
பண்ணைபுரத்திலிருந்து பக்கிங்ஹாம் வரை பரவியிருக்கும் இளையராஜாவின் இசை தமிழ் மண்ணின் பெருமை. 1975ஆம் ஆண்டு அவருடைய இசையை தமிழர்கள் கேட்கத் தொடங்கினார்கள். 50 ஆண்டுகளில் அவருடைய தொடர்ச்சியான பயணத்தால் 2025ல் மேற்கத்திய செவ்வியல் இசையான சிம்பொனியைப் படைத்தளித்து உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இளையராஜாவுக்கு முன்பும் பின்பும் தமிழில் இசைக்கலைஞர்கள் உண்டு. இசையமைப்பாளர்கள் உண்டு. இசையின் முக்கியத்துவத்தை உணர்த்திய முதல் இசையமைப்பாளர் இளையராஜாதான்.
1980களில் அவருடைய புகழ்க்கொடி பறந்த காலத்தில், இளையராஜா இசையமைக்கப்பட்ட படம் என்றால் அதற்கு வசூலில் மினிமம் கேரண்டி உண்டு என்ற நிலை உருவானது. கதாநாயகன், கதாநாயகி, இயக்குநர், தயாரிப்பு நிறுவனம் இவற்றைக் கடந்து, இளையராஜாவின் இசை கோலோச்சியது. பின்னர், காலமாற்றத்தில் பல இசையமைப்பாளர்கள் பலவித இசைகளை ரசிகர்களுக்கு வழங்கும் நிலை அமைந்தது. எனினும், இளையராஜாவின் இசை என்பது அவரால் நேரடியாகவும், ரீ-மிக்ஸ் பாடல்கள் வழியாகவும் தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் தனக்கான இடத்தைக் கொண்டிருக்கிறது.
1990களின் நடுப்பகுதியிலேயே அவர் சிம்பொனி எனும் மேற்கத்திய செவ்வியல் இசைக்கான முயற்சிகளைத் தொடங்கிவிட்டார். சிம்பொனி குழுவினருடன் இணைந்து அவர் இசைக்கோர்ப்பு வேலைகளை செய்து வந்தார். ‘மேஸ்ட்ரோ’ என்றும் அவருடைய பெயருக்கு முன்பாக பட்டம் சேர்ந்தது. சில திரைப்படங்களிலும் சிம்பொனி குழுவினரின் இசைப்பணியைப் பயன்படுத்தினார். சைவ சமய நெறியைப் பாடியவர்களில் ஒருவரான மாணிக்கவாசகரின் திருவாசகத்தை சிம்பொனி பாணியிலான இசைவடிவமாகத் தமிழர்களுக்கு வழங்கினார்.
பொதுவாக, இளையராஜாவின் தமிழ் மரபு சார்ந்த இசை-நாட்டுப்புற இசை ரசிகர்களிடம் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியத. ஓராண்டுக்கு மேல் திரையரங்குகளில் தொடர்ந்து ஓடிய கரகாட்டக்காரன் திரைப்படம் அதற்கொரு சான்று. அதுபோல நிறைய படங்கள் உண்டு. எனினும், இளையராஜா என்ற இசைக்கலைஞரின் தனித்துவம் என்பது, மரபார்ந்த மண்ணின் இசையுடன் அமைந்த பாடலில் மேற்கத்திய இசைக் கருவிகளை மிகக் கச்சிதமாகப் பயன்படுத்தி, இசையின் அடுத்த கட்டத்திற்கு ரசிகர்களை உயர்த்தியதுதான். எடுத்துக்காட்டாக, என் புருசன்தான்.. எனக்கு மட்டும்தான் என்ற பாட்டு ஓர் எளியகிராமத்துப் பெண் தன் மனதில் உள்ளதை வெளிப்படுத்தும் பாடல். அதற்கான மெட்டும் கிராமத்துப் பாணியில்தான் இருக்கும். ஆனால், என் புருசன்தான் என்று பாடியதும், கிடார் இசைக்கும். எனக்கு மட்டும்தான் என்றதும் கிடார் இசைக்கும். இதுதான் இளையராஜாவின் தனித்துவம்.
