
அண்ணாமலையின் அடாவடியால் ஏகத்திற்கும் கடுப்பில் இருக்கும் அதிமுகவுடன் கூட்டணி பேச்சு நடத்த வேண்டும் என்றால் அதற்கு தோதாக நயினார் நாகேந்திரன் இருப்பார் என்பதால் அவரை தமிழ்நாடு பாஜகவின் தலைவராக்க முடிவு செய்தது தலைமை.
அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து தூக்கினால்தான் கூட்டணி பேச்சுவார்த்தைக்கே வருவோம் என்று டெல்லியில் அமித்ஷாவிடம் நிபந்தனை வைத்த இபிஎஸ், அதே மாதிரி சென்னை வந்த அமித்ஷா, அண்ணாமலையை தூக்கிவிட்டு நயினார் நாகேந்திரனை கொண்டு வந்த பின்னர்தான் கூட்டணியை அறிவிக்க வந்தார் இபிஎஸ்.
நயினாரை புதிய தலைவராக கொண்டு வந்துவிட வேண்டும் என்று தலைமை முடிவெடுத்துவிட்டாலும், தலைவர் தேர்வு, விருப்ப மனு தாக்கல் என்று தொண்டர்கள் கண் துடைப்பு நாடகம் நடத்தியது பாஜக. விருப்ப மனு தாக்கல் செய்ய வரும்போதே கமலாலயத்தின் வாசற்படியை தொட்டு வணங்கினார் நயினார். அப்போதே அவர்தான் அடுத்த தலைவர் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.
நயினார் விருப்ப மனு தாக்கல் செய்த பின்னர் வேறு யாருமே விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் போட்டியின்றி நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
உண்மையில் நடந்தது என்னவென்றால் போட்டிக்கு பலரும் முண்டியடித்திருக்கிறார்கள். அவர்களை எல்லாம் விருப்ப மனுக்கள் கொடுக்க விடாமல் செய்ய படாத பாடு பட்டிருக்கிறது பாஜக மாநில நிர்வாகம்.

எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், ராம.சீனிவாசன், கரு.நாகராஜன், ஏ.பி.முருகானந்தம் உள்ளிட்ட பலரையும் விருப்ப மனு செய்ய விடாமல் டெல்லி தலைமை அவர்களின் கைகளை கட்டிப்போட்டுவிட்டது.
ஆனாலும் திருவண்ணாமலை மாவட்ட சீனியர் ஒருவர் தனது ஆதரவாளர்கள் இரண்டு பேரை அனுப்பி விருப்ப மனு தாக்கல் செய்யச் சொல்லி இருக்கிறார். வாசலிலேயே அந்த 2 பேரையும் மடக்கிப்பிடித்து துரத்தி அடித்திருக்கிறார்கள்.
தலைமையின் முடிவுக்கு எதிராக நடந்ததாக அந்த சீனியரின் பதவியை பறித்துவிட்டார்களாம். அடுத்த மாநில நிர்வாகிகள் பட்டியலிலும் அவர் பெயர் இருக்காது என்று அடித்துச்சொல்கிறது கமலாலயம் வட்டாரம்.