மருமகளின் தலையை துண்டித்து கொலை செய்திருக்கிறார் மாமியார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வளையம்பட்டையைச் சேர்ந்த நந்தினி, விரியூரைச் சேர்ந்த டாக்டர் ரொசாரியோவை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார்.
திருமணத்திற்கு பின்னர் விரியூரில் கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார் நந்தினி. இது டாக்டரின் தாயார் கிரிஸ்டோபர் மேரிக்கு தெரியவர வர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் நந்தினி இரண்டு நாட்களாக மாயமாகி இருக்கிறார். மனைவி திடீரென்று மாயமானது குறித்து சங்கராபுரம் போலீசில் புகாரளித்துள்ளார் டாக்டர் ரொசாரியோ. கடைசியாக தனது தாயார், மனைவியை அழைத்து சென்றதாகவும் புகாரில் கூறியிருக்கிறார்.
இதையடுத்து டாக்டர் ரொசாரியோவின் தாயார் கிரிஸ்டோபர் மேரியை அழைத்து வந்து சங்கராபுரம் போலிசார் விசாரித்துள்ளனர். அப்போது சடங்கு செய்வதாகச் சொல்லி நந்தினியை சோழம்பட்டு நதிக்கரைக்கு அழைத்துச் சென்று, அங்கே தனது தோழி எமிலியுடன் சேர்ந்து நந்தினியின் தலையை துண்டித்து கொலை செய்ததாக கூறி இருக்கிறார். தலை மற்றும் உடலை தனித்தனியாக புதைத்ததாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார்.
மருமகளை இவ்வளவு கொடூரமாக ஏன் கொலை செய்ய வேண்டும் என்பது குறித்து கிரிஸ்டோபர் மேரியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
