
அமேசான் நிறுவனத்தின் முன்னாள் CEO ஜெஃப் பெசோஸ் ‘Blue Origin’ என்ற விண்வெளி நிறுவனத்தை நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் இந்நிறுவனம் பெண்கள் மட்டும் அடங்கிய குழுவை விண்வெளிக்குச் சுற்றுலா அனுப்பியது மிகப்பெரிய அளவில் ஊடகங்களில் செய்தியானது.
Blue Origin நிறுவனம் விண்வெளி சுற்றுலா அனுப்புவது இது முதல் முறை கிடையாது. 2021ம் ஆண்டு முதல் பல முறை இப்படி சுற்றுலா அனுப்பியுள்ளது. முழுக்க முழுக்க பெண்கள் மட்டும் சென்ற இந்த விண்வெளி சுற்றுலா அந்நிறுவனத்தின் 11வது பயணமாகும்.
நியூ ஷெப்பர்ட் ராக்கெட் மூலம் பெசோஸின் காதலியான லாரன் சான்செஸ், பாடகி கெட்டி பெர்ரி, தொலைக்காட்சி தொகுப்பாளர் கேல் கிங், நாசாவின் ராக்கெட் விஞ்ஞானி ஆயிஷா போவே, மனித உரிமை ஆர்வலர் அமாண்டா இங்குயென் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் கேரியன் ஃப்ளின் என மொத்தம் ஆறு பேர் பயணம் செய்துள்ளனர்.
இந்த விண்கலம், ஆறு பெண்களையும் பூமியின் வளிமண்டலத்துக்கு அப்பால் இருக்கும் கார்மன் எல்லைக் கோடு வரை கொண்டு சென்றது. அங்கு அவர்கள் சில நிமிடங்களுக்கு zero gravity எனப்படும் ஈர்ப்பு விசை இல்லா நிலையை உணர்ந்துள்ளனர்.

கார்மன் கோடு என்பது ஒரு கற்பனையான எல்லைக்கோடாகும். இது பூமியின் கடல் மட்டத்திலிருந்து 100 கி.மீ உயரத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. இப்பகுதி பூமி வளிமண்டலத்தின் முடிவாகவும் விண்வெளியின் தொடக்கமாகவும் கருதப்படுகிறது.
Blue Origin விண்கலமானது பைலட் இன்றி முழுவதும் தானாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த பயண நேரம் என்பது ஏறத்தாழ 11 நிமிடங்கள் மட்டுமே இருக்கும் (10 நிமிடம் 21 விநாடிகள்). பூமியிலிருந்து புறப்படும் ராக்கெட் குறிப்பிட்ட தூரம் சென்ற பிறகு பயணிகள் உள்ள விண்கலனை விண்வெளி நோக்கி வீசும். அந்த விண்கலம் கார்மன் கோட்டுக்குச் சற்று மேலே வரை சென்று பின்னர் பூமியின் ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட பகுதிக்குள் வந்துவிடும். இந்த இடைப்பட்ட நேரத்தில் விண்கலத்தில் இருப்பவர்கள் விண்வெளியில் உள்ள சூழலை உணருவார்கள்.
ஈர்ப்பு விசைப் பகுதிக்கு விண்கலம் வந்ததும் soft landing முறையில் பாராசூட் உதவியுடன் தரையிறக்கப்படும். விண்கலத்தை மேலே கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட ராக்கெட் பூஸ்டரும் தானாகத் தரையிறங்கிவிடும். இம்முறையிலேயே இந்த விண்வெளி சுற்றுலா மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விண்வெளி சுற்றுலாவை ஊக்குவிப்பதே இதன் நோக்கம் எனச் சொல்லப்பட்டாலும், எதிர் காலத்தில் விண்வெளி தொடர்பாக இளைஞர்களின் உத்வேகத்திற்கும் இது உதவும் என்றும் கூறப்படுகிறது.
Very good https://is.gd/tpjNyL