
விபத்துகள் எதிர்பாராமல் நடப்பவை. அவை அலட்சியத்தின் காரணமாக நடக்கும்போது மக்களுக்கு கோபமும் ஆத்திரமும் வருவது இயல்பு. கடலூர் அருகே ரயில்வே கேட் மூடப்படாததால், அதனை கடக்க முயன்ற பள்ளி வாகனம், அங்கு விரைந்து வந்த ரயிலில் மோதி, சுக்குநூறானதில் வாகனத்தில் இருந்த 3 மாணவ-மாணவியர் அநியாயமாகப் பலியாகியிருக்கிறார்கள். வேன் ஓட்டுநர் உள்பட பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஒடிசா, மேற்குவங்கம் எனத் தொடர்ச்சியாக அண்மைக்காலத்தில் பல ரயில் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. நெஞ்சைப் பதற வைத்த கடலூர் ரயில் விபத்து நடந்து, உயிர்ப்பலிகள் பற்றிய செய்தி வெளியான நிலையில், “பள்ளி வாகனத்தின் டிரைவர்தான், ஸ்கூலுக்கு லேட்டாச்சு என்று அவசரப்படுத்தி, கேட்டை திறக்கச் சொன்னார். அதனால் கேட் கீப்பர் திறந்துவிட்டார். விபத்து ஏற்பட்டு விட்டது” என்ற தகவல் பரவியது. அதாவது, ரயில்வே கேட்கீப்பர் சரியாக இருந்ததாகவும், பள்ளி வாகனத்தின் ஓட்டுநர்தான் குழந்தைகளின் மரணத்திற்கு காரணம் என்பது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டது.
விபத்து நடந்தபோது அந்தப் பகுதியிலிருந்த மக்களோ, “கேட் மூடப்படவேயில்லை. கேட்கீப்பர் வடமாநிலத்துக்காரர். அவருக்குத் தமிழ் தெரியாது. அத்துடன், இரவு நேர டூட்டிக்காரரான அவர், குடித்துவிட்டுப் படுத்துக் கிடந்திருக்கிறார். காலையில் வரவேண்டிய கேட்கீப்பரும் வரவில்லை. திறந்திருந்த கேட் வழியே பள்ளிவாகனம் போனபோது, ரயில் மோதி இப்படியொரு கொடுமை நடந்துவிட்டது” என்று துயரத்துடன் தெரிவித்தனர்.
அடிபட்டு சிகிச்சையில் இருந்த ஓட்டுநரும், மாணவர் ஒருவரும், “கேட் திறந்துதான் இருந்தது” என்பதையும், “வாகனத்தின் மீது ரயில் மோதியபிறகும் கேட்கீப்பர் வரவில்லை” என்பதையும் வாக்குமூலகமாகத் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், கேட்கீப்பர் அதாவது ரயில்வே நிர்வாகம் சார்ந்த பணியாளரின் தவறுதான் இது என்பதை எல்லாரும் தெரிந்துகொண்ட வேளையில், ரயில்வே அதிகாரி வெளியிட்ட அறிக்கையில், “அந்தப் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க மாவட்ட கலெக்டரிடம் அனுமதி கேட்டிருந்தோம். அவர் இதுவரை அனுமதி தரவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார். இது அரசியல்ரீதியான விவாதமாகவும் குற்றச்சாட்டாகவும் முன்வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் கேட்கீப்பர்களுடனான ரயில்வே கேட்கள், ஆளில்லாத லெவல் கிராசிங்குகள் ஆகியவை உண்டு. ஆளில்லா லெவல் கிராசிங்குகளைக் கடக்கும்போது ஆபத்து அதிகம். மிகுந்த கவனம் தேவைப்படும். இது பற்றிய தொடர் வலியுறுத்தலையடுத்து, ஆளில்லா லெவல் கிராசிங்குகள் படிப்படியாகக் குறைந்து போயின. ஆனால், கேட்கீப்பருடனான ரயில்வே கேட்கள் இன்னும் தொடர்கின்றன. பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டும், சில இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டும், ரயில்வேகேட்டை நேரடியாக கடக்க வேண்டிய அவசியம் தவிர்க்கப்பட்டிருந்தாலும், மாநகராட்சியாகிவிட்ட கடலூர், புதுக்கோட்டை, யூனியன் பிரதேசமான புதுச்சேரி போன்ற முக்கிய ஊர்களில் ரயில்வே கேட்கள் இப்போதும் பயன்பாட்டில் உள்ளன.
மெட்ரோ ரயில் திட்டம், இரட்டைப் பாதைத் திட்டம் போன்றவற்றிற்கு மத்திய அரசு அனுமதி தரவில்லை என மாநில அரசு தொடர்ந்து சொல்லி வரும் நிலையில், சுரங்கப்பாதை அமைக்க மாநில அரசின் கலெக்டர் அனுமதி தரவில்லை என மத்திய அரசின் ரயில்வே அதிகாரி தெரிவித்திருக்கிறார். இது ரயில்வே செய்த தவறை மறைக்கவும், திசை திருப்பவுமான குற்றச்சாட்டாகும். சுரங்கப்பாதை அமைக்க அனுமதி தராவிட்டால், ரயில்வே கேட்டை மூடக்கூடாது என்று ரயில்வேயில் சட்டம் இருக்கிறதா? எப்போது சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கி முடியும்வரை ரயில்வே கேட் குறித்த நேரத்தில் மூடி, திறக்கப்படவேண்டும். அதுதான் மக்கள் நலனில் அக்கறையுள்ள நிர்வாகத்தின் செயல்பாடாக இருக்க முடியும்.
கடலூரில் இது ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை, யார் அதற்கு பொறுப்பு, பிஞ்சுகள் பலியானக் கொடுமையால் தவிக்கும் பெற்றோருக்கும் குடும்பத்திற்கும் என்ன ஆறுதல் என்று சிந்திக்கக்கூடியவர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவார்கள். இதயமற்றவர்கள்தான் பிறர் மீது பழி போடுவார்கள்.
இந்தியாவின் பெருமைக்குரியதும் மிகப் பெரியதுமான பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயை தனியாருக்குத் தாரை வார்க்கும் வகையில் ஒவ்வொரு திட்டமாக செயல்படுத்தி வருகிறது மத்திய பா.ஜ.க அரசு. அதில் ஒன்று, ரயில்வே கேட்களில் நிரந்தரப் பணியாளர்களாக கேட் கீப்பர்களை நியமிக்காமல், அவற்றை கான்ட்ராக்ட் முறையில் விட்டு, ஒப்பந்தக்காரர்களால் கேட் கீப்பர்கள் நியமிக்கப்படும் நடைமுறையும் வந்துவிட்டது. ஒப்பந்தக்காரர்கள் குறைந்த ஊதியத்தில் ஆட்களை எடுக்கும்போது, தமிழ் தெரியாத வடமாநிலத்தவர் இந்த வேலைக்கும் வருவது தவிர்க்கமுடியாத ஒன்றாக இருக்கிறது.
ரயில்வேயை தனியார்மயமாக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளின் மோசமான விளைவுதான், மூன்று சிறார்களின் உயிரைப்பறித்த கடலூர் ரயில் மோதல்.