அண்ணாமலை மீதான அதிருப்தியினால் பாஜகவில் இருந்து விலகி கடந்த 2023ஆம் ஆண்டில் மார்ச் மாதம் 5ம் தேதி அன்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் பாஜக ஐடி பிரிவு செயலாளர் நிர்மல்குமார்.
தற்போது அவர் அதிமுக தலைமையின் மீது ஏற்பட்ட அதிருப்தியினால் அதிமுகவில் இருந்து விலகி விஜய் முன்னிலையில் இன்று தவெகவில் இணைந்துள்ளார். அவருக்கு தவெக துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கி இருக்கிறார் விஜய்.
முன்னதாக அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து அதிமுக சின்னம், எடப்பாடி பழனிசாமி பற்றிய வாசகங்கள், போட்டோக்களை நீக்கினார்.
தவெகவின் பனையூர் இல்லத்திற்கு சென்றபோது, நிர்மல்குமாரின் காரில் அதிமுக கொடி இல்லாமல் இருந்தது.
பிரசாந்த் கிஷோரின் IPAC நிறுவனத்துடன் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்காக தேர்தல் பணிகள் செய்த போது அந்தக்குழுவில் இருந்தவர் ஆதவ் அர்ஜூனா. லாட்டர் அதிபர் மார்ட்டின் மருமகனான ஆதவ், பிரசாந்த் கிஷோர் தேர்தல் பணிகளை முடித்துக்கொண்டு சென்ற பின்னரும் கூட திமுகவுக்கான வேலைகளை தொடர்ந்திருந்தார் ஆதவ்.
பின்னர் அவர் விசிகவுக்கு வேலை செய்து வந்தார். அதற்காக அவருக்கு கட்சியின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. விசிகவில் நிறைய களப்பணிகளைச் செய்து வந்தாலும் அவர் பேசிய அரசியல் அக்கட்சிக்குள் பெரும் புயலை வீசியது. இதனால் அவர் விசிகவில் இருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து ஜனவரி 31ஆம் தேதி அன்று ஆதவ் அதிமுகவில் இணைகிறார் என்றும், உதயநிதி ஸ்டாலின் திமுகவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இருப்பதால், அவர் வகிப்பது மாதிரியே அதிமுகவிலும் தனக்கு பொறுப்பு வேண்டும் என்று கேட்க, பழனிசாமியும் அதற்கு கிரீன் சிக்னல் கொடுக்க, ஆதவ்க்கு அதிமுகவில் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு பொறுப்பாளர் பதவி வழங்கப்பட உள்ளது என்றும் தகவல் பரவியது.
ஜனவரி 31ஆம் தேதி அன்று ஆதவ் அதிமுகவில் இணைய உள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் அவர் தவெகவில் இணையச் சென்றிருக்கிறார். தவெகவில் அவருக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்.
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு பிரசாந்த் கிஷோர் தேர்தல் பணிகள் பார்க்க இருக்கிறார். இதற்காக அவருக்கு 240 கோடி ரூபாய் பேசப்பட்டிருக்கிறது. பிரசாந்த் கிஷோரை அதிமுகவுக்குள் கொண்டு வந்ததே லாட்டரி அதிபர் மார்ட்டின் தான் என்று கூறப்படுகிறது. அப்படி இருக்கும்போது ஆதவ் அர்ஜூனா ஏன் அதிமுகவில் இணையாமல் தவெகவில் இணைகிறார். பழனிசாமியுடனான பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
விசிகவில் கட்சி தலைமையை மீறி பல விசயங்களில் மூக்கை நுழைத்தது மாதிரியே அதிமுகவில் பேச்சுவார்த்தையிலேயே தலைமைக்கு அதிருப்தி தரும்படியாக வார்த்தைகள் விட்டிருக்கிறார் ஆதவ். இதில் எரிச்சல் அடைந்த எடப்பாடி, இதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்று முடிவெடுத்து, நிர்வாகிகளிடம் சத்தம் போட, ஆதவ் அதிமுகவில் இணையும் பேச்சுவார்த்தை பாதியிலேயே முடிந்தது என்கிறார்கள்.
அதிமுகவின் ஐடி பிரிவு இணைச்செயலாளராக இருந்து வந்தாலும் பாஜகவில் இருந்தது போன்று தனக்கு அதிகாரம் இல்லை என்று ஆரம்பத்தில் இருந்தே அதிருப்தியில் இருந்து வந்த நிர்மல்குமார், பிரசாந்த் கிஷோர் அதிகவுக்கு தேர்தல் பணிகள் செய்ய வருவது குறித்து எடப்பாடியுடன் பேசியபோது சில கருத்து மோதல்கள் ஏற்பட, எடப்பாடி போட்ட சத்தத்தில் நிர்மல்குமாரும் விஜய்யை தேடி வந்திருக்கிறார்.
இத்தனை காலமும் அமைதியாக இருந்த தவெக ஒரே நாளில் அடுத்தடுத்த அதிரடி சரவெடிகளை வெடித்து வருகிறது.
yd4g46