
ஒரு கட்டத்திற்கு மேல் ஆத்திரமடைந்த வைகோ, ஊடகவியலாளர்களை அடிக்கச் சொன்னதாகவும், அவர் அடிக்க உத்தரவிட்டதன் பேரில் மதிமுகவினர் ஊடகவியலாளர்களை அடித்து விரட்டியதில் காயமடைந்த ஊடகவியலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிமுக நிர்வாகிகள் அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தனியார் திருமணம் மண்டபத்தில் நேற்று நடந்த மதிமுக நெல்லை மண்டல செயல் வீரர்கள் கூட்டத்தில் வைகோ பேசும்போது தொண்டர்களில் முக்கால்வாசிப்பேர் எழுந்து சென்றுவிட்டனர். இதனால் அரங்கில் காலி சேர்களே காட்சி அளித்தன. அந்த அரங்கத்தில் கீழ் தளத்திலும் பால்கனியிலும் காலி சேர்களே இருந்தன.

கூட்டம் ஆரம்பிக்கும்போது இருந்த தொண்டர்கள், வைகோ பேசிக் கொண்டிருக்கும் போது வெளியேறுவதை ஊடகத்தினர் படம் பிடித்தனர். இதில் ஆத்திரமடைந்த வைகோ, ’’உள்ளே போய் உட்காரப்போறீங்களா? இல்லையா? இல்லேன்னா வீட்டுக்கு போங்க’’ என்று சத்தம் போட்டார். தொண்டர்கள் அதை காதில் வாங்கவே இல்லை.
அப்போது காலி சேர்களை படம் பிடித்தவர்களைப் பார்த்து, ’’காலி சேர்களை எதுக்கு படம் எடுக்குறீங்க?காலி சேர்களை எடுப்பதற்கு காலிப்பயல் தாண்டா வருவான்’’என்று ஆவேசப்பட்டார்.

அடுத்து நிர்வாகிகளைப் பார்த்து, ‘’அந்த கேமராவை புடுங்கி பிலிம் ரோலை உருவுங்க’’ என்று ஆவேப்பட்டார் வைகோ. பிலிம் ரோல் காலம் எல்லாம் மலையேறிப் போய்விட்டது என்பது வைகோவுக்கு இன்னும் தெரியவில்லையா? இல்லை, ஆத்திரத்தில் என்ன சொல்வது என்று தெரியாமல் சொல்லிவிட்டாரா? என்று தெரியவில்லை.
வைகோ சொன்னபிறகு ஊடகவியலாளர்களின் கேமராவை மதிமுக தொண்டர்கள் சென்று பிடுங்க, அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஊடகவியலாளர்களை மதிமுகவினர் சரமாரியாக தாக்கினர். அதன்பின்னர் காவலுக்கு நின்றிருந்த போலீசார் வந்து ஊடகவியலாளர்களை அழைத்து சென்றனர்.

வைகோதான் தங்களை அடிக்கச் சொன்னதாகவும், அதற்கு ஆதாரம் இருக்கிறது என்றும் சொல்லி காவல்நிலையம் சென்று புகாரளித்தனர் ஊடகவியலாளர்கள். மதிமுகவினர் தாக்குதலில் காயமடைந்த ஊடகவியலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக நிர்வாகிகள் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு உயர்சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் சாத்தூரில் நேற்று நடந்த இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் துரைவைகோ. அதில், ‘’மதிமுகவின் 31 ஆண்டுகால வரலாற்றில் தொண்டர்கள் இவ்வாறு செய்தியாளர்களிடம் நடந்து கொண்டதில்லை. இதற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.