பிரபல இயக்குநர் ‘சிறுத்தை’சிவாவின் தம்பி பாலா. இவர் தமிழில் அன்பு படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பி.வாசு இயக்கத்தில் காதல் கிசுகிசு படத்திலும், அம்மா அப்பா செல்லம், கலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்தார். அஜித்தின் வீரம் படத்தில் அவரது தம்பியாக நடித்திருந்தார். ரஜினியின் அண்ணாத்த படத்திலும் நடித்திருந்தார்.
மலையாள திரையுலகிற்கும் சென்று அங்கேயே தங்கி இருந்து படங்களில் நடித்து வரும் பாலா, பாடகி அம்ருதாவை திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவரை விவாகரத்து செய்துவிட்டு 2021ல் எலிசபெத் என்கிற மருத்துவரை திருமணம் செய்துகொண்டார்.
உடல் நலப்பிரச்சனையால் தீவிர சிகிச்சையில் இருந்த பாலா அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இந்நிலையில் தனக்கும் அம்ருதாவுக்கும் பிறந்த மகள் அவந்திகாவுக்கு தற்போது 12 வயது ஆகிறது என்பதை உணர்ந்து , அவர் மீதுள்ள பாசத்தில், ஒரு வீடியோவை வெளியிட்டார் பாலா.
அந்த வீடியோ வைரலாகிய நிலையில், அதற்கு பதிலளித்து ஒரு வீடியோவை வெளியிட்டார் அவந்திகா. அதில், ‘’என்னை அதிகம் நேசிப்பதாகவும், எனக்கு அதிகம் பரிசுப்பொருட்கள் வாங்கித் தருவதாகவும் சொல்லி இருக்கிறார் என் தந்தை. அதில் உண்மை இல்லை. என் தந்தை மீது எனக்கு பாசம் வருவதற்கு ஒரு நிகழ்வு கூட இல்லை. குடித்துவிட்டு என்னையும் அம்மாவையும் அவர் டார்ச்சர் செய்ததுதான் நினைவுக்கு வருகிறது. என் மீது உண்மையிலேயே பாசம் இருந்தால் என் வாழ்க்கையில் குறுக்கிடாதீர்கள்’’ என்று கூறியிருக்கிறார்.
இதற்கு பாலா, ‘’என்னை அப்பா என்று அழைத்ததற்காக நன்றி. மூன்று வயது குழந்தையாக நீ இருந்தபோது நான் உன் மீது பாட்டிலை வீச முயன்றேன் என்றும், ஐந்து நாட்கள் பட்டினி போட்டேன் என்றும் சொல்கிறாய். உன்னுடன் வாக்குவாதம் செய்தால் வெல்லலாம். மகளுடன் வாக்குவாதம் செய்தால் அவன் மனிதனே இல்லை. இனிமேல் உன் வாழ்க்கையில் குறுக்கிட மாட்டேன். நீ நன்றாக படித்து வளர வேண்டும். வாழ்த்துக்கள் மகளே..’ என்று வீடியோ பதிவை போட்டிருக்கிறார். வைரலாகி வருகிறது அந்த வீடுயோ.