
நஷ்ட ஈடு கேட்டதோடு அல்லாமல் மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று குட் பேட் அக்லி திரைப்பட தயாரிப்பாளருக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார் இளையராஜா.
ஆரம்ப கால நண்பர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கே ராயல்டி கேட்டு நோட்டீஸ் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியவர் இளையராஜா. அதன் பின்னர் தொடர்ந்து ராயல்டி உரிமைக்காக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார் இளையராஜா.
குணா படத்தை மையமாக் கொண்டு வந்த மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் வெற்றிக்கு குணா படம் மட்டுமல்ல, அப்படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலும்தாம். அந்தப் படம் பெருவெற்றி பெற்றதும் பாடலை அனுமதி இல்லாமல் படத்தில் பயன்படுத்தியதற்காக நஷ்ட ஈடு கேட்டார்.
அனுமதி இல்லாமல் பாடலை பயன்படுத்தியததால் நஷ்ட ஈடு கேட்டதோடு நின்றிருந்த இளையராஜா, குட் பேட் அக்லி படத்தில் ஒத்த ரூபா, என் ஜோடி மஞ்சக்குருவி, இளமை இதோ இதோ ஆகிய மூன்று பாடல்களையும் அனுமதி இன்றி பயன்படுத்தியதற்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு பட நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதோடு அல்லாமல்,

படத்தில் தனது அந்த 3 பாடல்கள் திரிபு பதிப்பு செய்யப்பட்டிருப்பதாகவும், அதாவது ரீமிக்ஸ் செய்யப் பட்டிருப்பதாகவும், அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அந்த 3 பாடல்களையும் 7 நாட்களுக்குள் படத்தில் இருந்து நீக்கி விட வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவிர, மன்னிப்பு கேட்ட பின்னரும் அந்த 3 பாடல்களும் படத்தில் இடம்பெற அனுமதி வழங்குவதா? இல்லை, படத்தில் இருந்து நீக்குவதா? தயாரிப்பு நிர்வாகம் தரும் விளக்கத்திற்குப் பின்னர் ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டும் என்று தனது வழக்கறிஞர் மூலம் தெரிவித்திருக்கிறார் இளையராஜா.
குட் பேட் அக்லி படத்தின் வெற்றிக்கு காரணமே அந்தப்பாடல்களை ரீமிக்ஸ் செய்ததுதான். ஆனால் அந்தப் பாடல்களையே நீக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுப்பதால் திக்குமுக்காடி நிற்கிறது படக்குழு.