
பூமியைத் தாண்டி வேற்று கிரகத்தில் உயிரினம் இருப்பதற்கான புதிய சாத்திய கூறுகளை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி நிக்கு மதுசூதன் தலைமையிலான குழு கண்டறிந்துள்ளது.
விண்வெளி தொடர்பான ஆராய்ச்சியில் மிகவும் சுவாரசியமாகப் பார்க்கப்படுவது ஏலியன் எனப்படும் வேற்று கிரகத்தில் உயிரினம் இருக்குமா? இருந்தால் அது எப்படி இருக்கும்? என்பது பற்றிய செய்திகள் தான். சிந்தனை அளவில் ஏலியன் பற்றி ஆய்வாளர்கள் பேசத் தொடங்கிய நாள் முதலே, இது தொடர்பான கற்பனை கதைகளும், திரைப்படங்களும் வெளிவரத் தொடங்கிவிட்டன.
தற்போது ஏலியன் தொடர்பான செய்திக்கு அறிவியல் பூர்வமான புதிய ஆதாரம் கண்டறியப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 124 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள K2-18b என்ற கோள் அமைந்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியில் பதிவான தரவுகளைக் கொண்டு, இக்கோளில் உயிரினங்கள் இருக்கலாம் என்பதற்கான ஆதாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாகப் பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுவிற்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி நிக்கு மதுசூதன் தலைமை தாங்கியது குறிப்பிடத்தக்கது.
K2-18b கோள் பூமியைவிட இரண்டரை மடங்கு பெரிது, பூமியிலிருந்து சுமார் 700 டிரில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது. இக்கோளின் வளிமண்டலத்தில் நீராவி இருப்பதை ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி கடந்த 2019ம் ஆண்டு கண்டறிந்தது. அதனைத் தொடர்ந்து, இதில் உயிரினங்கள் வாழ்வதற்கான அதிகபட்ச சாத்தியக்கூறுகள் உள்ள கிரகமாக அறிவிக்கப்பட்டது.
ஆழமான, மிகப் பரந்த பெருங்கடல் அமைந்துள்ளதாகவும், இதனால் அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளதாகவும் கேம்பிரிட்ஜ் ஆய்வுக் குழு 2023ம் ஆண்டு தெரிவித்தது.

இவ்வளவு தொலைவில் உள்ள கோளினை ஆய்வு செய்வது என்பது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலமே சாத்தியமானது. சூரியனைவிடச் சிறிதாக உள்ள சிவப்பு நட்சத்திரத்தின் வழியாக இந்த கோள் கடந்து செல்லும் போது, அதன் மீது படும் நட்சத்திரத்தின் ஒளி மூலம் கோளின் வேதியியல் கலவையை ஆய்வு செய்ததின் முடிவின் மூலமாக இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படிச் செய்யப்பட்ட ஆய்வில், உயிர்களுடன் தொடர்புடைய இரண்டு மூலக்கூறுகளின் வேதியியல் அடையாளங்கள் அக்கோளின் வளிமண்டலத்தில் இருப்பதாக கேம்பிரிட்ஜ் ஆய்வுக்குழு கண்டறிந்துள்ளது. Dimethyl sulfide (DMS) மற்றும் Dimethyl disulfide (DMDS) ஆகியவையே அந்த வேதியியல் மூலக்கூறுகளாகும். பூமியில் இந்த வாயுக்கள் கடலில் உள்ள ஃபைட்டோபிளாங்டன் மற்றும் பாக்டீரியாக்கள் மூலம் உற்பத்தியாகிறது.
பூமியில் உள்ள இந்த வாயுவின் அளவை விட அக்கோளின் வளிமண்டலத்தில் பல மடங்கு அதிகம் உள்ளதாகவும், உயிர்களுடனான தொடர்பு உண்மையாக இருந்தால், இக்கோளில் ஏராளமான உயிர்கள் இருக்கும் என்றும் நிக்கு மதுசூதன் தெரிவித்துள்ளார்.
வேற்று கிரகத்தில் உயிரினம் இருப்பதற்கான புதிய தரவுகள் கிடைக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த தகவல் போதுமானதாக இல்லை என விஞ்ஞானிகளில் சிலரும் கருத்து தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக இன்னும் நீண்ட ஆய்வுகள் தேவை என்ற கருத்தையும் முன்வைக்கின்றனர்.
இதனை மதுசூதனும் ஏற்கிறார். இவர் தலைமையிலான ஆய்வுக் குழு மற்ற குழுக்களுடன் சேர்ந்து DMS மற்றும் DMDS வாயுக்கள் உயிரற்ற ஒன்றால் உற்பத்தியாகக் கூடுமா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
எப்படி இருப்பினும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒன்றைக் காட்டிலும் மற்றொன்று சிறந்தது என வலுவான ஆதாரங்களின் அடிப்படையிலேயே நிறுவப்படும். அறிவியலுக்கு முடிவு என்பது கிடையாது. அப்படிப் பார்க்கையில், வேற்று கிரக வாசிகள் குறித்த தற்போது வரையிலான ஆய்வுகளில் நிக்கு மதுசூதன் குழு கண்டறிந்தது புதிய ஆதாரமாகவே உள்ளது. ஆய்வுகள் தொடரும் நிலையில், K2-18b கோளில் உயிரினம் உள்ளதா? இல்லையா? என இன்னும் வலுவான ஆதாரங்களுடனான ஆய்வு முடிவுகள் வெளிவரும் என எதிர் பார்க்கலாம்.