
பொதுக்குழுவில் பேச வேண்டிய பல காரசார விசயங்களையும் மாநாட்டு மேடையிலேயே பேசி வெடித்தார் ராமதாஸ். கட்சிக்குள் பல கூட்டணி இருப்பதையும், இதனால் யாரும் போட்டாபோட்டியில் கட்சி வேலைகளை யாரும் சரிவர செய்வதில்லை என்பதையும் சுட்டிக்காட்டி அவர்களை கடுமையாக எச்சரித்தார். குறிப்பாக அன்புமணியை மறைமுகமாக கடுமையாக தாக்கிப் பேசினார்.
பலர் கட்சி வேலைகளை செய்யாமல் கையில் நான்கைந்து செல்போன்களை வைத்துக்கொண்டு ரியல் எஸ்டேட் வேலைகளைச் செய்து வருவதையும் கடுமையாகச் சாடினார்.
மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் நேற்று பாமக வன்னியர் சங்க சித்திரை முழுநிலவு மாநாடு நடந்தது. 12 ஆண்டுகளுக்கு பின் நடந்த மாநாடு என்பதால் பெருந்திரளான கூட்டம் கூடியது.
மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியபோது பாமகவின் சாதனைகளை சொல்லுவதையும் விடவும் கட்சியின் சோதனைகளைச் சொல்லி வேதனைப் பட்டவர், அந்த சோதனைகளுக்கு காரணமானவர்களை விளாசி எடுத்தார்.
‘’45 ஆண்டுகாலமாக உங்களுக்காக, மக்களுக்காக, தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து சமுதாய மக்களுக்காகவும் போராடி தொடர்ந்து உழைத்து வரும் ஒருவன் இந்த ராமதாஸ்.
95 ஆயிரம் கிராமங்கள் , வடக்கு தெற்கு, கிழக்கு மேற்கு என்று தமிழ்நாடு பூராவும் என் கால் படாத கிராமங்களே இல்லை என்று சொல்லுகின்ற அளவுக்கு மக்களுக்காக உழைத்தேன். ஓடி ஓடி உழைத்தேன். குடும்பத்தை மறந்து ஓடி ஓடி உழைத்தேன்.

அப்போது எனக்கு டாக்டர் பீஸ் 3 ரூபாய். 5 நாள் சம்பாதித்ததை எடுத்துக்கொண்டு ஊர் ஊராக சென்று கல்லிலும், முள்ளிலும், வாய்க்காலிலும் வரப்பிலும் சாப்பாடு தண்ணி இல்லாமல் இரவு பகலாக மக்களுக்காக பாடுபட்டேன்.
நாமும் ஒரு முறை தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்ற நோக்கத்தோடு என்னுடைய பேச்சை கேளுங்கள். நான் ஆளப்போவதில்லை. எனக்கு அந்த ஆசையும் இல்லை. அந்த ஆசை இருந்திருந்தால் இந்தியாவில் நான் கவர்னராக இருந்திருப்பேன். பலமுறை அமைச்சராக இருந்திருப்பேன். தமிழ்நாட்டையும் ஆண்டிருப்பேன். ஆனால் எனக்கு அந்த ஆசை இல்லாமல் போய்விட்டது. மக்களுக்காக வாழ்ந்தேன்; மக்களுக்காக வாழ்கிறேன்.
ஒன்றியமோ, மாவட்டமோ, வட்டமோ பலபேர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். உழைக்கவே இல்லை. உழைக்காமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு வன்னியர் வீடும் இப்போது மாடி வீடாக இருக்கிறது. அந்த வீடுகளில் கார் நிற்கிறது. இதை நான் உருவாக்கிக் கொடுத்திருக்கிறேன். பாமக மாநாடு என்றால் 150 கார் வருகிறது. இத்தனை கார்கள் எங்கிருந்து வருகிறது? ஆகாயத்தில் இருந்தா வருகிறது? என்னுடைய உழைப்பினாலே, என்னுடைய சிந்தையினாலே, நான் பட்ட கஷ்டங்களினாலே வருகிறது.