வயலின், புல்லாங்குழல், கிடார், மிருதங்கம், ட்ரம்ப்பெட், ஷெனாய் என்று இந்திய இசைக்கருவிகளையும் வெஸ்டர்ன் இசைக்கருவிகளையும் ஒரே பாட்டில் அவரால் கலந்து தர முடியும். அதன் மூலமாக தன் இசையை அனைவரையும் ரசிக்க வைக்க முடியும். கண்ணதாசன் புகழ்க்கொடி பறந்த காலத்தில் அவர் திரை இசை அமைக்க வந்தார். வாலி, வைரமுத்து, புலமைப்பித்தன், நா.காமராசன், முத்துலிங்கம், கங்கைஅமரன் என பலர் அவர் இசையமைத்த படங்களின் மூலம் புகழ் பெற்றனர். பின்னர் பழநிபாரதி, நா.முத்துக்குமார், யுகபாரதி என இளந்தலைமுறை கவிஞர்களுடனும் அவருடைய பயணம் தொடர்ந்தது.
திரை இசைதான் இளையராஜாவுக்கு பெரும்புகழும் செல்வமும் சேர்த்தது என்றாலும், அவருடைய இசைத் தேடல் என்பது புகழுடனும் பணத்துடனும் நின்றுவிடவில்லை. இசையின் பல்வேறு பரிணாமங்களிலும் தன்னை வெளிப்படுத்தவேண்டும், இசையாகவே வாழவேண்டும் என்ற அவருடைய தணியாத தாகம்தான் தொடர்ச்சியான பல முயற்சிகளை மேற்கொள்ளச் செய்தது.
How to name it, Nothing but wind போன்ற இசை ஆல்பங்கள் 1980களிலேயே வெளியாகி, இளையராஜாவுக்குள் இருக்கும் சினிமாவைக் கடந்த மகத்தான கலைஞனின் பேராற்றலை விளக்கியது. அதன் தொடர்ச்சியான பயணத்தின் விளைவுதான் 2025 மார்ச் 8 என்று இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அரங்கேறிய அவருடைய அதிகாரப்பூர்வ சிம்பொனி இசையான Valiant. இதன் வாயிலாக மொசாட், பீத்தோவன் போன்ற உலக இசை மேதைகளின் வரிசையில் இளையராஜாவும் இடம்பெற்றிருக்கிறார்.
சிம்பொனி என்பது குறைந்தபட்சம் 20 நிமிடங்களைக் கொண்டிருக்க வேண்டிய இசையாகும். அதில் ஆர்ப்பாட்டம், அமைதி, துள்ளல், அதிர்வு என அனைத்தும் படிப்படியாக வெளிப்பட வேண்டும். எத்தனை இசைக்கலைஞர்கள் அதனை வாசிக்க வேண்டும், எத்தனை இசைக்கருவிகள் பயன்படுத்த வேண்டும் என்ற வரைமுறையும் உண்டு. வாயால் பாடுவது கூடாது. மொத்த உணர்வுகளையும் இசைக்கருவிகளாலேயே வெளிப்படுத்த வேண்டும். இளையராஜாவின் இசைக்குறிப்புகளை சிம்பொனி இசைக் கலைஞர்கள் நேர்த்தியாக வெளிப்படுத்தியதால், அவர் இசையுலக வரலாற்றில் தனக்கான இடத்தைப் பெற்றிருக்கிறார்.
மகத்தான வெற்றிக்கு பிறகு இளையராஜாவை பேச சொன்னபோது, “சிம்பொனி இசை அனுபவம் என்பது உணர்வதால் வருவது” என்பதை மிக நேர்த்தியாக சொல்லியிருக்கிறார். இளையராஜாவே பெரும்பாலான தமிழர்களின் வாழ்வுடன் கலந்த இசை அனுபவம்தான்.
u8880n