
ADMK BJP Alliance Edapadi palaniswami meets Amit Shah in Delhi
”பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் தேர்தல் கூட்டணிதான் வைத்திருக்கிறோம். அதற்காக கூட்டணி ஆட்சி என்பதெல்லாம் கிடையாது. அமித்ஷாவே சொல்லிவிட்டார், இந்தியாவுக்கு மோடி, தமிழ்நாட்டுக்கு நான் தலைமை என்று”-ஊடகங்களிடம் இப்படி சொன்னவர் அ.தி.மு.க பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி. அவரைத் தொடர்ந்து அ.தி.மு.க.வின் மூத்த பிரமுகரும் மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை, “தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சே கிடையாது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் அ.தி.மு.க தனித்துதான் ஆட்சி அமைக்கும். மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் அ.தி.மு.க.தான் தனித்து ஆட்சி அமைக்கும்” என்றார். அவர் இப்படி சொன்ன அதே நாளில், திருநெல்வேலி பகுதிகளில் ‘வருங்கால முதல்வர்” என்று பா.ஜ.க.வின் புதிய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை வாழ்த்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் செய்தி சேனல்களில் பரபரப்பு செய்திகள் ஒளிபரப்பாயின. சமூக வலைத்தளங்களிலும் அவை பரவின.
தேர்தலுக்கு ஓராண்டு உள்ள நிலையில் அ.தி.மு.க. தரப்பில் ஏன் இத்தனை பரபரப்பு? எதற்காக கூட்டணி ஆட்சி இல்லை என்ற விளக்கம்? எடப்பாடி பழனிசாமி சொல்வது போல, இந்தியாவுக்கு மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி என்று அமித்ஷா சொன்னது உண்மை. எடப்பாடியை பக்கத்தில் வைத்துக்கொண்டுதான் அமித்ஷா அதை ஊடகங்களிடம் சொன்னார். இந்தியில் மட்டுமே அமித்ஷா பேசினார். அருகில் அமைதியாகவே உட்கார்ந்திருந்தார் எடப்பாடி. தமிழ்நாட்டில் கூட்டணிக்கு எடப்பாடிதான் தலைவர் என்று அமித்ஷா சொன்னபோதும், கூட்டணித் தலைவரான எடப்பாடி அந்த செய்தியாளர் சந்திப்பு முடியும்வரை எதுவும் பேசவில்லை. அமித்ஷா புறப்பட்டபிறகு, எடப்பாடியிடம் செய்தியாளர்கள் மைக் நீட்டியபோதும் அவர் பேசவில்லை. எல்லாவற்றையும் அமித்ஷா தெளிவாக சொல்லிவிட்டார் என்றார்.
அமித்ஷா பேசியது இந்தி மொழியில். தமிழ்நாட்டில் ஒருவர் முழுக்க முழுக்க இந்தியில் இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பேட்டியை கொடுத்தார் என்றால் அவர் அமித்ஷா மட்டும்தான். இருமொழிக் கொள்கையை ஆதரிப்பதாக சொல்லும் அ.தி.மு.க. தரப்பில் அதற்கு எந்த எதிர்ப்போ மறுப்போ இல்லை. அமித்ஷாவுக்கு இந்தியும் குஜராத்தியும்தான் நன்றாகத் தெரியும். அதனால் அவர் தனக்குத் தெரிந்த மொழியில் பேசுவதும், அதை மொழிபெயர்ப்பாளர் தமிழில் சொல்வதும் ஏற்கக்கூடியதே. பக்கத்தில் இருந்த எடப்பாடிக்கு எந்தளவு இந்தி தெரியும் என்பது யாருக்கும் தெரியாது. அவரும் அது குறித்து வெளிப்படுத்தியதில்லை.
இந்தியில் அமித்ஷா பேட்டி கொடுக்கும்போது, “2026ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் அமையும்” என்று இந்தியில் சொன்னார். அவரது மொழிபெயர்ப்பாளரும், “கூட்டணி ஆட்சி அமையும்” என்று தமிழில் சொன்னார். அப்போது தனித்த லோகத்தில் இருப்பது போல எடப்பாடி அமர்ந்திருந்தார். ஏதோ ஒரு நெருக்கடியில் சிக்கியிருப்பது போல அவரது முகமும் உடல்மொழியும் இருந்ததை அந்தப் பேட்டியின் வீடியோவை இப்போது பார்த்தாலும் புரிந்து கொள்ளலாம். அதனால், கூட்டணி ஆட்சி என்று அமித்ஷாவின் மொழிபெயர்ப்பாளர் சொன்னதை எடப்பாடியால் புரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கலாம். அல்லது அமித்ஷா சார்பாக என்ன சொன்னாலும் அதை எதிர்த்தோ-மறுத்தோ பேசுவது அதிகப்பிரசங்கித்தனம் என எடப்பாடி பழனிசாமி நினைத்திருக்கலாம். ஆனால், அமித்ஷா சொன்னதும்- அவரது மொழிபெயர்ப்பாளர் தெரிவித்ததும் கூட்டணி ஆட்சி என்பதைத்தான். அத்துடன், மற்ற விவரங்கள் தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். அதனால்தான் பா.ஜ.கவினர் தங்கள் மாநிலத் தலைவரை வருங்கால முதல்வரே என்று வாழ்த்திப் போஸ்டர் அடித்தனர்.
இது ஊடகங்களைக் கடந்து, தமிழ்நாடு அரசியல் களத்திலும், குறிப்பாக அ.தி.மு.க. தொண்டர்களிடத்திலும் விவாதமாக மாறியது. பா.ஜ.க விரும்பியபடி கூட்டணி உரிமைகளை விட்டுக்கொடுக்க அ.தி.மு.க தயாராகிவிட்டதா என்று கேள்விகள் எழுந்தன. ஒரு சில ஊர்களில் அ.தி.மு.க. பிரமுகர்கள் வெளிப்படையாகவே தங்கள் அதிருப்தியை கட்சி நிர்வாகிகள் கூட்டங்களில் வெளிப்படுத்தினார்கள். அதற்கு பா.ஜ.க. தரப்பிலிருந்தும் பதில்கள் தரப்பட்டன. தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட கூட்டணியில், இப்போதே சர்ச்சைகள் உருவாவது சரியாக இருக்காது என்பதால்தான், “கூட்டணி பற்றி யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம்” என்று அ.தி.மு.க தலைமை அறிவுறுத்தியுள்ளது. பா.ஜ.க. தரப்பிலோ, “அமித்ஷா தெளிவாக சொல்லிவிட்டார். எனவே நம் கட்சியினர் அது பற்றி பேச வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளனர்.
தாமரைக்கு ஒற்றைக்கால் உண்டு. தாமரை சின்னத்தில் போட்டியிடுபவர்கள் தமிழ்நாட்டு அரசியலில் நிற்க வேண்டுமென்றால் தங்கள் சின்னத்திற்கு இன்னொரு கால் வேண்டும். அதுதான் இரட்டை இலைகளைத் தாங்கி நிற்கும் காம்பு என்ற கால். அந்தக் காலின் துணைகொண்டு இலைக்கு மேலே தாமரையை மலரச் செய்துவிடவேண்டும் என்பதுதான் அமித்ஷாவின் அரசியல் கணக்கு. இது எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும். அவரிடம் திருப்பித் திருப்பி கேட்டால், பாவம் என்ன செய்வார்?
Good https://is.gd/tpjNyL