
பஹல்காம் தாக்குதலில் பெண்கள் குங்குமம் இழப்பதற்கு காரணமாக இருந்த பயங்கரவாதிகளை அழிக்க வேண்டும் என்பதால் ‘ஆபரேஷன் சிந்தூர்’ அவதாரம் எடுத்து குண்டு வீசி தாக்கி நினைத்ததை வெற்றிகரமாக முடித்திருக்கிறது இந்திய ராணுவம்.
இன்று அதிகாலை 1.05 மணி முதல் 1.30 மணி வரையிலான 25 நிமிடங்களில் 24 ஏவுகணைகளை ஏவி 9 பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்து, 90க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழக்கச் செய்திருக்கிறது இந்திய ராணுவமும், விமானப்படையும்.
கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் என்ற இரண்டு பெண் அதிகாரிகள்தான் இந்த தாக்குதலுக்கு தலைமை தாங்கி இருக்கிறார்கள்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து அடுத்தடுத்து இந்தியா மீது தாக்குதலை தொடுத்து வருகிறது பாகிஸ்தான். மேலும் பல தாக்குதல்களை தொடுக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில்தான் பதிலடி கொடுத்திருக்கிறது இந்தியா. ‘’அப்பாவிகளை கொன்றவர்களை அழித்துள்ளோம்’’ என்கிறார் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

’’இந்தியாவில் மேலும் பல தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று உளவுத்துறை அமைப்புகள் தெரிவித்துள்ளன. அவற்றை தடுத்து நிறுத்த அனைத்து நவடிக்கைகளும் எடுக்கப்படும்’’ என்கிறார் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.
’’பாகிஸ்தானின் எதிர்தாக்குதலை சமாளிக்க தயாராக இருக்கிறது இந்தியா’’ என்கிறார் விங் கமாண்டர் வியோமிகா சிங்.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தானில் குடிமக்கள் ஒருவர் கூட கொல்லப்படவில்லை. அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்தான் பயங்கரவாதிகள் முகாம்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதனால்தான் எங்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை இந்தியா. எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம் என்றது பாகிஸ்தான் ராணுவம்.
இனியும் திருந்தாவிட்டால் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்.

ஆனாலும், இந்தியா மீது தாக்குதல் நடத்த ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கி இருக்கிறது பாகிஸ்தான். இந்தியாவிலும் நாடு முழுவதும் இன்று போர்க்கால ஒத்திகை நடந்து வருகிறது. இதனால் இந்தியா – பாகிஸ்தான் போர் மூளும் சூழல் உள்ளது. அதனால் ஜம்மு காஷ்மீர், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், பீகார், சிக்கிம், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தி இருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
’’எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் மட்டுமே போர் தொடுப்போம். பதற்றத்தை தணிக்க இந்தியா முன் வந்தால் நாங்களும் ஒத்துழைக்கத் தயார்’’ என்று பாகிஸ்தான் சொல்லுவதைப் பார்க்கும் போது பாகிஸ்தான் பணிகிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது. அதே நேரம், பாகிஸ்தான் ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கி இருப்பது பதுங்கிப் பாய்வதற்கா என்ற கேள்வி எழுகிறது.

உலக அளவில் ராணுவ பலத்தில் இந்தியா 4ஆவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 12ஆவது இடத்தில் உள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போர் நடக்கக்கூடாது என்றே பல நாடுகளின் தலைவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.