
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இரண்டு நாள் பயணமாக சௌதி அரேபியா சென்றிருந்த பிரதமர் மோடி பயணத்தைப் பாதியில் முடித்துக் கொண்டு இந்தியா திரும்பினார்.
இந்தியா வந்ததும், பஹல்காம் தாக்குதல் தொடர்பான விவரங்களை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோரிடம் கேட்டறிந்தார்.
அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பிறகு பின்வரும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
- பஞ்சாபில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் இடையேயான அட்டாரி – வாகா எல்லை மூடப்பட்டது.
- பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1ம் தேதிக்குள் இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும்.
- பாகிஸ்தான் சென்றுள்ள இந்தியர்கள் மே 1ம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும்.
- பாகிஸ்தானுக்குக் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட SVES விசாக்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதுடன், அந்த விசாவில் இந்தியா வந்துள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும்.
- பாகிஸ்தானியர்கள் சார்க் விசா ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள விசா மூலம் இந்தியா வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- சிந்து நதி நீா் பகிர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது.
- பாகிஸ்தான் அரசின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்தாக்குதல் தொடர்பாக இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.
முன்னதாக இந்த பயங்கரவாத சம்பவத்திற்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்குக் காங்கிரஸ் துணை நிற்கும் என ராகுல் காந்தியும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
TDko khVrvuYZ rdvVexb FOAt wig