
தமிழ்நாட்டுக்கு அண்மையில் வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு அரசு மருத்துவம், பொறியியல் படிப்புகளைத் தமிழ் வழியில் படிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார். 1996ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க.தலைவர் கலைஞர் மு.கருணாநிதி ஆட்சிப் பொறுப்பை முதல்வரானபோதே உயர்கல்வித் துறையில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, தமிழிலேயே பொறியியல், மருத்துவம், சட்டம் உள்ளிட்ட தொழிற்படிப்புகளைப் படிப்பதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. அதுபோல, 2006-2011 தி.மு.க ஆட்சியில் பள்ளிக்கல்வி-உயர்கல்வி என கல்வித்துறை இரண்டாக பிரிக்கப்பட்டு, உயர்கல்வியில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் தொழிற்படிப்புகளைப் படிப்பதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஒரு குடும்பத்தில் முதன்முதலாக ஒருவர் கல்லூரியில் சேர்கிறார் என்றால் அந்த முதல் தலைமுறை பட்டதாரியின் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும் என்கிற திட்டத்தை கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நடைமுறைப்படுத்தியதால், பல குடும்பங்களில் டாக்டர்கள், இன்ஜினியர்கள், வக்கீல்கள் உருவாகினர். இந்தியாவில் இது மிகப் பெரிய அளவிலான கல்விப் புரட்சியாக அமைந்தது. எந்த மொழிவழியில் படிப்பது என்பதை மாணவர்களே தேர்வு செய்யும் வாய்ப்பையும் தமிழ்நாடு அரசு வழங்கியது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்களைப் பார்த்து நாகரிகமற்றவர்கள் என்று பேசியதற்கு மன்னிப்பு கேட்டு, அந்த வார்த்தைகள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், தி.மு.க. அரசு தமிழை வளர்க்கவில்லை என்றும், தமிழ்நாட்டில் ஆங்கில வழியில் பயில்கிறவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாகியிருக்கிறது என்றும், தமிழ்வழியில் பயில்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். ஒரு மொழியைப் படிப்பதற்கும், ஒரு மொழிவழியில் படிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழை ஒரு மொழியைப் பாடமாக எடுத்துப் படித்தாக வேண்டும் என்பது கட்டாயமாகும். அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் பொருந்தும் வகையில் இதற்கான சட்டம் 2006ஆம் ஆண்டிலேயே இயற்றப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன், அரசு அலுவலர் ஒருவர் தமிழ் தெரியாமலேயே பணியில் இருக்கிறார் என்பது தொடர்பான வழக்கில், அவரது நியமனத்திற்கு எதிரானத் தீர்ப்பை நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. ஏனெனில், தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் தமிழ் அறிந்திருக்கவேண்டும். பிற மாநிலத்தவர்களாக இருந்தாலும், குறிப்பட்ட காலத்திற்குள் தமிழைப் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அரசு அலுவலர் சி.பி.எஸ்.இ. பள்ளியில் தமிழ் அல்லாத பிற மொழிகளைப் படித்தவர் என்பதால் அவருடைய பணி நியமனத்திற்கு எதிராக உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, தமிழைக் கட்யமாகப் படித்திருக்க வேண்டிய சூழல் தமிழ்நாட்டில் உள்ளது.
அதே நேரத்தில், தமிழ் வழியில் (மீடியம்) படிப்பதா, ஆங்கில வழியில் படிப்பதா என்பது பெற்றோர் மற்றும் மாணவர்களின் தேர்வாக உள்ளது. தமிழ் வழி அரசுப் பள்ளிகள் மாநிலம் முழுவதும் உள்ள நிலையில், பெற்றோர் தங்கள் வசதிக்கேற்ற வகையில் தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள். அவை ஆங்கில வழியில் பாடங்களை சொல்லித் தருகின்றன. ஆங்கிலவழியில் படித்தாலும் தமிழ் ஒரு மொழிப்பாடமாக கட்டாயம் படித்தாக வேண்டிய சூழல் உள்ளது. மொழிவழிக் கல்வி என்பது பள்ளிக்கல்வியுடன் முடிந்துவிடுவதில்லை. உயர்கல்வியிலும் அது தொடரும் என்பதால் தங்களுக்குத் தேவையான-வசதியான மொழிவழியைத் தேர்ந்தெடுப்பது மாணவர்கள்-பெற்றோரின் உரிமையாகும். இது தமிழ்நாட்டில் சரியான முறையில் தொடர்கிறது.
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினராக உள்ள பேராசிரியர் ஷாமிகா ரவி ஒரு விவரத்தைப் பதிவிட்டிருக்கிறார். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அளவிற்குக்கூட தமிழ்நாட்டு மாணவர்கள் இல்லையென்றும், மூன்றாம் வகுப்பு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்தைப் படிக்கத் தெரியவில்லை என்கிறார் ஷாமிகா ரவி. இந்த புள்ளிவிவரம் எங்கிருந்து கிடைத்தது என்றால், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான விவரங்களை அந்தந்த மாநில அரசுகளே கொடுத்துள்ளன. தமிழ்நாட்டு மாணவர்களின் விவரங்களை மாநில அரசிடம் பெறாமல் ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் பெற்றுள்ளனர். ஏன் இந்த பாரபட்சம் என்பதற்கு பதில் இல்லை.
இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட, பள்ளிக்கல்வி முடித்து கல்லூரியில் சேரும் மாணவர்களின் விகிதம் தமிழ்நாட்டில்தான் அதிகம் என்கிற நிலையில், பள்ளிக்கல்வி பற்றிய ஷாமிகா ரவியின் புள்ளிவிவரம் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. அதற்கான மற்றொரு காரணம், ஷாமிகா ரவி என்பவர் ஆளுநர் ஆர்.என்.ரவியின் மகள்.
மொழி-இனம்-பண்பாடு-கல்வி-பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் தமிழ்நாட்டைப் புரிந்துகொள்ளாமலும் தமிழையும் தமிழர்களையும் இழிவுபடுத்தும் வகையிலும் செயல்படுவதே பா.ஜ.க.வினரின் முழு நேர வேலையாக உள்ளது.
wdnfwp
A great mix of information, inspiration, and useful tips in your blog posts.
You always select timely topics that fascinate my interest. I thank you for that!