
நான் முதல்வர் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று குடிமைப்பணித் தேர்வுகள் எனப்படும் யு.பி.எஸ்.சி தேர்வுகளில் இந்திய அளவில் சிறப்பான இடத்தைப் பிடித்த தமிழ்நாட்டின் முதல் மாணவருடன் மேலும் 50 பேர் இந்தத் திட்டத்தில் பயிற்சி பெற்று குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றி பெற்றிருப்பது தமிழ்நாட்டின் இளைஞர்களிடையே புதிய நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது. இந்தியாவின் வடமாநிலங்களைப் போலவோ கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களைப்போலவோ தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளில் போதிய கவனம் செலுத்துவதில்லை என்ற விமர்சன கருத்து கடந்த பல ஆண்டுகளாகவே இருந்து வந்த நிலையில், அதற்கு மாற்றாக அரசின் திட்டம் மூலமே மாணவர்களுக்குப் பயிற்சி கிடைப்பதும், அவர்கள் குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றி பெறுவதும் மற்ற மாநிலங்களை ஆச்சரியப்பட வைக்கும் தமிழ்நாடு அரசின் சிறப்பான திட்டமாக உள்ளது.
இந்திய மாநிலங்களில் சமூக நலன் சார்ந்த திட்டங்கள், கல்விக்கானத் திட்டங்கள், மருத்துவம் சார்ந்த திட்டங்கள் ஆகியவற்றில் தமிழ்நாடு எப்போதும் முன்னிலையில் இருப்பதுடன், இயன்ற அளவு அனைத்து தரப்பு மக்களுக்கும் அவை போய்ச் சேரவேண்டும் என்கிற பார்வையுடன் அதற்கேற்ற கட்டமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால்தான், மத்திய அரசு அறிவிக்கின்ற திட்டங்களான நூறுநாள் வேலைத் திட்டம், தொகுப்பு வீடுகள் கட்டும் திட்டம், தடுப்பூசித் திட்டங்கள், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் ஆகியவற்றை சிறப்பாக செயல்படுத்திய மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. ஜனநாயகத்தைக் காக்கும் மாநில உரிமைக்கான சட்டப் போராட்டங்களிலும் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. இதில் தி.மு.க.வின் ஆட்சிக்காலம் என்பது ஒவ்வொரு முறையும் இந்தியாவின் பிற மாநிலங்கள் திரும்பிப் பார்க்கும் நிலையை உருவாக்கியுள்ளது.
மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. தன்னுடைய ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களைக் கொண்டு இணை அரசாங்கம் நடத்தும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், மாநில உரிமைகளைக் காக்கின்ற சட்டப் போராட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் நடத்தி சாதகமானத் தீர்ப்பைப் பெற்றது தமிழ்நாடு அரசு. கவர்னர்களின் அதிகாரத்திற்கு கடிவாளம் போட்ட இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல், பிற மாநிலங்களில் உள்ள அரசுகளுக்கும் வலிமை தரக்கூடியதாக அமைந்துள்ளது. இந்தத் தீர்ப்புக்குப் பிறகும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஊட்டியில் கூட்டிய துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு தமிழ்நாட்டின் அரசு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை. பல்கலைக்கழகங்களின் வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கேயுரியது என்ற தமிழ்நாடு அரசின் தீர்மானம் உச்சநீதிமன்றத் தீர்ப்பு மூலம் உறுதிசெய்யப்பட்டிருப்பதால், ஆளுநர் கூட்டிண மாநாட்டிற்கு துணைவேந்தர்கள் செல்லவில்லை.
ஊட்டியில் கூட்டப்பட்ட துணை வேந்தர்கள் மாநாட்டில் துணை ஜனாதிபதி தன்கரும் பங்கேற்றார். ஆனாலும், அரசு பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் வரவில்லை. தனது அதிகாரத்திற்கும் தனக்கும் அவமானம் ஏற்பட்டதாகக் கருதும் ஆளுநர் ஆர்.என்.ரவி, துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசு நள்ளிரவில் மிரட்டியதாகவும், அதனால்தான் ஊட்டி வரை வந்த பலர் மாநாட்டுக்கு வரவில்லை என்றும் முதலமைச்சர் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் மீது மேடையிலேயே கடும விமர்சனத்தை வைத்திருக்கிறார். இது விரக்தியின் வெளிப்பாடு என்றாலும், நீதியையும் சட்டத்தையும் மீறி மாநில அரசுகளை ஒடுக்க நினைக்கும் மத்திய பா.ஜ.க அரசின் ஆர்.எஸ்.எஸ். அசைன்மென்ட்டின் அடையாளமாகும்.
தமிழ்நாட்டில் இதுவரை பா.ஜ.க.வால் சொந்த செல்வாக்கில் வெற்றி பெற முடியவில்லை என்பதால் அ.தி.மு.க.வை நிர்பந்தித்து மீண்டும் கூட்டணி சேர்ந்திருக்கும் நிலையில், தி.மு.க ஆட்சியை எப்படியாவது தேர்தலில் வீழ்த்தியாகிவிட வேண்டும் என்ற முயற்சியிலும் பா.ஜ.க தீவிரமாக உள்ளது. தேர்தலுக்கு முன்பே தி.மு.க ஆட்சிக்கு பல்வேறு வகையிலும் நெருக்கடிகளைத் தரத் திட்டமிட்டுள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகள், அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் நடந்த ரெய்டுகள் ஆகியவை தேர்தலுக்கு முன் தி.மு.க.வின் முக்கிய தலைகள் அனைத்தும் குறி வைக்கப்படும் என்பதற்கான முன்னோட்ட அடையாளமாகும். அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான பழைய வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் விதித்த கெடுவினால் அவர் தனது பதவியைத் தொடர முடியாத நெருக்கடி, ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி சைவ-வைணவ மதங்களின் நெற்றிக் குறியீடுகளை விலைமாதுடன் ஒப்பிட்டு பேசியதற்காக உயர்நீதிமன்றம் தன்னிச்சையாகத் தொடர்ந்துள்ள வழக்கு, மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகள் தொடர்பான மறுவிசாரணை உள்ளிட்ட அனைத்துமே தி.மு.க.வுக்கு அடுத்த ஓராண்டுக்கு ஏற்படப்போகும் நெருக்கடிகளைக் காட்சிப்படுத்துகிறது.
தேர்தல் நேரம் நெருங்க நெருங்க ஆட்சிக்கு எதிரான காட்சிகளை இன்னும் அதிகமாகப் பார்க்கலாம். இந்த நெருக்கடிகளை மீறி, மக்களின் செல்வாக்கைத் தக்க வைத்துக்கொள்ள தி.மு.க. என்ன செய்யப்போகிறது, தி.மு.க.வினர் எப்படி செயல்படப்போகிறார்கள் என்பதே தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் முக்கியமானதாக இருக்கும்.