
என் வாழ்க்கையின் ஒளி என்று புது வாழ்க்கைத் துணை கெனிஷாவை வர்ணித்திருந்தார் நடிகர் ரவி மோகன். அந்த ஒளிதான் தனக்கும் தன் குழந்தைகளுக்கும் இருளைத்தந்தது என்று வேதனைடன் சொல்லி இருக்கிறார் ஆர்த்தி ரவி.
ஆர்த்தியை ரவி விவகாரத்து செய்வதாக அறிவித்ததில் இருந்து ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றனர். தங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தையும் கூறி வருகின்றனர். ஆர்த்தியின் தாய் சுஜாதா விஜயகுமாரும் மாப்பிள்ளை ரவியை மகனாக பாவிக்கிறேன் என்றும் கூறி நீண்டதொரு விளக்கத்தினை அளித்திருந்தார்.
ஆர்த்தியை விட்டு தான் பிரிந்ததற்கு காரணம் தோல்வி, பணப்பிரச்சனை என்று சொல்லி இருந்தார் ரவி. அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், தங்கள் விவாகரத்திற்கு காரணம் என்ன? என்பதை தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்று, கடைசியாக ஒருமுறை பேச வேண்டிய அவசியம் இருக்கிறது என்று சொல்லி விளக்கத்தினை வெளியிட்டுள்ளார் ஆர்த்தி.

அதில், ‘’கண்ணியமாக இருப்பவர்களுக்கு இங்கே இடமில்லை. நாடகம் ஆடுபவர்களுக்குத்தான் இங்கே எல்லாம் கிடைக்கிறது.
விவாகரத்து விவகாரத்தில் என்ன சூழ்ச்சிகள் நடந்தது என்பதை ஒருமுறை எல்லோருக்கும் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். கடைசியாக ஒருமுறை இதைப்பற்றி பேசுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.
பணம், அதிகாரம், கட்டுப்பாடு இதெல்லாம் எங்கள் பிரிவுக்கு காரணமில்லை. மூன்றாவதாக வந்த ஒரு நபர்தான் முழுக்க முழுக்க காரணம்.
உங்கள் ( ரவி) வாழ்க்கையின் ஒளிதான் எங்களுக்கு இருளைத் தந்தது. இதுதான் உண்மை.
இத்தனை நாள் சம்பாதித்தும் வெறும் காலுடன் வீட்டை விட்டு வெளியேறியதாகச் சொல்கிறார் ரவி. அது உண்மையில்லை. அவர் விருப்பப்பட்டு எல்லா வசதிகளுடன் தான் வெளியேறினார்.
விவாகரத்துக்கு முன்னரே அந்தப்பெண்ணுடன் ரவி இருக்கும் போட்டோ ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. விருப்பமில்லாத வாழ்க்கை என்றால் குடும்ப விழாக்களில் எல்லாம் எப்படி சந்தோசமாக கழித்தார்?

அந்தப்பெண்ணுடன் ரகசியமாக உறவு வைத்திருப்பதை ஒரு கட்டத்திற்கு மேல் மறைக்க முடியாது என்பது தெரிந்த நேரத்தில் அவர் என் மீது அபாண்டமாக பழி சுமத்தி விட்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதுதான் உண்மை.
என் பிடியில் இருந்து தப்பித்ததாகச் சொல்கிறார். அது உண்மை என்றால் நேரடியாக அவர் பெற்றோரின் பிடிக்குத்தானே செல்ல வேண்டும். மூன்றாவதாக ஒரு பெண்ணின் பிடிக்கு ஏன் மாறவேண்டும்? என் குடும்பத்திற்கு மோசமான விளைவுகளைத் தந்தவர் வீட்டின் கதவை ஏன் தட்டினார்?
அவர் விவாகரத்து செய்வதாக பிரிவதற்கு கடைசி நாள் வரையிலும் வழக்கம் போலவே காதலுடன் பேசி வந்தோம். என் மாமியார் உட்பட குடும்பத்தினர் அனைவருமே இதற்கு சாட்சியாக உள்ளார்கள்.
அவரை கட்டுப்படுத்தினேன் என்று சொல்கிறார். கணவர் மீது அக்கறை உள்ள எவருமே அவரின் உடல், மன நலத்தில் அக்கறை கொண்டு கவனிக்கத்தான் செய்வார்கள். அது தவறு என்றால் அப்படியே இருக்கட்டும். எந்த ஒரு அன்பான மனைவியும் அப்படித்தான் இருப்பாள்.’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.