
பாடகி கெனிஷாவுடன் நெருக்கமாக இருந்து கொண்டு என்னை பிரிகிறார் என்று கணவர் ரவிமோகன் மீது ஆர்த்திரவி குற்றம் சாட்டியபோது, கெனிஷா என் தோழி மட்டுமே. மனநல சிகிச்சைக்காக மட்டுமே அவரை சந்திக்கிறேன் என்று சொல்லி சமாளித்திருந்தார் ரவிமோகன்.
இப்போது தோழி என்று சொல்லும் நீங்கள் பின்னாளில் காதலி, மனைவி என்று சொல்லக்கூடுமோ என்ற கேள்விகளுக்கு, அப்படி ஒன்று நடக்காது என்று சொன்ன ரவிமோகன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்திற்கு கெனிஷாவுடன் திருமண உடையில் ஒன்றாக கைகோர்த்துக் கொண்டு வந்திருந்தார்.
விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் இப்படி ரவிமோமோகன் கெனிஷாவுடன் ஜோடியாக வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆர்த்தி மற்றும் அவரது தாயின் டார்ச்சர் தாங்க முடியாமல்தான் விவாகரத்து செய்வதாக சொல்லி இருந்தார் ரவி. ஆனால் இதை மறுத்த ஆர்த்தி, கெனிஷாவுடன் காதல் வயப்பட்டதால்தான் தன்னை பிரிகிறார் என்று கூறி இருந்தார். அதை உறுதிப்படுத்தும் விதமாகவே இப்போது கெனிஷாவுடன் வலம் வருகிறார் ரவி.

இதனால் மனம் உடைந்த ஆர்த்தி, ‘’எங்கள் விவாகரத்து வழக்கு இன்னும் சட்டபூர்வமாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் 18 வருடங்களாக நான் காதலுடனும், நம்பிக்கையுடனும் கைகோர்த்து நடந்த ஒரு மனிதன் என் கைகளை மட்டுமல்ல தன் பொறுப்புகளில் இருந்தும் கைகழுவி சென்று இருக்கிறார்.
பல மாதங்களாக அந்தக் குழந்தைகளின் பொறுப்பை என் தோள்களில் மட்டுமே சுமந்து கொண்டிருக்கிறேன். யாரும் அறியாமல் அந்தக் குழந்தைகள் சிந்தும் கண்ணீரையும் என் கைகள் தான் துடைத்துக் கொண்டிருக்கிறது. இன்று அவர் புதிதாக முளைத்தவர்களுடன் புதியதொரு உறவை உருவாக்கி கொண்டதால் பழைய உறவு இப்பொழுது வெறும் செங்கல் சுவர் போல அவர் கண்களுக்கு காட்சியளிக்கிறது’’என்று வேதனையை வெளிப்படுத்தி இருந்தார்.
ஆர்த்தியும் அவரது தாயும் பணத்தாசை பிடித்தவர்கள் என்றும், பணம், பணம், பணம் என்று தன் வாழ்க்கையை கெடுத்துவிட்டார்கள் என்றும் குற்றம்சாட்டியிருந்தார் ரவி. ஆனால் கெனிஷாவுடன் வாழ்வதற்காகத்தான் அப்படி ஒரு குற்றச்சாட்டை சொன்னார் என்றும், குழந்தைகளைக் கூட கவனிக்காமல் ஒரு தந்தையின் பொறுப்பையும் ரவி உணராமல் இருக்கிறார் என்று, ’’என் குழந்தைகளுக்கு அன்பும் அக்கறையும் கொடுப்பேன் என்ற அவரது வாக்குறுதியும் பறந்துவிட்டது. ஆனால் இன்றும் என்னை தான் பணத்தாசை பிடித்தவள் போல் சித்தரிக்கிறார்கள். அது மட்டும் உண்மை என்றால் இப்பொழுது அனைத்தையும் இழந்து நிற்கும் இந்த நிலையில் இல்லாமல் நான் சுயநலத்துடன் எப்பொழுதோ எனது பாதுகாப்பை கவனித்திருப்பேன். ஆனால் கணக்குபோட்டு வாழ்வதை விட காதலுடன் வாழ்வது சிறந்தது என்று நான் முடிவெடுத்ததால் தான் இன்று இந்த நிலையில் நிற்கிறேன்’’ என்று பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவைத் தொடர்ந்து ஆர்த்திக்கு ஆதரவு பெருகியது. அதே நேரம், ‘’ஒரு ஆணின் இதயம் அமைதியைத் தரும் பெண்ணை நோக்கியே செல்லும்’’ பதிவிட்டு, ஆர்த்தி அமைதியத் தரவில்லை என்றும், தான் அந்த அமைதியைத் தந்ததால் தன் பக்கம் ரவி வந்துவிட்டார் என்றும் புரிய வைத்திருந்தார் கெனிஷா.
கெனிஷாவுடன் காதல் வயப்பட்டதால் மனைவியை பிரிந்ததோடு அல்லாமல் குழந்தைகளையும் கவனிக்காமல் உள்ளார் என்று தன் மீது எழுந்துள்ள குற்றசாட்டுகளை மறுக்கும் விதமாக ரவிமோகன் இன்று நான்கு பக்க அறிக்கையில் ஒரு விளக்கத்தை கொடுத்திருக்கிறார். அதில், ‘’ எனது நேர்மை கேள்விக்குள்ளாக்கப்படும்போது, நான் பேச வேண்டும். கடின உழைப்பின் மூலம் எனது வாழ்க்கையை உருவாக்கினேன். எனது கடந்த கால திருமண உறவுகளில் யாரையும் தனிப்பட்ட ஆதாயத்திற்காகவோ, மலிவான அனுதாபத்தை கையாள நான் அனுமதிக்க மாட்டேன். இது எனக்கு ஒரு விளையாட்டு அல்ல. இது எனது வாழ்க்கை.
