
tump modi spark media
ஜம்மு காஷ்மீரில் பல மாநிலத்தவர்களும் சுற்றுலா மேற்கொண்டிருந்த பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலும் அதில் 28 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதும் இதயம் உள்ள எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல். காஷ்மீர் என்பது இப்போது மாநிலமாக இல்லை. அதன் சிறப்புத் தகுதியும் ரத்து செய்யப்பட்டு, மாநில அந்தஸ்தும் பறிக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாகவும், லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும் பா.ஜ.க. ஆட்சியில் ஆக்கப்பட்டுவிட்டது. இதனால், இந்த யூனியன் பிரதேசங்களின் பாதுகாப்பு என்பது மத்திய உள்துறையைச் சார்ந்தது.
மத்திய உள்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் அமித்ஷா. எல்லைப் பகுதி மற்றும் ஒட்டுமொத்த நாட்டை எதிரி நாடுகள் தாக்காமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு(ராணுவ) துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு உரியது. அமித்ஷா பொறுப்பு வகிக்கும் உள்துறை சார்பில் சுற்றுலாத்தலமான பஹல்காம் பகுதியில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. அதனால்தான், தீவிரவாதிகள் ஊடுருவி வந்து கொடூரத் தாக்குதலை நடத்தினர். அப்பாவி இந்தியர்களைக் கொன்றனர். இது முழுக்க முழுக்க உள்துறையின் தோல்வியாகும். எல்லையோர மாநிலங்களில் அந்நிய நாட்டு ராணுவம், அவர்களால் ஏவப்படும் தீவிரவாதம் உள்ளிட்டவற்றை கண்காணித்து முன்கூட்டியே தகவல் தெரிவிப்பதற்கு ஒவ்வொரு நாட்டிலும் உளவுப் பிரிவுகள் இருக்கும். இந்தியாவிலும் வலிமையான உளவு அமைப்புகள் அரசிடம் இருக்கின்றன. அந்த அமைப்புகளும்கூட, சுற்றுலாத்தலம் அருகே தீவிரவாதிகள் நடமாட்டம் இருக்கிறது என்றோ, பயிற்சி முகாம்கள் இருக்கிறது என்றோ, தாக்குதலுக்குத் திட்டமிடுகிறார்கள் என்றோ மத்திய அரசிடம் தெரிவித்ததா என்பதற்கு பா.ஜ.க. அரசிடமிருந்து நேர்மையான பதில் இதுவரை வரவில்லை.
மோடி அரசு சீன எல்லையைக் கையாள்வதற்கும், பாகிஸ்தான் எல்லையைக் கையாள்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதை பல்வேறு செய்தி நிறுவனங்கள் ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளன. தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்துதான் வந்தார்கள் என்பதால், நிச்சயம் இதற்கு பதிலடி கொடுப்போம் என மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங் ஆகியோர் ஆவேசமாகத் தெரிவித்தனர். அதன்படி, ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயரிடப்பட்டு, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நள்ளிரவில் துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது.
சிந்தூர் என்றால் பொட்டு என்று அர்த்தம். காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதில், சுற்றுலாப்பயணிகளில் ஆண்களே பெரும்பாலும் கொல்லப்பட்டனர். அதன் காரணமாக அவர்களின் மனைவியர் பொட்டு இழந்தனர். அவர்கள் இழந்த பொட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயரிட்டு தாக்குதல் நடத்தியது மோடி அரசு. பாகிஸ்தான் பிடியில் நீண்டகாலமாக உள்ள காஷ்மீர் பகுதியில் இருந்த தீவிரவாதிகள் முகாம்கள் மீதும், பாகிஸ்தானுக்குள் உள்ள தீவிரவாதிகள் முகாம்களுக்குள்ளும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதை இந்திய ராணுவத்தின் பெண் அதிகாரிகள் உறுதி செய்தனர். நூற்றுக்கும் அதிகமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதி மசூத் அசார் குடும்பத்தினர் வசித்த இடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவனுடைய குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், பஹல்காம் சுற்றுலாத்தலத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் 4 பேரின் புகைப்படங்களை இந்திய அரசு ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலையில், அவர்கள் இந்தத் துல்லியத் தாக்குதலில் கொல்லப்பட்டார்களா என்ற உண்மை இன்னும் வெளிப்படவில்லை.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மீது இந்திய ராணுவம் தாக்குதல், பாகிஸ்தானின் முக்கிய நகரமான லாகூர் பிடிபட்டது, துறைமுக நகரமான கராச்சி மீது இந்திய கடற்படை தாக்குதல் நடத்தி அழித்தது என்று இந்திய ஊடகங்கள் நொடிக்கு நொடி பரபரப்பு செய்திகளை வெளியிட்டன. பாகிஸ்தானோ, இந்தியாவிடமிருந்த ரஃபேல் விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டோம், இந்தியப் பகுதிகளில் பாகிஸ்தான் படைகள் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன என்று செய்திகளைப் பரப்பியது. இவையனைத்திலும் பொய்யே அதிகளவில் நிறைந்திருந்தன. குண்டுவீச்சில் சிதறிய கட்டடங்கள் போல உண்மையைத் தேட வேண்டியுள்ளது.
இருநாடுகளுக்குமான போர், உலகப் போராக மாறுமோ என்கிற அளவிற்கு விவாதங்கள் நடந்து கொண்டிருந்த நிலையில், மே 10ந் தேதி மாலை திடீரென இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் என்ற அறிவிப்பு வெளியாகிறது. முதலில் வெளிவந்தது இந்தியாவிலோ பாகிஸ்தானிலோ அல்ல. அமெரிக்காவில் அதன் அதிபர் டிரம்ப்பால் வெளியிடப்படுகிறது. நான்தான் போரை நிறுத்தச் சொன்னேன் என்கிறார் அவர். அதன்பிறகே இரு நாடுகளும் போர் நிறுத்தம் பற்றி அறிவிக்கின்றன.