
இந்திய சமூகத்தின் அடையாளமாக இருப்பது சாதிகளே. அது ஒரு தரப்புக்கும் அடையாளம். இன்னொரு தரப்புக்கு அவமானம். ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ சமுதாயத்திற்கு சாதிகளே புற்றுநோய். அது, ஆயிரமாயிரம் ஆண்டுகாலமாக இந்திய சமூகத்தின் ரத்தத்துடன் ஊறிப் போயிருக்கிறது. சாதியின் பெயரால் உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு இடஒதுக்கீட்டின் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி என சமுதாய அந்தஸ்து வளர்வதற்குப் பெயர்தான் சமூக நீதி. இப்படி இந்தியாவின் அரசியல் நிர்வாகம் முதல் குடும்பங்களின் நிகழ்வுகள் வரை சாதி வேரோடியிருக்கிறது. இதனை அடியோடு நீக்கி, சமத்துவத்தை மலரச் செய்வது என்பது அத்தனை எளிதான வேலையல்ல. அது தொடர்ச்சியான செயல்திட்டம்.
ஆட்சியின் திட்டங்கள், நீதிமன்ற சட்டங்கள், தனிமனித செயல்பாடுகள், இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைகள் இத்தனையும் சரியாக அமையும்போதுதான் சாதியற்ற சமுதாயம் மலரும். தேர்தல் அரசியலில் சாதிகளின் ஓட்டு எண்ணிக்கை பல தொகுதிகளின் முடிவுகளை நிர்ணயிக்கக்கூடியதாக இருப்பதால் எந்தெந்த சாதிகள் எந்தெந்த தொகுதிகளில் வலுவாக இருக்கின்றனவோ அந்த சாதி வேட்பாளர்களே ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அதற்கேற்ப அந்தந்த பகுதிகளின் தொழில், கல்வி நிலையங்கள், புறச்சூழல்கள் அனைத்திலும் அந்தந்த சாதிகளின் ஆதிக்கம் தவிர்க்க முடியாததாக இருக்கிறது.
தங்கள் சாதிக்கு மேல் எத்தனை சாதிகள் உள்ளன என்பதைவிட, தங்களுக்கு கீழே எத்தனை சாதிகள் இருக்கின்றன என்பதைக் கணக்கிட்டு, தன் சாதி அடையாளத்திற்காகப் பெருமைப்படும் மனிதர்கள், அவர்கள் பங்கேற்றுள்ள அமைப்புகள், அவை சார்ந்த அரசியல் என எல்லா நிலைகளிலும் சாதி வேர் பரப்பியுள்ளது. சாதி இல்லையடி பாப்பா என்று சொல்லிக் கொடுக்கும் பள்ளியிலும் என்ன சாதி என்று கேட்டுத்தானே அட்மிஷன் போடுகிறார்கள் என்று சாதிப் பெருமை கொண்டவர்கள் சொல்வதைக் கேட்கலாம். அதை இளையதலைமுறையினரும் நம்புவதைப் பார்க்கலாம்.
மனித உடலில் ஒரு நோய் இருந்தால் அந்த நோயின் தன்மை என்ன என்பதை பரிசோதித்து அறியவேண்டியது அவசியம். அதற்கேற்பத்தான் சிகிச்சை அளிக்க முடியும். அதுபோல இந்திய சமூகத்தில் சாதி என்ற நோய் பன்னெடுங்காலமாகப் பரவிக் கிடக்கிறது. அதற்கேற்ப சிகிச்சை அளிப்பதற்காகத்தான் பட்டியல் இனமா, பழங்குடிகளா, மிக பிற்படுத்தப்பட்டவர்களா, பிற்படுத்தப்பட்டவர்களா, இதர சாதிகளா என சான்றிதழ் வழங்கப்படுகின்றன. அதுதான் பரிசோதனை முடிவு. அதைப் பொறுத்துதான் புறநோயாளியாக மருந்து மாத்திரை மட்டும் கொடுத்தால் போதுமா, அட்மிஷன் போட்டு கவனிக்க வேண்டுமா, ஆபரேஷன் செய்ய வேண்டுமா, ஐ.சி.யூ.வில் வைத்து பராமரிக்க வேண்டுமா என சிகிச்சை முறைகளை வரையறை செய்ய முடியும். சமூகத்தில் சாதி நோய் இல்லை என்றால் பரிசோதனைகளும் தேவைப்படப் போவதில்லை.
தற்போதைய சூழலில், பள்ளிகளிலேயே மாணவர்களிடம் சாதி சார்ந்த அடையாளங்கள் வெளிப்படுகின்றன. அது பெருமிதமாகவும், பிறர் மீதான பகையாகவும் மாறுகிறது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துகிற அளவிற்கு ஒரு சில மாவட்டங்களில் மாணவர்களிடம் வன்முறை போக்கு அதிகரித்து வருகிறது. மிகவும் கவலையளிக்கும் இந்தப் போக்கு குறித்து எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அரசுத் தரப்பிலிருந்து என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது. அரசியல் ரீதியாக இது தொடர்ந்தாலும், சரியானத் தீர்வுகள் கிடைத்தபாடில்லை.
இந்த நிலையில், ஒரு சாதி அமைப்பு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரதசக்கரவர்த்தி அளித்துள்ள உத்தரவில், பள்ளிகளின் பெயர்களை உள்ள சாதி அடையாளங்களை நீக்கவேண்டும் என்றும், ஒரு சில சமுதாயத்தினரின் நலனுக்காக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளிலும் அந்தந்த சாதிப் பெயர்களை நீக்கிவிட்டு, அரசுப்பள்ளிகள் எனப் பெயர் வைக்க வேண்டும் என்றும், சங்கங்களைப் பதிவு செய்யும்போது சாதிப் பெயர்கள் இருக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளில் பெயர்களில் சாதி நீக்கம் செய்ய காலக்கெடுவும் இந்த உத்தரவில் இடம்பெற்றுள்ளது.
வரவேற்கத்தக்க இந்தத் தீர்ப்பு எந்தளவு செயல்பாட்டுக்கு வரும் என்பது முக்கியமானது. தனி நீதிபதியின் தீர்ப்பு, பெஞ்ச்சில் மேல்முறையீட்டிற்கோ, உச்சநீதிமன்ற முறையீட்டிற்கோ செல்லும் வாய்ப்பு உள்ளது. அப்போது இந்த கெடு தளர்த்தப்படலாம். அப்பீலில் வாதங்கள் எப்படி எடுத்து வைக்கப்படும், தீர்ப்பு எப்படி அமையும் என்பதை இப்போது சொல்ல முடியாது. எனினும், சாதி எனும் சமூக நோய்க் கட்டியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை கத்தியாகவே இந்த உத்தரவைக் கருத வேண்டும். ஆபரேஷன் நடக்குமா என்பது இனிமேல் தெரியும்.
Awesome https://is.gd/tpjNyL