
ஆறு ஆண்டுகளாக நடந்து வந்த பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. இதே போன்று 8 வருடங்களாக நடைபெற்று வரும் கொடநாடு வழக்கில் எப்போது தீர்ப்பு என்கிற பேச்சு எழுந்திருக்கிறது.
2021 சட்டமன்ற தேர்தலில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மற்றும் பொள்ளாச்சி வழக்கில் நீதி கிடைக்கச் செய்வோம் என்று திமுக தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டிருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த நான்காண்டுகளுக்குப் பிறகு இப்போது பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கொடநாடு வழக்கிலும் விரைவில் தீர்ப்பு வரும் என்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கடந்த 2017ஆம் ஆண்டில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. பங்களாவுக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்கள் அவர்களை தடுத்த காவலாளி ஓம் பகதூரை கொலை செய்தனர்.
அதிமுக ஆட்சியில் அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் பங்களாவில் நடந்த இந்த சம்பவத்தால் அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மீது பலரும் குற்றம் சுமத்தினர்.

ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், கொடநாடு பங்களாவின் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ் என்று இந்த கொடநாடு வழக்கில் தொடர்புடையவர்கள் பலரும் அடுத்தடுத்து விபத்திலும் தற்கொலை செய்துகொண்டும் இறந்தது இவ்வழக்கில் பல சந்தேகங்களை ஏற்படுத்தியது.
உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக கொடநாட்டு வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. இவ்வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டு அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.
சசிகலா மற்றும் சசிகலாவின் உறவினர்கள் விவேக், சுதாகரன், ஜெயலலிதாவுன் பாதுகாவலர்களாக இருந்த பெருமாள், ராஜா, கொடநாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜன் பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த வழக்கு 2022இல் சிபிசிஐடி வசம் ஒப்பட்டைக்கப்பட்டது. சிபிசிஐடி விசாரணையில் 316 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு, கைப்பற்றபட்ட 1500 பக்க ஆவணங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலரும் எடப்பாடி பழனிசாமியை நோக்கியே கை நீட்டுகிறார்கள். அவரையும் அழைத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று தகவல்.
2026 சட்டமன்ற தேர்தல் நேரத்தில் கொடநாடு வழக்கின் தீர்ப்பு வந்தால் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய தலைவலியாக அமையும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
பொள்ளாச்சி வழக்கில் அதிமுகவின் நிர்வாகியாக இருந்தவரும் சிக்கி இருப்பதாலும், அதிமுக ஆட்சியில் நடந்த சம்பவம் என்பதாலும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துக்கள் பரவி வரும் நிலையில் கொடநாடு வழக்கின் தீர்ப்பு குறித்தும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் முதலமைச்சர்.

நீலகிரியில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘’நாங்க ஆட்சிக்கு வந்தா நிச்சயமாக உறுதியாக பொள்ளாச்சி வழக்கில் யார் குற்றவாளியோ அவர்கள் தண்டிக்கப் படுவார்கள் என்று சொல்லி இருந்தோம். யார் எவ்வளவு பொறுப்பில் இருந்தாலும், எத்தனை செல்வாக்கில் இருந்தாலும் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என்று சொல்லி இருந்தோம். அதே மாதிரி நடந்திருக்கிறது. அடுத்து கொடநாடு வழக்கிலும் விரைவில் தீர்ப்பு வந்துவிடும். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும்’’ என்கிறார்.
பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளதால் கொடநாடு வழக்கின் தீர்ப்பு எப்போது? என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது. அந்த பரபரப்பை மேலும் கூட்டியிருக்கிறார் முதலமைச்சர்.