
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சீவ் கண்ணாவின் பதவிக்காலம் வரும் மே மாதம் 13ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அவரைத் தொடர்ந்து புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவி ஏற்க உள்ளார்.
கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவி ஏற்றார். இவரது பதவிக்காலம் வரும் மே மாதம் 13ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், அடுத்த தலைமை நீதிபதியின் பெயரைப் பரிந்துரை செய்யும்படி மத்திய அரசு சஞ்சீவ் கண்ணாவிடம் கேட்டுள்ளது. இதனையடுத்து, மூத்த நீதிபதி பி.ஆர். கவாயின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் வரும் மே, 14ம் தேதி பதவி ஏற்கவுள்ளார். 2025, நவம்பர் மாதம் வரை இவர் தலைமை நீதிபதியாகப் பதவி வகிப்பார்.
இவர் முன்னதாக, 1992ல் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வில் உதவி அரசு வழக்கறிஞராகவும் கூடுதல் அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து 2003ல் மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, பின்னர் 2005ல் நீதிபதியானார். மே 24, 2019 அன்று உச்ச நீதிமன்றத்திற்கு அவர் பதவி உயர்வு பெற்றார்.
மத்திய அரசு 2016ம் ஆண்டு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பான வழக்கில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியானது என வழங்கப்பட்ட தீர்ப்பில் அந்த அமர்வின் இருந்த நீதிபதிகளில் கவாயும் ஒருவர் ஆவார். அது மட்டுமின்றி ஜம்மு காஷ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்திற்கான அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது சரி என வழங்கப்பட்ட தீர்ப்பிலும் இவரது பங்கு இருந்துள்ளது.