
மாவட்ட செயலாளர்கள் நியமனத்தில் தவெகவில் தொடர்ந்து பிரச்சனை எழுந்து வருகிறது.
இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் 120 மாவட்டச் செயலாளர்களை நியமிப்பது என்று முடிவெடுத்து அதன்படி மாவட்டச் செயலாளர்களை நியமித்து வந்தார் தவெக தலைவர் விஜய்.
ஐந்து கட்டங்களாக 95 மாவட்டச் செயலாளர்களை அறிவித்திருந்தார் விஜய். இதில் கன்னியாகுமரி மாவட்டச்செயலாளரை மாற்றக்கோரி பல போராட்டங்கள் நடந்தன. குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளவர்களுக்கு எல்லாம் பதவியா? என்று கேட்டு தொண்டர்கள் கொந்தளித்து வந்தனர். தலைமைக்கு தொடர்ந்து புகாரளித்தும் வந்தனர். இதை எதையுமே விஜய் கண்டுகொள்ளவில்லை.

தற்போதும் அப்படித்தான் விஜய் மன்றத்தில் பல காலமாக உழைத்தவர்களுக்கு பதவி கொடுக்காமல் வேண்டியவர்களுக்கு பதவி கொடுக்கிறார் விஜய் என்ற குற்றச்சாட்டு இருந்து வருவதையும் அவர் கண்டுகொள்ளவே இல்லை.
இதனால் அடுத்தகட்டமாக 25 மாவட்டச் செயலாளர்களை அறிவிப்பதில் சிக்கல் இருந்தது. சென்னை, தூத்துக்குடி, திருவள்ளூர், பெரம்பலூர் உள்ளிடட் 6 மாவட்ட செயலாளர்களை நியமிப்பதில் சிக்கல் எழுந்தது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் தொகுதியை திருவள்ளூர் கிழக்கு என்று பிரித்து இதற்காக ஆர்.கே.நகரைச் சேர்ந்த மணியை மாவட்டச் செயலாளராக அறிவிக்க இருந்ததால் எதிர்ப்பு எழுந்தது. எங்கள் தொகுதியைச் சேர்ந்தவரைத்தான் நியமிக்க வேண்டும். பல ஆண்டுகளாக நாங்கள் வேலை செய்துகொண்டிருக்கும் போது திடீரென்று மாற்று தொகுதியில் உள்ளவரை நுழைப்பது நியாயமா? என்று கேட்டு அந்த மனுவை விஜயிடம் கொடுக்க முனைந்தனர்.
அது முடியாததால் விஜய்யின் காரை துரத்திச் சென்று மனு கொடுக்க முயன்றனர். அதுவும் முடியாமல் போனது. மனுவை வாங்காமல் காரை வேகமாக போகச் சொல்லிவிட்டார் விஜய்.’’ உங்களை நடுவீட்டில் உட்கார வைத்து அழகு பார்க்கிறோம். எங்களை நடுரோட்டில் அலையவிடுறீங்களே..’’ என்று குமுறினர் தவெகவினர்.

6 தொகுதி அதிருப்தி பற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாமல் மாவட்டச் செயலாளர்களை அறிவித்துவிட்டார் விஜய். இதில் தென் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சபரிநாதனுக்கு எதிர்ப்பு எழுந்திருக்கிறது. விஜய்யின் நீண்டகால உதவியாளராக இருப்பவர் ராஜேந்திரன். அவரது மகன் தான் சபரிநாதன்.
இத்தனை காலமும் மன்றத்தில் உழைத்தவர்களுக்கு பதவி கொடுக்காமல் உங்களுக்கு கார் ஓட்டியவர் என்பதற்காக அவரது மகனுக்கு பதவியை தூக்கிக்கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று கொதித்தெழுந்துள்ளனர் தவெகவினர்.