The Wire நிறுவனத்தின் பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன் மற்றும் OCCRP நிறுவனத்தின் பத்திரிகையாளர் ஆனந்த் மங்னாலே ஆகியோர் இந்த ஆண்டு பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் குறிவைக்கப்பட்டதாக அம்னெஸ்டி அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் என பலருக்கு ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து ‘அரசு நிதியுதவி பெறும் ஹேக்கர்கள்’ மூலம் குறிவைக்கப்படுகிறீர்கள் என எச்சரிக்கைக் குறுஞ்செய்தி வந்தது.
அது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சில குறுஞ்செய்தி எச்சரிக்கைகள் தவறானதாக இருக்கலாம் என்றும் இது 150கும் மேற்பட்ட நாடுகளின் பயனாளிகளுக்கு சென்றுள்ளதாகவும் ஆப்பிள் நிறுவனத் தரப்பிடம் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த சூழலில், பத்திரிகையாளர்கள் சித்தார்த் வரதராஜன் மற்றும் ஆனந்த் மங்னாலே ஆகியோர் தங்களது தொலைபேசிகளை அம்னெஸ்டி அமைப்பிடம் சோதனைக்காக வழங்கி உள்ளனர்.
இருவரின் சாதனங்களை ஆய்வு செய்ததில் பெகாசஸ் மென்பொருள் மூலம் குறிவைக்கப்பட்டது தெரியவந்துள்ளதாக அம்னெஸ்டி அமைப்பு தற்போது கூறியுள்ளது.
பெகாசஸ் மென்பொருளின் தவறான பயன்பாடுகள் குறித்து The Wire, OCCRP உட்பட பல்வேறு நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு வந்த நிலையில், அம்னெஸ்டி அமைப்பின் தற்போதைய கண்டுபிடிப்பு, மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
iPhone-ல் உள்ள iMessage செயலி வழியாக Pegasus மென்பொருளின் தாக்குதலுக்கு உட்படும் இரகசிய குறுஞ்செய்தி அனுப்பி பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன் குறிவைக்கப்பட்டது அம்னெஸ்டி அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது
இந்த சூழலில், மனித உரிமை மீறல்கள் குறித்து அரசு மீதான பல சந்தேகங்களையும் கவலைகளையும் தற்போது தீவிரப்படுத்தி உள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு Pegasus மென்பொருள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டி தொழில்நுட்பக் குழு ஒன்றை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதற்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்க மறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஆப்பிள் நிறுவனத்தின் குறுஞ்செய்தியும் அதன் விளக்கத்திலும் வெளிப்படைத் தன்மை இல்லை என்கிற குற்றச்சாட்டு இருந்த வந்த சூழலில், The Washington Post நிறுவனத்தின் சமீபத்திய செய்தி சர்ச்சையை அதிகப்படுத்தி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் அளித்த விளக்கத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தி நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து மத்திய அரசு அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு பெகாசஸ் மென்பொருளை NSO அமைப்பிடம் இருந்து மத்திய அரசு வாங்கியது. பெகாசஸ் மென்பொருள் பல்வேறு நாடுகளின் அரசுகளுக்கு மட்டுமே NSO நிறுவனம் விற்பனை செய்து வருவது கவனத்திற்குரியது.