
ஜென்ம சனி உட்கார்ந்திருக்கான், நாய் படாத பாடு பட்டேன் என்று தனது ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்தார் திருமாவளவன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை கோயம்பேட்டில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மேடை அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதால் லாரியில் மேடை அமைத்து பொதுக்கூட்டம் நடந்தது.
லாரியில் பொதுக்கூட்ட மேடை என்பதால், ’’லாரிக்கும் எனக்கும் தொடர்பு இருக்குது’’ என்று பழைய நினைவுகளைப் பகிர்ந்தார் திருமா.
’’சென்னையில் இருந்து எப்போது ஊருக்கு சென்றாலும் லாரியில்தான் ஏறிச்செல்வேன். பஸ்சில் போகும் அளவுக்கு அப்ப காசு இல்ல. இதற்காக சீக்கிரமாகவே சவுகார்பேட்டை சென்று லாரியில் டிரைவர் சீட்டுக்கு அருகே இடம் பிடித்துவிடுவேன். லேட்டாகப் போனால் மேற்கூரையில் உட்கார வைத்து விடுவார்கள். காத்து காதுல அடிக்கும்.
பஸ்சுல வாங்குற டிக்கெட்டுல மூணுல ஒரு பங்குதான் லாரியில வாங்குவாங்க. இப்ப ஒரு டீ குடிக்கிற காசுல அப்ப மூணு பேரு புல் மீல்ஸ் சாப்பிடலாம். ஒரு புல் மீல்ஸ் அப்ப 3 ரூபாதான்.

சில நேரம் ஊருல இருந்து வரும்போது லாரி கிடைக்காது. அதனால் வேன்லதான் வருவோம். சவாரி முடிஞ்சு ரிட்டர்ன் வரும்போது அங்கங்க நிறுத்தி ஆட்களை ஏற்றிக்கிட்டு வருவாங்க. முதன் முதலா நான் சென்னைக்கு அப்படி ஒரு வேன்லதான் வந்தேன். பியூசி படித்துவிட்டு கல்லூரியில் சேர 1979இல் சென்னைக்கு வந்தபோது அந்த வேன்லதான் வந்தேன். ஆனா நாய் படாத பாடு பட்டேன்.
ஏற்கனவே அந்த வேன்ல டைட்டா இருந்துச்சு. ஆள் உட்கார இடம் இல்ல. ஒரு அண்ணன் போய் கேட்கவும் அப்படியும் ஏறிக்கோங்கன்னு சொல்லிட்டான். அந்த அண்ணனுக்கு இடம் கிடைச்சுடுச்சு. எனக்கு கிடைக்கல. ஒரு ஆள் தொடை மேலேயே உட்கார வேண்டியதாப் போச்சு. சரியா லாக் இல்லாததால வண்டி குலுக்குற நேரமெல்லாம் பின் கதவு திறந்துக்கும். இதனால பயந்து பயந்து தூங்காம விடிய விடிய படாத பாடு பட்டு சென்னைக்கு வந்து இறங்குனேன்.
செண்ட்ரல் ஸ்டேஷன் முன்னாடி இறக்கி விட்டாங்க. அங்க இருந்து பஸ் பிடிச்சு கொருக்குப்பேட்டை அம்பேத்கார் நகருக்கு போனேன். தெரிஞ்சவுங்க வீடு அங்க இருந்துச்சு.
45 வருசத்துக்கு முன்னாடி லாரியில பயணம் செஞ்சேன். இன்னைக்கு லாரியில நின்னு பொதுக்கூட்டம் பேசுறேன். லாரிய இழிவாகப் பார்க்க வேண்டாம். நமக்கு இந்த நிலையை கொடுத்தவங்க வேண்டுமானால் சந்தோசப்பட்டுக்கொள்ளட்டும்.
உழைக்கிறவனுக்கு எல்லாம் சமம். சொகுசா இருக்குறவன் தான் பிளாஸ்டிக் சேர் வேண்டாம் சிம்மாசனம் வேண்டும் என்று சொல்லுவான். எனக்கு அது மயிருக்குச் சமம். இந்த லாரியும் கிடைக்கலேன்னா ஏதாவது ஒரு கட்டைய கொண்டு போட்டு அது மேல நின்னு பேசியிருப்பேன்’’ என்று தனது ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்தார்.
மேடை அமைக்க அனுமதி தராததால் அவர் மேலும் அதுகுறித்து தனது ஆதங்கத்தைக் கொட்டினார். ‘’எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதை எல்லாம் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு உண்டு.

எங்கு சென்றாலும் நெருப்பாற்றில் நீந்தித்தான் சாதிக்க வேண்டும் என்று விதி இருக்கிறது போலும். நம்மை நாமே ஆற்றுப்படுத்திக் கொள்வதற்கு இது நல்ல வழி. என்னப்பா செய்ய.. நம்ம கிரகவாட்டம் சரியில்லை. மன அழுத்தத்தை போக்குவதற்கு இந்த ஜோசியம், ஜாதகம் எல்லாம் பயன்படும். அதன் மேல் பழி போட்டு விடலாம். வேற வழியில்லப்பா நம்ம கிரக வாட்டம் சரியில்ல. எங்கேயோ நமக்கு ஜென்ம சனியன் உட்கார்ந்திருக்கான். அதனால இப்படி எல்லாம் விளையாடுறாங்க. நம்மை நாமே ஆற்றுப்படுத்திக் கொள்வதற்கு இது ஒரு வழி’’ என்றார்.
தொடர்ந்து பேசும்போது, ’’மேடை அமைக்க அனுமதி கொடுக்காமல் போனதற்கு அவர்கள் என்ன காரணம் சொன்னாலும் இது நெருக்கடி நெருக்கடிதான். நெருக்கடி என்பது விடுதலை சிறுத்தைகளுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. அதனால் மேடை அமைக்க அனுமதி தரவில்லையே என்று கவலைப்பட வேண்டாம். அப்படி கவலைப்பட்டால் இதையே நிரந்தமாக்கி விடுவார்கள். இடது கையால் தூசியை தட்டுவது மாதிரி தட்டி விட்டுச் செல்லுங்கள்’’ என்று தொண்டர்களை சமாதானப்படுத்தினார் திருமா.