95 ஆயிரம் கிராமங்களுக்கு என்னுடைய பாதங்கள் பட்டு, தேய்ந்தும் திடமாக உறுதியாக இருக்கிறேன்’’ என்று தான் எப்படி பாடுபட்டு கட்சியை வளர்த்தேன். ஆனால் இன்றைக்கு சொகுசாக இருந்துகொண்டு கட்சி வேலையை பார்க்காமல் ரியல் எஸ்டேட் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை,
’’அன்று தனியாக நின்று யானை சின்னத்தில் 4 தொகுதிகளில் வென்றோம். இன்று கூட்டணியில் நின்று 5 தொகுதிகளை வென்றிருக்கிறோம். இனி அப்படி இருக்கக்கூடாது. அப்படி இருந்தீர்கள் என்றால் ஒவ்வொருவரின் கணக்கையும் முடித்துவிடுவேன். அப்படி என்றால் என்ன அர்த்தம்? உங்கள் பொறுப்புகள் உங்களிடம் இருக்காது.
வெளிப்பூச்சு, வெளிவேஷம், அந்த கூட்டணி, இந்த கூட்டணி, கட்சிக்குள்ளேயே கூட்டணி.. இதெல்லாம் நடக்காது தம்பி. நடக்காது கண்ணு. அதனால உன்னை திருத்திக்கொள். 4 செல்போன் வச்சிருக்கிற. இன்னும் 4 செல்போன் வாங்கிக்க. பொழச்சிக்க.. ரியல் எஸ்டேட் பண்ணிக்க. ஆனா கட்சியில பொறுப்புல இருக்கவே முடியாது. உங்களுடைய நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இனி ஏமாத்தும் வேலை நடக்காது. அந்த பக்கம் போனேன். இந்த பக்கம் போனேன் எல்லாம் எடுபடாது. உன் ஜாதகத்தை தோட்டத்துக்கு எடுத்துக்கொண்டு வா. அதுல சனி பிடிச்சிருந்தா ஒழிஞ்சிப்போ.
உங்களுடைய கணக்கு பார்க்கப்படுகிறது. சும்மா ஏமாத்திக்கிட்டு.. நான் கோட்டைக்கு போவேன்.. கோட்டைக்கு போவேன்… என்று சுற்றிக்கிட்டு, கோட்டைக்கு போய் என்ன பண்ண முடியும். போய் கோட்டையை பார்க்கத்தான் முடியும். உங்களை நம்பி தேர்தலில் இறங்கினால் அவ்வளவுதான்.

எங்க கூட்டணி எங்க கூட்டணி என்று சில பேரு கேட்கிறாங்க. கூட்டணி பற்றி நான் பார்த்துக்கொள்கிறேன். அதைப் பற்றி நீ ஒண்ணும் கவலைப்பட வேண்டாம். உனக்கு சீட் கிடைக்கணும், எம்.எல்.ஏ ஆகணும்னா உழைக்கணும். உன் உழைப்பை பற்றின கணக்கு எடுக்கப்படுகிறது. மறைமுகமாக சமூக முன்னேற்றச் சங்கம் மூலமாக எடுக்கப்படுகிறது. இந்த கணக்கில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியாது. எம்.எல்.ஏ. என்று பார்க்க மாட்டேன். எம்.எல்.ஏ. என்றால் தூக்கி கடலில் வீசிவிடுவேன்.
காக்கா புடிச்சாலும் ஒண்ணும் நடக்காது. கா…கா..கான்னு கத்தலாம். ஆனா உனக்கு ஒண்ணும் கிடைக்காது.
எத்தனையோ இளைஞர்கள் பொறுப்புக்கு வர துடித்துக் கொண்டிருக்கிறார்கள். நீயோ காலை வாரிக் கொண்டிருக்கிறாய். நான் கட்சி ஆரம்பிக்கும்போது என்னிடம் பணம் இல்லை. ஆனால் இப்போது எல்லாரும் சொகுசு காரில் வருகிறீர்கள். கட்சி உயிர் என்று நினையுங்கள். அப்போதுதான் கோட்டையை பிடிக்க முடியும்.
உங்களால் முடியவில்லை என்றால் ஒதுங்கிக்கொள்ளுங்கள் ரியல் எஸ்டேட் செய்யாத, அது தொடர்பாக செல்போன் வைத்துக் கொண்டிருக்காத நல்ல பையனை, குடிக்காத பையனை நீதான் மாவட்டம்.. நீதான் எல்லாம் என்று வைத்துவிடுவேன்’’என்று பொங்கி வெடித்தார்.
ராமதாஸ் வெடித்ததில் பலர் சிதறி ஓடினார்கள்.
tksa5t