
மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் தமிழ்நாடு அரசின் கோபுரம் வடிவிலான சின்னத்தை அலங்காரமாகச் செய்திருந்தது எதிர்க்கட்சிகளால் விமர்சனம் செய்யப்பட்டது. அறநிலையத்துறை மானியக் கோரிக்கையை ஒட்டி, அந்தத் துறையின் அமைச்சர் சேகர்பாபு இப்படியொரு அலங்காரத்தை அந்த நினைவிடத்தில் செய்திருந்தார். மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடம் அமைச்சரின் துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குள் வருகிறது. அந்த நினைவிடத்திற்கு அன்றாடம் மலர் அலங்காரம் செய்யும் பொறுப்பை கட்சித் தலைமை அவரிடம் ஒப்படைத்திருக்கிறது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் மலர் அலங்காரம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கும் அமைச்சரின் ஆட்கள் பொங்கல், கலைஞர் கருணாநிதி பிறந்தநாள், சுதந்திர நாள் உள்ளிட்ட முக்கிய நாட்களில் ஏதேனும் ஓர் அடையாளத்துடன் அலங்காரம் செய்வார்கள். அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது தமிழ்நாடு அரசின் கோபுர சின்னம் போன்ற வடிவிலோ அல்லது வேறு கோவிலின் வடிவிலோ மலர் அலங்காரம் செய்வது அமைச்சர் சேகர்பாபுவின் வழக்கம். நினைவிடம் புதுப்பிக்கப்பட்ட பிறகு தற்போதுதான் முதல் முறையாக இப்படியொரு அலங்காரம் செய்யப்பட்டது. அது சமூக ஊடகங்கள் வழியே பரவியதால் அரசியல் களத்தில் சர்ச்சையாக மாறியது.
சமாதி மீது கோவில் அலங்காரம் செய்யலாமா? தமிழ்நாடு அரசின் இலச்சினையை இப்படி பயன்படுத்த முடியுமா? நாத்திகரான கலைஞர் கருணாநிதியின் சமாதியில் எதற்கு கோவில் வடிவம்? என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டு, அறநிலையத்துறை அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க, அ.தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து பதிவுகள் வெளிப்பட்டன. சட்டமன்றத்தில் அறநிலையத்துறை மானியக் கோரிக்கையை தாக்கல் செய்த அமைச்சரோ, ஆண்டவனே கூட தி.மு.க.வுக்குத்தான் வாக்களிப்பார் என்று அடுத்த பவுன்சரை வீசினார்.
அறநிலையத்துறை சார்பில் என்னென்ன திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, இதுவரை எத்தனை திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதைப் பற்றிய விவாதங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, சமாதியில் கோவில் வடிவில் மலர் அலங்காரம் என்பதே முன்னிலைப்படுத்தப்பட்டது. அறநிலையத்துறை அமைச்சரை கடிந்து கொண்ட முதலமைச்சர், கோபம் காட்டிய துணை முதலமைச்சர் என்று தொடர்ச்சியான யூ-டியூப் செய்திகளும் வெளியாயின. இதுதான் இன்றைய சமூக ஊடக யுகத்தின் அரசியல். எது ஒன்றையும் பெரிதாக்க முடியும். எந்த ஒரு முக்கியமான பிரச்சினையையும் பின் தள்ளிவிட முடியும்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கொண்டாடப்பட்ட ரத்தக்கண்ணீர் புகழ் திருவாரூர் தங்கராசுவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் பொன்முடி, சைவம்-வைணவம் ஒப்பீடு என்ற பெயரில் சொன்ன ஆபாச நகைச்சுவை அவரது அரசியலின் அவலமான நேரமாக ஆகிவிட்டது. திராவிடர் கழகமும் அதன் பேச்சாளர்கள் அந்தக் காலத்தில் மேடைகளை எப்படி கையாண்டனர் என்பதையும், மக்களை மூடநம்பிக்கையிலிருந்து பகுத்தறிவு விழிப்புணர்வு பெற எத்தகைய கருத்துகளை எடுத்துச் சொல்ல வேண்டியிருந்தது என்பதையும் விளக்கிப் பேச வந்தவர், வழுக்கி விழுந்ததுபோல, தனிப்பட்ட உரையாடல்களில் பகிரப்படும் செய்திகளை பொதுமேடையில் பேசியது அவரது இத்தனை ஆண்டு கால அரசியல் வாழ்வுக்கும் அவர் வகிக்கும் பதவிக்கும் நெருக்கடியை உண்டாக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பரவியது. அவருடைய கட்சிப் பதவியும் பறிக்கப்பட்டது. தற்போது நீதிமன்ற நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடியும் உருவாகியுள்ளது.
பொன்முடியிடமிருந்து அமைச்சர் பதவியையும் பறிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. தற்போது அவர் வனத்துறை அமைச்சராக இருக்கிறார். அந்தத் துறையில் அவர் சிறப்பாக செயல்படுகிறாரா, வனத்துறை சார்பில் இயற்கை வளத்தையும்-வனச்சூழலையும்-பழங்குடி மக்களி வாழ்வையும் பாதுகாக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து எந்த விவாதமும் இல்லை. அவர் பேசிய ஒரு கருத்துதான் இன்றைக்கு அவர் கழுத்தில் கத்தியாக உள்ளது.
செயலைப் பின்தள்ளி பேச்சை முன்னிறுத்தி அரசியல் செய்யும் போக்குக்கு சமூக வலைத்தள யுகம் ஊக்கமளிக்கிறது. பேச்சை மட்டுமே மூலதனமாக வைத்து செயல்படக்கூடிய அரசியல்வாதிகளுக்கு அதிக பாப்புலாரிட்டி கிடைப்பதற்கும், முழுமையாக பொதுவாழ்வில் ஈடுபட்டு மக்கள் பிரச்சினைக்காக போராடும் அரசியல் செயல்பாட்டாளர்களுக்கு எந்தவித புரமோஷனும் கிடைப்பதில்லை. அதனால்தான், அமைதியாக செயல்படும் அரசியல்வாதிகள்கூட தங்களைப் பற்றி மக்களிடம் தெரிவிப்பதற்கு சமூக வலைத்தளங்களுக்கான அட்மின்களை நியமித்து புரமோட் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.
பேச்சும் காட்சியுமான ஒலியும் ஒளியுமாக மாறியிருக்கிறது சமூக ஊடக யுக அரசியல் களம்.