
ஷங்கரின் பட்டறையில் இருந்து வந்து ராஜா ராணி மூலம் அறிமுகமான இயக்குநர் அட்லி, அப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய்யை வைத்து தொடர்ந்து தெறி, மெர்சல், விசில் படங்களை
இயக்கி முன்னணி இயக்குநர் ஆனார். இதன் மூலம் இந்திக்கு சென்று ஷாருக்கானை வைத்து ஜவான் படம் இயக்கினார். இப்படம் 1000 கோடி ரூபாய் வசூலை வாரி குவித்தது.
இதையடுத்து அட்லி இயக்கத்தில் 6ஆவது படமாக அல்லு அர்ஜூனை வைத்து இயக்குகிறார். இது அல்லு அர்ஜூனுக்கு 22 ஆவது படம்.
புஷ்பா -2 படம் வசூலில் சக்கைப்போடு போட்டது. 1500 கோடி ரூபாய்க்கு மேல் அப்படம் வசூலை வாரிக்குவித்துவிட்டது. இதன் மூலம் இந்தியாவின் டாப் நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார் அல்லு அர்ஜுன்.

இந்த பெரு வெற்றியைத் தொடர்ந்து புஷ்பா-3தான் வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், இயக்குநரோ ராம்சரணை வைத்து இயக்க தயாராகிவிட்டதால் அதை முடித்துவிட்டுதான் வரவேண்டிய நிலை. அதனால்தான் புஷ்பா -3 படம் 2028ஆம் ஆண்டில் ரிலீஸ் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
இதற்கிடையில் அல்லு அர்ஜூனின் அடுத்த படத்தை யார் இயக்குவது என்ற போட்டியில் அட்லி முந்திக்கொண்டிருக்கிறார்.
இந்த சினிமா பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறது. இப்படத்தில் அல்லு அர்ஜூன் சம்பளம் 300 கோடி ரூபாய் என்றும், அட்லியின் சம்பளம் 100 கோடி ரூபாய் என்று சொல்கிறார்கள்.
நடிகர், இயக்குநரின் சம்பளமே 400 கோடி ரூபாய் என்றால் இப்படத்தின் பட்ஜெட் 1000 கோடி ரூபாய்க்கு மேல் என்று சொல்கிறார்கள். சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

எந்திரன் படத்தில் உதவி இயக்குநராக பணி புரிந்ததால் அதுமாதிரி டெக்னிக்கல் படமாக எடுக்கலாம் என்று களமிறங்கி இருக்கிறார் அட்லி.
இந்தப்படத்தில் கல்கி படத்தின் கமல் கெட்டப் மாதிரி, சூப்பர் மேன் மாதிரியான ஒரு கெட்டப்பில் அல்லு அர்ஜூன் நடிக்கிறது என்பது அறிமுக வீடியோ உணர்த்துகிறது.
அவதார், அவெஞ்சர்ஸ், டெர்மினேட்டர் என்று ஹாலிவுட் படங்களுக்கும் தெலுங்கில் கல்கி, தமிழில் இந்தியன் -2 படங்களுக்கும் பணிபுரிந்த LOYA VFX 2 நிறுவனத்துடன் கை கோர்த்திருக்கிறார் அட்லி.
அல்லு அர்ஜூனின் பிறந்த நாளில் இந்தப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி இருக்கிறது.
புஷ்பாவை போலவே அல்லு அர்ஜூன் ரசிகர்களுக்கு இந்தப்படம் ஒரு வித அனுபவத்தைக் கொடுக்கும் என்று தெரிகிறது.