பிராமண சமூகம் ஒடுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டினை முன்வைத்து பிராமணர்களுக்கு பாதுகாப்பு வேன்று சென்னையில் இந்து மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய நடிகை கஸ்தூரியின் கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
பிராமணர்களை பிராமணர்கள் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர பார்ப்பான் என்று சொல்லக்கூடாது. அமைச்சரவையில் பிராமணர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். பிராமணர்களை ஒடுக்குவதால் அடுத்த தலைமுறையில் கருமாதி செய்ய ஐயர்கள் இருக்க மாட்டார்கள் என்று பேசி இருந்தார் கஸ்தூரி.
நீதிமன்றங்கள் உள்ளிட்ட உயர் பதவிகளில் பிராமணர்கள் இருப்பதைக்கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல் தவறான கண்னோட்டத்தில் விமர்சிக்கின்றனர் என்று குற்றம்சாட்டி இருந்தார்.
பிராமணர் என்று சொன்னால், சூத்திரன் என்று எங்களை ஏற்றுக்கொண்டதாக ஆகிவிடும். அதனால் தொழில் அடிப்படையில் பார்ப்பான் என்றுதான் சொல்வோம். பிராமணர் என்று சொல்ல மாட்டோம் என்று எதிர்வாதங்கள் கிளம்பி இருக்கின்றன.
பிராமணர்கள் பூநூல் அறுப்பதாகவும், குடுமியை அறுப்பதாகவும் அந்த ஆர்ப்பாட்டத்தில் சிலர் குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தனர். இது அபாண்ட குற்றச்சாட்டு என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் குறித்து ஆ.ராசா எம்.பி. , ‘’மனிதராகப் பிறந்த அனைவரும் சமமானவர்களே’ என்ற அறிவியல் உண்மைக்கு மாறாக தம்மை உயர் சாதியினராகக் காட்டிக் கொள்ளக் குறிப்பிட்ட வகுப்பினர் இப்போதும் முயன்று கொண்டிருக்கிறார்கள் என்பதன் வெளிப்பாடுதான் அவர்கள் நடத்தியிருக்கும் ஆர்ப்பாட்டம். அது பாதுகாப்பு வலியுறுத்தல் ஆர்ப்பாட்டம் அல்ல. தன் சமூக பெருமையை நிலைநாட்ட நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்’’ என்கிறார்.
பட்டியலின மக்களுக்கு இருப்பதுபோல, பிராமணர்களைப் பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என அந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பியது குறித்து ராசா, ‘’பட்டியலினத்தவரை மிகவும் கீழ் சாதியினராக நினைப்பவர்கள், அவர்களுக்கு இருப்பது போலவே சிறப்புச் சட்டம் வேண்டும் என்பதைக் கேட்டு சிரிக்கத்தான் தோன்றுகிறது. எல்லா சமூகத்தினரைப் போலவே பிராமண சமுகமும் எந்த பிரச்னையும் இல்லாமல் இங்கே வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு ஏதோ நாளும் அநீதி இழைக்கப்படுவதாகவும், அவர்கள் மீது வன்முறை கட்டவிழ்ந்து விடப்பட்டு ஒடுக்கப்படுவதாகவும் கூறி பொய்யான தோற்றத்தைக் கட்டமைக்க ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்’’ என்கிறார்.
பிராமண சமூகத்தினருக்கு எதிராக எந்த சிறு வன்முறையும் தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டுகளில் நடைபெறவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்புக்கான சட்டத்தை நீர்த்துப் போக வைப்பதற்காகவோ அல்லது தங்கள் சமூகம் மோசமாகப் பாதிக்கப்படுவது போல ஒரு தோற்றத்தை உருவாக்கவோ திட்டமிடுகிறார்கள் என்பது அப்பட்டமாகவே வெளிப்பட்டிருக்கிறது’’ என்கிறார்.
திடீரென்று இப்படி ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பது, ‘’சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வரும் தமிழ் மண்ணில் சமூக அமைதியைக் குலைக்க, ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் அவதூறு பிரசாரத்தை மேற்கொண்டு பீதியைக் கிளப்புவது உள்நோக்கம் கொண்டது’’ என்கிறார் ஆ.ராசா.