
ஒரே மர்மமாக இருக்குதே என்று பேச வைக்குது சீமானின் நடவடிக்கைகள் பலவும். ஒரு பக்கம் தனித்து போட்டி என்று வேட்பாளர்களை அறிவித்துக் கொண்டே இருக்கிறார். இன்னொரு பக்கம் அதிமுகவுடன் கூட்டணி, தவெகவுடன் கூட்டணி, பாஜகவுடன் ரகசிய டீல் என்று செய்திகள் பரவும் படியாக உள்ளன அவரது சந்திப்புகள் பலவும்.
ரஜினிகாந்தை சீமான் சென்று சந்தித்தபோது, அவர் மூலமமாக பாஜகவுக்குச் செல்கிறார், பாஜக அணிக்குச் செல்கிறார் சீமான் என்று செய்திகள் பரவின. ஆனால், அது அரசியல் சந்திப்பு அல்ல என்றே இப்போதும் மறுத்து வருகிறார்.
‘’ரஜினி என்ன பிஜேபியா? அவர நான் அன்பின் நிமித்தமா, மரியாதை நிமித்தமாகத்தான் சந்திச்சேன்’’என்றே இன்றைக்கு செய்தியாளரிடம் பேசி இருக்கிறார் சீமான்.

தவெகவுடன் மீண்டும் நாதக கூட்டணி என்ற பேச்சு வந்தபோது அதை மறுத்தார் சீமான். ஆனால், தவெக தரப்பில் சீமானிடம் ஜான் ஆரோக்கியசாமி பேசியது உண்மை என்றே சொல்கிறது பனையூர் வட்டாரம்.
பாஜகவின் பல திட்டங்களுக்கும், கொள்கைகளுக்கும் சீமான் ஆதரவளித்து வந்தபோதும், பாஜகவுடன் கூட்டணியா? என்று கேட்டுவிட்டால், எக்காலத்திலும் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது. தனித்து போட்டிதான் என்று வழக்கமான பதிலை சொல்லி மழுப்பி வந்தார்.
தொடர்ந்து ரங்கராஜ் பாண்டேவை சீமான் ஆதரித்து பேசி வருவதும், சீமானை பாண்டே ஆதரித்து பேசி வருவதும் பாஜக பக்கம் சாய்கிறாரா சீமான்? என்ற சந்தேகத்தை எழுப்பி வந்தது.

இந்நிலையில் நேற்று இரவு சென்னை வந்த நிர்மலா சீதாராமன், கிண்டியில் உள்ள ஓட்டலில் சீமானை வரவைத்து பேசி இருக்கிறார்.
இந்த ரகசிய சந்திப்பு வெளியே கசிந்தும் சந்திப்பே நடக்கவில்லை என்று மறுக்கிறார் சீமான்.
’’சந்திச்சா சந்திச்சேன்னு சொல்லப்போறேன். எனக்கென்ன பயமா? தயக்கமா?’’ என்கிறார்.
நிர்மலாவுடனான சந்திப்பில் நடந்தது என்ன? அந்த சந்திப்பை ஏன் மறைக்கப் போராடுகிறார் சீமான்? முழுக்க முழுக்க நனைந்த பின்னரும் இன்னமும் ஏன் சீமான் முக்காடு போட்டுக் கொண்டிருக்கிறார்? என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.