
ஒரே நாளில் மூன்று முறை முடங்கியதால் எக்ஸ் தள பயனர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். நேற்று பிற்பகல் 3.30 மணி அளவிலும், மாலை 7 மணி அளவிலும், இரவு 8.45 மணி அளவிலும் எக்ஸ் தளம் முடங்கியதால் உலகம் முழுவதிலும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் இந்த முடக்கம் குறித்து புகார் தெரிவித்திருந்தனர். பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலமும் புகார் தெரிவித்தும், வருத்தம் தெரிவித்தும் வந்தனர்.
தற்போதும் கூட எக்ஸ் தளத்தில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர் பயனர்கள்.

முதலில் எக்ஸ் தளத்தின் தரப்பில் இருந்தோ, எலான் மஸ்க் தரப்பில் இருந்தோ எந்தவிட விளக்கமும் வராமல் இருந்தது. உலகமெங்கிலும் இதுகுறித்து பேச்சு வலுத்த போதுதான் எலான் மஸ்க் தனது சந்தேகத்தினை வெளிப்படுத்தி இருக்கிறார்.
எக்ஸ் தள முடக்கத்தின் பின்னணியில் உக்ரைன் சதி இருப்பதாக எலான் மஸ்க் சந்தேகிக்கிறார். எக்ஸ் தளத்தின் மீது மிகப்பெரிய தாக்குதல் நடந்துள்ளது என்று சொல்லும் எலான் மஸ்க், அந்த தாக்குதல் உக்ரைன் பகுதியில் இருந்து நடத்தப்பட்டிருக்கிறது என்கிறார். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் கணினியின் ஐபி முகவரி உக்ரைன் நாட்டை குறிக்கிறது. ஆகவே, உக்ரைன் நாட்டில் இருந்துதான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று அழுத்தமாக தெரிவித்திருக்கிறார்.

செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியொன்றில் எலான் மஸ்க் இந்த சந்தேகத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். முன்னதாக அவர் தனது எக்ஸ் தள பதிவில், எக்ஸ் தளத்தின் மீது தாக்குதல் நடப்பது என்பது அடிக்கடி நிகழும் ஒன்றுதான் என்றாலும் இது மிகப்பெரிய தாக்குதல் என்கிறார். இந்த தாக்குதலின் பின்னணியில் மிகப்பெரிய நெட்வொர்க் உள்ளது என்றும், ஒரு நாட்டின் தலையீடு உள்ளது என்றும் சந்தேகம் தெரிவித்திருக்கிறார்.
எக்ஸ் தளத்தின் மீதான சைபர் தாக்குதலுக்கு காரணம் உக்ரைன் நாடுதான் என்று எலான் மஸ்க் இந்த அளவுக்கு அழுத்தமாகச் சொல்வது ஏன்?
ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரில் உக்ரைன் நாட்டின் செயல்பாட்டினை தொடர்ந்து விமர்சித்து வந்தார் எலான் மஸ்க்.

அதுமட்டுமல்லாமல், எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் நிறுவனம் தான் உக்ரைன் நாட்டிற்கு இணைய சேவை வழங்கி வருகின்றது. இந்த நிலையில், ’’உக்ரைன் நாட்டிற்கு அளித்து வரும் இணைய சேவையை நிறுத்தினால் அந்த நாடு சீர்குலைந்துவிடும். ஏன் என்றால் உக்ரைன் ராணுவத்தின் முதுகெலும்பே ஸ்டார் லிங்க் இணைய சேவைதான்’’ என்று அண்மையில் கூறி இருந்தார் எலான் மஸ்க். இந்த எச்சரிக்கையை செய்த எலான் மஸ்க், ’’ஆனாலும் அப்படி செய்யப்போவதில்லை’’ என்றே சொல்லி இருந்தார்.
ஆனாலும் எலான் மஸ்க்கின் இந்த எச்சரிக்கை எந்த அளவிற்கு எரிச்சல் தந்திருக்கிறது என்பதை எக்ஸ் தள சைபர் அட்டாக்கின் மூலமாக வெளிப்படுத்தி இருக்கிறது உக்ரைன் என்றே தெரிகிறது.
uvsmyl