சட்ட செயல்முறைக்கு நான் முழுமையாக உறுதிபூண்டுள்ளேன், அது உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் என்று நம்புகிறேன்’’ என்று கூறியிருக்கும் அவர்,
திருமண வாழ்க்கையில் இதற்கு மேல் சரிப்பட்டு வராது என்றுதான் கனத்த இதயத்துடன் விவாகரத்துக்கு சென்றதாக குறிப்பிட்டிருக்கிறார். குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் இதுகுறித்து ஏற்கனவே தெரிவித்து விட்டாலும் கூட இப்போது மீண்டும் அதை தெளிவுபடுத்துவதாக குறிப்பிட்டிருக்கிறார்.

நான் என் குழந்தைகளை கவனிப்பதில்லை. ஒரு தந்தையின் பொறுப்பை இழந்துவிட்டேன் என்று சொல்லப்படுவது உண்மையல்ல.
என் மனைவியைத்தான் விட்டு விலகினேனே தவிர, என் குழந்தைகளை என்னாலும் விட்டுக்கொடுக்க மாட்டேன். அவர்கள் என் பெருமை. கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் மட்டுமே நீதிமன்றத்தின் அனுமதியில் என் குழந்தைகளை பார்த்தேன். அதன் பின்னர் அவர்களுடனான அனைத்து தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விட்டன.
என் சொந்தக் குழந்தைகளை நான் பார்த்து விடாதபடி அவர்களுடன் பேசமுடியாதபடி அவர்களுடன் பவுசன்சர்கள் வருகிறார்கள். என் குழந்தைகள் ஒரு கார் விபத்தில் சிக்கிய செய்தி கூட ஒரு மாதம் கழித்து மூன்றாம் நபர் மூலமாக தெரிந்து அதிர்ந்தேன் என்கிறார். அதுவும், கார் விபத்து தொடர்காக தனது கையெழுத்து தேவைப்பட்டதால் அந்த தகவலைச் சொன்னதாக சொல்கிறார். நிலைமை இப்படி இருக்கும் போது ஆர்த்தி தன்னை ஒரு பொறுப்பற்றவனாக ஜோடிக்கிறார் என்கிறார் ரவி.
தான் சம்பாதித்ததை எல்லாம் ஆர்த்தியும் அவரது குடும்பத்தினருமே அனுபவித்தார்கள். தன் குடும்பத்தினருக்கு எதுவும் செய்ய முடியவில்லை. தன் குடும்பத்தை சந்திக்க கூட விடாமல் ஆர்த்தியும் அவரது குடும்பத்தினரும் பார்த்துக்கொண்டனர். சம்பாதித்ததை எல்லாம் ஆர்த்தி குடும்பத்திற்காகவே இழந்து விட்டேன் என்று தான் ஒரு தங்க முட்டையிடும் வாத்தாக ஆர்த்தி குடும்பத்திற்கு இருந்தாக குறிப்பிட்டிருக்கிறார்.
முன்னாள் மனைவியையும் குடும்பத்தினரையும் நேசித்து ஆதரித்துள்ளேன் . எனக்கு இருந்த அனைத்தையும் கொடுத்துள்ளேன். விரைவில் அவர்கள் உண்மையை அறிந்துகொள்வார்கள். ஒரு ஆணாகவும் தந்தையாகவும் நான் விலகிச் செல்ல எடுத்த வலிமையைப் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் நான் வாழ்கிறேன் என்று சொல்லும் ரவி, 16 ஆண்டுகள் படாதபாடு பட்டுத்தான் இந்த முடிவை எடுத்தாகவும், நீதிமன்றத்தின் மூலம் தன் குழந்தைகளை பார்த்த்து பேசி அவர்களுடன் வாழ நடவடிக்கை எடுப்பேன் என்றும், அதில் தனக்கு நீதி கிடைக்கும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரு பிரபல நடிகராக இருக்கும் ரவி, என்ன செய்கிறேன் என்று தெரியாமல் ஏன் இப்படிச் செய்கிறார்? என்று வரும் விமர்சனங்களுக்கு, தான் மக்களால் நன்கு அறியப்பட்ட ஒரு நபர். அப்படி இருக்கும் போது என்ன செய்கிறேன் என்று தெரிந்துதான் நடக்கிறேன் என்கிறார்.
ரசிகர்கள் தன்னை புரிந்துகொண்டது மாதிரியே தன்னை மதிப்பது மாதிரியே தனது தோழி கெனிஷாவையும் புரிந்துகொள்ள வேண்டும் , மதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
தனது வாழ்க்கையை யாராலும் அழிக்க முடியாது என்றும் உறுதியாகக் கூறி இருக்கிறார்.
அவர் தனது அறிக்கையில் கடைசி வரிகளாக ‘வாழுங்கள் வாழ விடுங்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இது ஆர்த்திக்காக மட்டும் அல்ல, தன்னை விமர்சிப்பவர்களுக்காகவும் கூட சொல்லி இருக்கிறார் ரவி மோகன்.