேற்கவில்லை. நாங்கள் தனியாகப் பிரதமரை சந்திப்போம் எனத் தெரிவித்துவிட்டார்கள். அதே நேரத்தில், காவிரியில் தங்களுக்குத்தான் உரிமை என்ற கர்நாடக மாநிலத்தில் ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி என எல்லாக் கட்சியினரும் ஒன்றாக சேர்ந்து சென்று பிரதமரை சந்தித்தனர். தற்போது, தமிழ்நாடு மீண்டும் ஒருமித்த குரலில், நாடாளுமன்றத் தொகுதியை குறைக்கக்கூடாது எனத் தெரிவித்திருக்கிறது.
இதில், ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கலாம். தி.மு.க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை அ.தி.மு.க. விமர்சிக்கும். அ.தி.மு.க.வின் பார்வையை தி.மு.க விமர்சிக்கும். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் த.வெ.க. கலந்துகொண்டு ஆதரவளித்த நிலையில், தொகுதிக் குறைப்பு என்பது மக்கள் பிரச்சனையல்ல என்று அக்கட்சியின் தலைவரான நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார். முக்கியமான பிரச்சினைகளில் வெளிப்படும் தனிப்பட்ட கருத்துகள் சில அபத்தமாகக்கூட இருக்கும். ஆனால், அரசு எடுக்கும் முடிவுடன் மாநிலத்தின் நலன் கருதி ஒத்துப்போவது என்பது வரவேற்கத்தக்கது என்பதால், அனைத்துக் கட்சிகளுக்கும் முதலமைச்சர் நன்றி தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டின் குரலை தென்னிந்திய மாநிலங்கள் மட்டுமின்றி, சில வடஇந்திய மாநிலங்களும் கவனித்து வருகின்றன. மாநில உரிமையைக் காப்பதில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. பொதுப் பிரச்சினைகளில் இந்த ஒற்றுமையுணர்வு தொடர வேண்டும்.