
ஏ.ஐ. தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு புதிய புரட்சி என்று கருதப்படுகிறது சீனாவின் தற்போதைய அறிமுகமான ‘மானஸ் AI ஏஜன்ட்’ .
உலகம் முழுவவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏ.ஐ. ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் மெட்டா, ஓபன் ஏ.ஐ.க்கு போட்டியாக ‘டீப்சீக்’ ஏ.ஐ. மாடலை அறிமுகப்படுத்தி இருந்த சீனா தற்போது ‘மானஸ் AI ஏஜன்ட்’ அறிமுகம் செய்திருக்கிறது.
சீனா அறிமுகப்படுத்தி இருந்த டீப்சீக் ஏ.ஐ. பதிவிறக்கம் அதிகரித்து ஓப்பன் ஏ.ஐ. பெரும் பின்னடைவை சந்தித்தது. இந்த மானஸ் ஏ.ஐ. ஏஜன்டும் அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற கருத்து எழுந்திருக்கிறது.

மானசின் சிறப்பு என்ன?
நாம் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கும் வழக்கமான ஏ.ஐ. சாட்பாட்களை விட மானஸ் எந்த விதத்தில் வேறுபடுகிறது என்றால், ஒரு வேலையை மானஸ் வசம் ஒப்படைத்துவிட்டால், அதன்பின்னர் நம்மைச் சாராமல் அதுவாகவே முழுவதுமாக அந்த வேலையை முடித்துக் கொடுத்துவிடும் ஆற்றல் கொண்டதாக உள்ளது.
ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டியது குறித்து கேள்விக்கு, தரவுகளை சேகரித்து முழு அறிக்கையாக திரையில் காட்டிவிடுகிறது. புறப்படும் இடம், வரைபடங்கள், இணைய தொடர்பு முகவரிகள் என்று முழு விபரமும் அந்த அறிக்கையில் வந்துவிடுகிறது.
இணையதளங்கள் உருவாக்குவது, பயணங்களை திட்டமிடுதல், பங்குகளின் நிலவரம் ஆராய்ந்து முதலீட்டிற்கு உதவிடுது உள்ளிட்ட ஏராளமான செயல்களைச் செய்கிறது இந்த ஏ.ஐ. மாடல்.
மானஸ் ஏ.ஐ. மாடலால் நிதித்துறை, கஷ்டமர் சர்வீஸ், மனிதவளத்துறையில் பல அதிரடியான மாற்றங்கள் ஏற்படும் என்கின்ற எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது.

மானசை உருவாக்கியது யார்?
வுஹானின் ஹுவாஷோங் அறிவியல் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் கடந்த 2015ஆம் ஆண்டில் பட்டம் பெற்ற சியாவோ ஹாங் எனும் 33 வயது நபர் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளார். முன்னதாக இவர் வீ சாட் அடிப்படையிலான பிளாக்-இன் பயன்பாடுகளை உருவாக்கி இருந்தார். மோனிகா ஏ.ஐ. எனும் செயற்கை நுண்ணறிவு மாடலை கடந்த 2022இல் அறிமுகப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரவு முழுவதும் விழித்திருந்த பயனர்கள்:
சிக்கலான பணிகளைத் தன்னியக்கமாகச் செயல்படுத்தும் திறன் கொண்ட மானஸ் ஏ.ஐ. ஏஜன்ட் சீனாவின் ஸ்டார்ட்அப் மோனிகாவால் உருவாக்கப்பட்டது. கடந்த மார்ச் 6ஆம் தேதி அன்று மானஸ் ஏ.ஐ. ஏஜன்ட் ஐ வெளியிட்டது மோனிகா ஸ்டார்ட் அப் நிறுவனம். இந்த புதிய தொழில்நுட்பம் குறித்து அறிய பல பயனர்கள் இரவு முழுவதும் விழித்திருந்தனர்.
எக்ஸ் தளத்தில் மானஸ் ஏ.ஐ. ஏஜன்ட்டின் மாதிரி வீடியோ வெளியிடப்பட்டபோது ஒரே நாளில் 2 இலட்சத்திற்கும் மேலான பார்வைகளை ஈர்த்தது.
கேம் சேஞ்சர்:
பிரீவியுவாக மட்டுமே தற்பொது மானசை வெளியிட்டுள்ளது மோனிகா நிறுவனம். விரைவில் இது பொது பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. AI உலகில் மேனிஸ் ஒரு சாத்தியமான கேம்-சேஞ்சராக தனித்து நிற்கிறது என்கின்றனர் சில விமர்சகர்கள்.