
மதம் யானைக்குப் பிடித்தால் மனிதர்களுக்கு ஆபத்து. மனிதர்களுக்குப் பிடித்தால் சமுதாயத்திற்கு ஆபத்து. மத நெறிகளைப் பரப்பும் போதகர்கள்-மதத் தலைவர்களின் நோக்கம் மனிதர்களிடம் அன்பை பரப்புவதாகவே இருக்க வேண்டும். அவரவர் மதங்களைக் கடைப்பிடிக்கும் உரிமையுடன், அடுத்தவர் மதங்களை மதிக்கின்ற போக்கும் இருக்க வேண்டும். இப்படியெல்லாம்தான் தமிழில் உள்ள சமயநெறிகள் மக்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றன.
தமிழ் சமய நெறிகளில் ஒன்று, சைவம். இந்த சைவ நெறியைப் பரப்புவதற்கு பல மடங்களும் அவற்றின் தலைவர்களாக ஆதீனங்களும் இருக்கிறார்கள். தர்மபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள், குன்றக்குடி, பேரூர் உள்ளிட்ட பல ஆதீனங்களில் மிகவும் பெயர் பெற்றது, மதுரை ஆதீனம். சைவ சமயத்தின் திருமுறையான தேவாரம் பாடிய மூன்று பேரில் ஒருவர், திருஞானசம்பந்தர். அவரால் புனரமைக்கப்பட்டது என்ற பெருமை மதுரை ஆதீனத்திற்கு உண்டு. சைவ சமய நெறியையும், தமிழ் மொழியையும் வளர்த்து, அதன் மூலம் மக்களிடம் அன்பையும் நல்லிணக்கத்தையும் உருவாக்கும் தொண்டினை மதுரை ஆதீனம் பல நூற்றாண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.
ஆதீனங்களின் உடை காவியாக இருக்கும். அது கருப்புடனும், வெள்ளையுடனும், பச்சையுடனும், நீலத்துடனும் இன்னும் பல வண்ணங்களுடனும் இணைந்து நன்மைகளை செய்யும். உடையில் உள்ள காவி, மனதில் இருக்காது. மனம் தூய்மையானதாக எந்த நிறமும் ஒட்டாததாக இருக்கும். ஆனால், அண்மைக்காலத்தில் மதத்தை வைத்து அரசியல் செய்யும் போக்கு அதிகரித்ததாலும், அதை வைத்தே இந்தியாவில் ஆட்சியைப் பிடித்ததாலும், ஆதீனங்களையும் அந்த அரசியல் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கிறது. உடையில் இருந்த காவி, உள்ளத்திலும் ஏறி, தமிழுக்குப் பதிலாக சமஸ்கிருதத்திற்கு பல்லக்குத் தூக்குகின்ற அளவிலும், நல்லிணக்கத்திற்குப் பதிலாக வெறுப்பை உமிழ்கின்ற வகையிலும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் பிற மாநிலங்களில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்த அரசியல் தாக்கம், தமிழ்நாட்டிற்குள்ளும் ஊடுருவியுள்ளது.
‘தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்று தங்களின் சிவனாகவே எந்நாட்டவரின் இறைவனையும் பார்த்து, எம்மதமும் சம்மதம் என்பதைப் போதித்த நிலை மாறி, அரசியல் சுழலில் சிக்கித் தவிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளன ஆதீனங்கள். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் செங்கோல் வைப்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள ஓர் ஆதீனம் அரசியல் சுழலில் சிக்கியது. அதன்பின்னர், இந்து மதத்தினரும் முஸ்லிம் மதத்தினரும் காலங்காலமாக வழிபட்டு வரும் மதுரை திருப்பரங்குன்றம் மலையை மையமாக வைத்து பிரச்சினையை உண்டாக்கி அதில் அரசியல் லாபம் தேடப் பார்த்தவர்களின் பின்னணியில் சில ஆதீனங்களும் இருந்தன.
இப்போது, அகில உலக சைவ சித்தாந்த மாநாடு என்ற பெயரில் .ஜ.க.வின் ஊதுகுழலாக செயல்படும் ஆளுநரை, பா.ஜ.க. கூட்டணியில் உள்ள கட்சியின் நிர்வாகிக்கு சொந்தமான பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த நிகழ்வுக்கு அழைத்து, அதே நிகழ்வுக்கு வந்த மதுரை ஆதீனம், வழியில் தன் கார் மீது இன்னொரு கார் மோதி கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், அந்தக் காரில் குல்லா போட்டு, தாடி வைத்திருந்தவர் இருந்தார் என்றும் ஊடகத்தினரிடம் தெரிவித்தார் . புகார் கொடுத்தீர்களா என்று கேட்டதற்கு, “சிவபெருமானிடம்தான் புகார் கொடுக்க வேண்டும்” என்றும், “இங்கே சிறுபான்மையினருக்குத்தான் எல்லா சலுகையும் கிடைக்கிறது” என்றும் தொடர்பே இல்லாமல் சொன்னார்.
தொடர்பே இல்லாமல் அவர் சொன்னதில்தான், அவருக்கான அரசியல் தொடர்பு வெளிப்பட்டது. சைவ சித்தாந்த மாநாட்டுக்கு வந்த இந்து மத ஆதீனத்தை முஸ்லிம்கள் கொல்ல முயற்சி என்ற பதற்றத்தை உருவாக்குவதுதான், பா.ஜ.க. பின்னணியில் நடந்த நிகழ்வுக்கு வந்த ஆதீனத்தின் நோக்கம். ஆனால், கார் மோதியதாக சொல்லப்படும் சிக்னலில் இருந்த சி.சி.டி.வி. காட்சிப் பதிவுகளின்படி, ஆதீனத்தின் கார்தான் அதிவிரைவாக சென்றதும், இன்னொரு திசையிலிருந்து வந்த கார் பிரேக் போட முயற்சிப்பதையும், அப்போது இரு கார்களும் உரசுவதையும் எல்லோராலும் காண முடிந்தது.
ஆதீனம் சொன்ன பொய்யும், அதன் தொடர்ச்சியாக பா.ஜ.க. தரப்பில் திட்டமிடப்பட்ட மத வன்முறையும் அம்பலப்பட்டுவிட்டதால், காவல்துறையின் நடவடிக்கைகள் ஒரு சார்பாக இருக்கிறது என்று மீண்டும் பொய் சொல்கிறார் ஆதீனம். மடாதிபதிகள் ‘மட’ அதிபதிகளாகப் பேசுவது, அச்சு அசல் பா.ஜ.க. பாணி அரசியல்தான். ஒரு பொய்யை சொல்லி, அது வெளுத்ததும், அதன் தொடர்பாக மேலும் பல பொய்களைக் கட்டமைக்கும் இந்த அரசியல் வியூகத்தில் ஆதீனங்கள் சிக்கியிருப்பது வேதனையானது மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட.