தலைமை மீது கொண்ட அதிருப்தியினால் தேர்தல் தோல்விக்கு பிறகும் இன்னமும் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்காமலேயே இருந்து வரும் ஆற்றல் அசோக்குமார் தாய்க்கட்சியான பாஜகவுக்கு தாவ இருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது மாமியார் மூலமாக அண்ணாமலையிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் என்று தகவல்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார். ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த அசோக்குமார், ரூ.583 கோடிக்கு அதிபதி. டிப்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, டிப்ஸ் குளோபல் இன்ஸ்டிடியூட், தி இந்தியன் பப்ளிக் பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
10 ரூபாய்க்கு உணவு, 10 ரூபாய் மருத்துவம் போன்ற சமூக சேவைகளையும் செய்து வருகிறார். 100க்கும் மேற்பட்ட சீர்குலைந்த அரசுப்பள்ளிகளை தனது ’’ஆற்றல்’’ அறக்கட்டளை சார்பில் புனரமைத்துக் கொடுத்திருக்கிறார். கல்வி நிறுவனம் மற்றும் சமூக சேவை மூலம் ஈரோடு பகுதி மக்களிடையே நன்கு அறிமுகமானவர் ஆற்றல் அசோக்குமார். இவரது மாமியார் சரஸ்வதி மொடக்குறிச்சி பாஜக எம்.எல்.ஏ. ஆவார்.
ஆற்றல் அசோக்குமார் ஈரோடு தொகுதியில் போட்டியிடுகிறார் என்றதுமே பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்தது. அதற்கு தகுந்தமாதிரியே வாக்கு எண்ணிக்கையின் போது எடுத்ததுமே முன்னிலையில் இருந்தார். ஆனால், 5,62,339 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 3,25,773 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார் அசோக்குமார்.
தேர்தல் முடிவுகளுக்கு முன்னரே அதிமுக நிர்வாகிகளுடன் அசோக்குமாருக்கு மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அதிமுகவை விட்டு விலகியே இருந்திருக்கிறார்.
தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் மக்கள் மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக 10 ரூபாய் உணவகம், மலிவு விலை மருந்தகம் போன்றவற்றை ஒவ்வொன்றாக மூடி வருகிறார்.
அதிமுக தலைமை வரைக்கும் பகைத்துக்கொண்டு, தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமியையும் இதுவரைக்கும் சந்திக்கவேயில்லை அசோக்குமார். இந்த நிலையில் இதற்கு மேலும் அதிமுகவில் இருந்தால் தனக்கு எதிர்காலம் இருக்காது என்பதை உணர்ந்து தனது தொழில்களை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார் அசோக்குமார்.
தொழில்களை விரிவுபடுத்துவதற்கு உதவிகள் தேவைப்படுவதால் தாய்க்கட்சியான பாஜகவுக்கு தாவிவிடலாம் என்று முடிவெடுத்து அதற்கான முயற்சிகளை எல்லாம் எடுத்து வருகிறார் அசோக்குமார் என்று தகவல். இதற்காக, தனது மாமியாரும் மொடக்குறிச்சி பாஜக எம்.எல்.ஏவுமான சரஸ்வதி மூலமாக அண்ணாமலையிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று தகவல்.